
வாக்குத் திருட்டு என்று பொய்யான தகவலை கூறியதால் ராகுல் காந்தியை பீகார் மக்கள் விரட்டியடித்தார்கள் என்று ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
கார் ஒன்றை பொது மக்கள் விரட்டியடிக்கும் வீடியோவை வைத்து ஒருவர் பேசிய வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், ராகுல் காந்தியை ஓட ஓட விரட்டி அடித்த மக்கள். பீகார் பேரணியில் திடீர் பரபரப்பு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. வீடியோவை வெளியிட்டிருந்த அந்த நபர், “பீகார் மக்களின் வாக்குகளை பாஜக திருடிவிட்டது என்று தவறான தகவலை அளித்த ராகுல் காந்தியை பீகார் மக்கள் விரட்டி அடித்தார்கள்” என்று பெரிய விளக்கம் அளித்திருந்தார்.
நிலைத்தகவலில், “பப்பு ராகுல் காந்தியை நம்பி போன நம்ம தத்தி முதல்வருக்கு பீகார் மக்கள் கொடுத்த சரியான சாட்டையடி..!” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பீகாரில் லட்சக்கணக்கான வாக்காளர்களை திடீரென்று வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கியதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தார். இதைத் தொடர்ந்து பீகாரில் பேரணி நடத்தி வருகிறார். இதில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்றார். இந்த நிலையில், தவறான தகவலை அளித்ததாக கூறி ராகுல் காந்தியை பீகார் மக்கள் விரட்டியடித்தார்கள் என்று ஒரு வீடியோவை சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
ராகுல் காந்திக்கு பீகாரில் எதிர்ப்பு கிளம்பியதாக எந்த ஒரு செய்தியும் இல்லை. உண்மையில் ராகுல் காந்திக்கு பீகார் மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தால் அது பாஜக ஆதரவு ஊடகங்களில் மிகப்பெரிய செய்தியாக வெளியாகி இருக்கும். ஆனால், அப்படி ஒரு சிறு துளி செய்தி கூட நமக்கு கிடைக்கவில்லை. வீடியோ காட்சியை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம்.
அப்போது, பீகார் தலைநகர் பாட்னாவில் சிறுவர்கள் கொலை செய்யப்பட்டதாக கூறி பொது மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது சுகாதாரத் துறை அமைச்சர் மங்கல் பாண்டேவின் காரை விரட்டி தாக்கியதாக செய்திகள் நமக்கு கிடைத்தன. பாட்னாவில் காரில் இரண்டு குழந்தைகள் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கொலை செய்தவர்களை கண்டுபிடித்து தண்டனை அளிக்க பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் வன்முறையாக மாறியது. காவல்துறை வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதாக செய்திகள் நமக்கு கிடைத்தன.
தீவிர வலதுசாரி ஆதரவு ஊடகமான ரிபப்ளிக் டிவி-யின் யூடியூப் பக்கத்திலேயே கூட இந்த வீடியோவை பதிவிட்டிருந்தனர். அதில், “பீகாரின் செல்வாக்குமிக்க அமைச்சர் மங்கல்பாண்டேவும் அவரது பாதுகாவலர்களும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளத் தப்பி ஓடினர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கூட இந்த வீடியோவை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டு, பீகார் அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இவை எல்லாம் ராகுல் காந்தியை விரட்டிய பீகார் மக்கள் என்று பரவும் தகவல் தவறானது என்பதை உறுதி செய்தன.
முடிவு:
பீகார் அமைச்சரை மக்கள் விரட்டிய வீடியோவை ராகுல் காந்தியை விரட்டிய மக்கள் என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:ராகுல் காந்தியை விரட்டிய பீகார் மக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
