
கோவையில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தில் மழை நீர் தேங்கியது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
மேம்பாலத்தில் ஏறும் பகுதியில் மழை நீர் தேங்கியிருக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவில் ஆங்கிலத்தில் கோயமுத்தூர், பெரியநாயக்கன்பாளையம் பாலம் என்று எழுதப்பட்டுள்ளது.
நிலைத் தகவலில், “திமுக காரங்க கோவில் கட்டி தான் கும்பிடணும் இவங்கள தற்குறி சொல்றதா இல்ல கூமுட்டை சொல்றதா எனக்கு தெரியல கோவையில் கட்டப்பட்ட புதிய மேம்பாலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்குதோ இல்லையோ நிச்சயமாக மழைநீர் சேகரிக்க உதவுகிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கோவையில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தில் மழை நீர்த் தேங்கியது என்று வீடியோவை பலரும் பதிவிட்டு, தமிழ்நாடு அரசை விமர்சித்து வருகின்றனர். கோவையில் புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலம் என்றால் அது ஜி.டி.நாயுடு மேம்பாலம் தான். ஆனால், வீடியோவில் பெரியநாயக்கன்பாளையம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கோவையில் கட்டப்பட்ட புதிய பாலம் என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம் சமீபத்தில் திறக்கப்பட்ட ஜி.டி.நாயுடு மேம்பாலத்தைத்தான் கூறுகிறார்கள் என்று தெரிகிறது. எனவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
முதலில் இந்த வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது கடந்த சில மாதங்களாக இந்த மேம்பாலத்தில் மழை நீர் தேங்கிய வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. இது தொடர்பான செய்திகளைப் பார்த்தோம், தேசிய நெடுஞ்சாலையில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் சார்பில் கட்டப்பட்டு சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட பெரிய நாயக்கன் பாளையம் மேம்பாலத்தில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியுற்றதாக கூறப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: kamadenu.in I Archive
இந்த பாலம் தொடர்பாக தொடர்ந்து தேடினோம். அப்போது, 2024 மார்ச் 11ம் தேதி மத்திய அரசின் செய்தி விளம்பரப் பிரிவான pib வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பு ஒன்று நமக்கு கிடைத்தது. அதில், “நாகப்பட்டினம், கூடலூர்-மைசூர் சாலையில், பெரிய நாயக்கன் பாளையம்- கோவைப் புறநகர்ப் பகுதியில் ரூ.99 கோடி செலவில் 1.76 கி.மீ. தூரத்திற்குக் கட்டப்பட்ட மேம்பாலத்தையும் பிரதமர் தொடங்கிவைத்தார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: pib.gov.in I Archive I pib.gov.in I Archive
இதன் மூலம் இந்த பாலம் புதிதாக திறக்கப்பட்ட ஜிடி நாயுடு மேம்பாலம் இல்லை என்பதும், தமிழக அரசு கட்டிய பாலம் இல்லை என்பதும் உறுதியாகிறது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்ட கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் மழை நீர் தேங்கி நிற்கிறது என்பது போல் பரவும் வீடியோ நெடுஞ்சாலையில் உள்ள பெரிய நாயக்கன் பாளையம் பாலம் என்பதையும் இதை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார் என்பதையும் தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram
Title:கோவையில் திறக்கப்பட்ட புதிய மேம்பாலத்தில் மழை நீர் தேக்கம் என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False


