
கரூரில் நடந்த தவெக பிரசார கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கிய ஒருவருக்கு பெண் காவலர் ஒருவர் முதலுதவி அளித்த காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
பெண் காவலர் ஒருவர் இளைஞர் ஒருவருக்கு வாயில் காற்றை ஊதி முதலுதவி அளித்த வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியயோவில் “காவலர் இருந்தாலும் அவளும் ஒரு தாய் தானே கடைசி வரைக்கும் மூச்சு கொடுத்து உயிர் கொடுக்க போராடும் தேவதைந்க சாக இருந்த இளைஞனை மூச்சு ககொடுத்து கடைசி வரைக்கும் அந்த இளைஞன் கண் திறக்கவில்லை” என்று இருந்தது. நிலைத் தகவலில். “காவலராக இருந்தாலும் தாயுள்ளம் கொண்ட சகோதரி…🥲 #கரூர்கூட்டநெரிசல்பலி ” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கரூரில் தவெக நடத்திய பிரசார கூட்டத்தில் பங்கேற்ற 41 பேர் நெரிசல் காரணமாக உயிரிழந்தனர். இந்த நிலையில் தமிழ்நாடு காவல்துறை சார்பில் கூட்டத்திற்கு சரியான பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது. இந்த நிலையில் கூட்டத்தில் சிக்கி மயங்கிய ஒருவருக்கு தமிழகக் காவல்துறையைச் சார்ந்த பெண் காவலர் ஒருவர் முதலுதவி வழங்கினார் என்று வீடியோவை சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த வீடியோ காட்சியைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோ கடந்த ஜூலை மாதத்திலிருந்து சமூக ஊடகங்களில் மற்றும் செய்தி ஊடகங்களில் வெளியாகி இருந்ததைக் காண முடிந்தது. abplive இந்தியில் வெளியிட்டிருந்த செய்தியை மொழிமாற்றம் செய்து பார்த்தோம்.

உண்மைப் பதிவைக் காண: abplive.com I Archive
அதில், பீகாரில் ஆரா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலராக பணியாற்றி வந்த பெண்மணியின் 15 வயது மகன் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. மகன் உயிரிழந்ததை ஏற்க மறுத்த தாய், இறந்த சிறுவனின் உடலுக்கு முதலுதவி செய்து, எப்படியாவது உயிர் பிழைக்க வைத்துவிட முடியாதா என்று முயற்சி செய்த செயல் பார்த்தவர்களைக் கண் கலங்கச் செய்தது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் மூலம் கரூரில் தவெக கூட்ட நெரிசலில் சிக்கிய இளைஞருக்குத் தமிழ்நாடு காவல்துறை பெண் காவலர் முதலுதவி அளித்தார் என்று பரவும் வீடியோ பீகாரைச் சார்ந்தது என்று உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
பீகாரில் இறந்த தன் மகனுக்கு முதலுதவி அளித்து உயிர்கொடுக்க பெண் காவலர் ஒருவர் முயற்சி மேற்கொண்டபோது எடுக்கப்பட்ட வீடியோவை கரூரில் தவெக கூட்டத்தின் போது எடுக்கப்பட்டது என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:கரூர் தவெக கூட்டத்தில் மயங்கியவருக்கு பெண் காவலர் செய்த முதலுதவி என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
