அல்லாஹூ அக்பர் என்று கோஷமிட்ட கல்லூரி மாணவி என்று பகிரப்படும் படங்கள் உண்மையா?

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

கர்நாடகாவில் தன்னை சூழ்ந்து ஜெய் ஶ்ரீராம் என்று கோஷம் எழுப்பிய மாணவர்களுக்கு எதிராக அல்லாஹூ அக்பர் என்று கோஷம் எழுப்பிய பெண்ணின் படங்கள் என்று சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

கர்நாடகாவில் புர்கா அணிந்து வந்த இஸ்லாமிய கல்லூரி மாணவி ஒருவரை ஏராளமான இந்து மாணவர்கள் சூழ்ந்து கொண்டு ஜெய் ஶ்ரீராம் கோஷம் எழுப்பினர். பதிலுக்கு அந்த பெண் அல்லாஹூ அக்பர் என்று கோஷமிட்டார். அப்படி புர்கா அணிந்து வந்த பெண் உண்மையில் ஜிஹாப், புர்கா எல்லாம் அணியாமல் போஸ் கொடுத்துள்ளார் என்று சில படங்கள் பகிரப்பட்டுள்ளன. இந்த படங்களை Siva PS என்ற நபர் 2022 பிப்ரவரி 9ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கர்நாடகாவில் பள்ளிக் கூடங்களுக்கு வர சீருடை கட்டாயம். இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப், புர்கா உள்ளிட்ட ஆடைகளை அணிய தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் போராட்டம் நடத்தினர். இஸ்லாமிய மாணவிகளுக்கு எதிராக இந்து மாணவர்கள் காவி துண்டு அணியும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்த சூழலில் கல்லூரிக்கு வந்த இஸ்லாமிய மாணவியைச் சூழ்ந்த இந்து மாணவர்கள் ஜெய் ஶ்ரீராம் என்று கோஷம் எழுப்பினர். பதிலுக்கு அந்த பெண் அல்லாஹூ அக்பர் என்று கோஷமிட்டார். இது செய்தி ஊடகங்கள், சமூக ஊடகங்களில் வைரல் ஆனது. இந்த நிலையில் அல்லாஹூ அக்பர் என்று கோஷம் எழுப்பிய பெண் உண்மையில் ஹிஜாப், புர்கா எல்லாம் அணிபவர் இல்லை… பிரச்னை செய்வதற்காக வேண்டுமென்றே புர்கா அணிந்து வந்தார் என்ற வகையில் சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். கர்நாடகாவின் ஜூலி என்று எல்லாம் விமர்சித்து வருகின்றனர். எனவே, புர்கா அணிந்த பெண்ணின் புகைப்படம்தானா என்று ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive I Facebook

முதலில் கர்நாடகாவில் அல்லாஹூ அக்பர் என்று கோஷம் எழுப்பிய பெண் யார் என்று பார்த்தோம். அவர் பெயர் பீபி முஷ்கன் கான் என்றும் அவர் மாண்டியாவில் படிப்பதும் தெரிந்தது. வேறு ஒரு பெண்ணின் புகைப்படத்தை பீபி முஷ்கன் கான் என்று குறிப்பிட்டு இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பி வருவதாகவும் செய்தி கிடைத்தது. தி பிரிண்ட் இணைய ஊடகத்தில் பீபி முஷ்கன் கானின் பேட்டி வெளியாகி இருந்தது. 

மேலும், சமூக ஊடகங்களில் Najma Nazeer Chikkanarale என்ற பெண்ணின் புகைப்படத்தைப் பலரும் பகிர்ந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன. இவர் கர்நாடக மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியில் தீவிர உறுப்பினராக உள்ளார். இந்த பெண்ணின் ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து படங்களை எடுத்து மாண்டியா கல்லூரியில் அல்லாஹூ அக்பர் என்று கோஷம் எழுப்பிய மாணவி என்று தவறாகக் குறிப்பிட்டு வறுத்தாக குறிப்பிட்டிருந்தனர். அந்த பெண்ணின் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்த்தோம். அதில் தன்னுடைய புகைப்படங்களை எடுத்து மார்ஃபிங் செய்து, பீபி முஷ்கன் கான் என்று தவறான தகவல் சேர்த்து இந்துத்துவ அமைப்புகள் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றன என்று அவர் பதிவிட்டிருந்தார். 

இது தொடர்பாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தரப்பில் இருந்து மாணவி நஜ்மா நசீரைத் தொடர்புகொண்டு பேசினோம். அப்போது அவர், “மாண்டியா பிஇஎஸ் கல்லூரியில் அல்லாஹூ அக்பர் என்று கோஷம் எழுப்பிய பெண் நான் இல்லை. நான் கர்நாடக மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் கண்காணிப்பு கமிட்டி உறுப்பினராக உள்ளேன். குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காக முன்பு போராட்டங்களில் பங்கேற்றுள்ளேன். தற்போது நடந்து வரும் ஹிஜாப் அணியும் போராட்டத்திலும் பங்கேற்றுள்ளேன்.  

ஆனால், அல்லாஹூ அக்பர் என்று கோஷம் எழுப்பிய பெண் என்று குறிப்பிட்டு, என்னுடைய படங்களை மார்ஃபிங் செய்து தவாறான தகவல் சேர்த்து பலரும் பகிர்ந்து வருகின்றனர். என்னுடைய படங்களைப் பயன்படுத்த என்னிடம் யாரும் அனுமதி பெறவில்லை. இதனால் என்னுடைய அரசியல் வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் என்னுடைய புகைப்படங்களை வைத்துப் பரவும் பதிவுகள் அனைத்தும் தவறானவை” என்று கூறினார்.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களைத் தேடி எடுத்தோம். magicpin.in என்ற இணையதளத்தில் இருந்து அந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருந்தன. டாமினோஸ் பீசா மற்றும் பர்கர் கிங்-கில் எடுக்கப்பட்ட படங்கள் 2020ம் ஆண்டு பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தன. பதிவிடப்பட்டிருந்தவர் பெயர் நஜ்மா நசீர் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் ஃபேக்ட் கிரஸண்டோ ஆங்கிலத்தில் வெளியான கட்டுரையில் மாண்டியா மாணவியின் புகைப்படம் என்று பரவும் ஒரு புகைப்படம் மார்ஃபிங் செய்யப்பட்டது என்றும் குறிப்பிட்டிருந்தனர். இதன் மூலம் கர்நாடக மாநிலத்தில் அல்லாஹூ அக்பர் என்று கோஷம் எழுப்பிய பெண், உண்மையில் ஹிஜாப், புர்கா எல்லாம் அணிபவர் இல்லை, பிரச்னை கிளப்ப வேண்டும் என்பதற்காக புர்கா அணிந்து வந்தார் என்று பகிரப்படும் பதிவுகள் தவறானவை என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

கர்நாடக கல்லூரியில் அல்லாஹூ அக்பர் என்று கோஷம் எழுப்பிய பெண்ணின் உண்மையான தோற்றம் என்று பகிரப்படும் படங்கள் அவருடையது இல்லை என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:அல்லாஹூ அக்பர் என்று கோஷமிட்ட கல்லூரி மாணவி என்று பகிரப்படும் படங்கள் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False