
நாம் தமிழர் கட்சியினர் தி.மு.க அரசு வழங்கும் பொங்கல் பரிசை வாங்க மாட்டார்கள் என்று சீமான் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
2021 நவம்பர் 17ம் தேதி சீமான் புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டுடன், தமிழ் திரைப்பட காட்சியை இணைத்து புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. நியூஸ் கார்டு பகுதியில், “உண்மையான நாம் தமிழர் கட்சி தம்பிகள் யாரும் திமுக அரசின் பொங்கல் பரிசை வாங்க மாட்டார்கள். பத்திரிகையாளர் சந்திப்பில் நாம் தமிழர் கட்சி சீமான் பேட்டி” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பதிவை பா. உதயகுமார் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நவர் 2021 நவம்பர் 18ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சமீபத்தில் அளித்த எந்த ஒரு போட்டியிலும் பொங்கல் பரிசை வாங்கக் கூடாது என்று கூறவில்லை. அப்படி கூறியிருந்தால் அது தொடர்பான செய்தி, வீடியோ வெளியாகி இருக்கும். அப்படி எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை.
மேலும், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு உண்மையானது இல்லை. அதன் தமிழ் ஃபாண்ட், டிசைன் எல்லாம் இது போலியானது என்பதை உறுதி செய்தன. யாரோ விஷமத்தனமாக சீமான் பெயரில் போலியான கருத்தைப் பகிர்ந்திருப்பது தெரிகிறது. ஆதாரங்கள் அடிப்படையில் இந்த நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதி செய்வதற்கான ஆய்வை நடத்தினோம்.
முதலில் புதிய தலைமுறையின் ஃபேஸ்புக் பக்கத்துக்கு சென்று 2021 நவம்பர் 17ம் தேதி வெளியான நியூஸ் கார்டுகளை ஆய்வு செய்தோம். அதில் சீமான் தொடர்பான எந்த நியூஸ் கார்டும் இல்லை. மேலும், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டுக்கும், தற்போது புதிய தலைமுறை வெளியிடும் நியூஸ் கார்டுக்கும் இடையே நிறைய வித்தியாசம் இருப்பதை காண முடிந்தது. குறிப்பாக ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டில் உள்ள விளம்பரம், தற்போதைய நியூஸ் கார்டுகளில் இல்லை. ஏதோ, பழைய நியூஸ் கார்டை எடுத்து எடிட் செய்து, தேதியை மாற்றி வெளியிட்டிருப்பது தெரியவந்தது.
இந்த நியூஸ் கார்டு குறித்து புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு நிர்வாகியைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவரும் இது போலியான நியூஸ் கார்டு என்று உறுதி செய்தார்.
புதிய தலைமுறை வெளியிட்ட உண்மையான நியூஸ் கார்டை தேடினோம். பல கீ வார்த்தைகள், ரிசர்ஸ் இமேஜ் தேடலுக்குப் பிறகு சீமான் புகைப்படத்துடன் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது போன்ற புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டு நமக்கு கிடைத்தது. 2020ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி அந்த நியூஸ் கார்டை புதிய தலைமுறை வெளியிட்டிருந்தது. அதில், “உடும்பஞ்சோலை வனப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அல்ல என வெளியான அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும்” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடுத்து எடிட் செய்து வெளியிட்டிருப்பது இதன் மூலம் உறுதியாகிறது.

அசல் பதிவைக் காண: Facebook
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் பரிசை நாம் தமிழர் கட்சியினர் வாங்கக் கூடாது என்று சீமான் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
நாம் தமிழர் கட்சியினர் தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் பரிசை வாங்கக் கூடாது என்று சீமான் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:நாம் தமிழர் கட்சியினர் பொங்கல் பரிசு வாங்க மாட்டார்கள் என்று சீமான் கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False
