
அயோத்தி ராமர் கோவிலை மோடி திறந்து வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஜோதிர் மடத்தின் சங்கராச்சாரியார் பாஜக குண்டர்களால் தாக்கப்பட்டார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ஜோதிர் மடம் சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்தா சிலரால் தாக்கப்படும் வீடியோவை ஜனவரி 13, 2024 அன்று ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர். ராமர் கோவில் கோரியதால் போலீசாரால் தாக்குதலுக்கு ஆளானவர் ஜோதிர்மட சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஷ்வரானந்தா. இன்று சாஸ்திரம் தான் எல்லாவற்றுக்கும் மேல் என்று கூறியதால் சிலரால் அவமரியாதைக்குள்ளாகப்படுகிறார்” என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
நிலைத் தகவலில், “ராமர் கோயில் கட்டுமான பணி முடிவடையாமல் மோடி திறந்து வைப்பது தவறு என்று விமர்ச்சித்த ஜோதிர்மய சங்கராச்சாரியார் அவர்கள் பாஜக குண்டர்களால் தாக்கப்படும் காட்சி..
இவனுங்களா இந்துக்களுக்கு போய்டுறானுங்க..” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
அயோத்தியில் ஜனவரி 22, 2024 அன்று ராமர் கோவில் குடமுழுக்கு நடைபெற உள்ளதையொட்டி சமூக ஊடகங்களில் பல தகவல்கள் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்தார் என்பதால் சங்கராச்சாரியார் தாக்கப்பட்டார் என்று பலரும் பரப்பி வருகின்றனர். ஆனால் வீடியோவிலே அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்று போராடி தடியடி தாக்குதலுக்கு ஆளான சங்கராச்சாரியார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த இரண்டு தகவலும் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
கூகுளில் சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்தா, போலீஸ் தடியடி, தாக்குதல் என்று சில அடிப்படை வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். அப்போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவை எட்டு ஆண்டுகளுக்கு முன்பு முன்னணி ஊடகங்கள் பலரும் தங்கள் யூடியூப் பக்கத்தில் பதிவிட்டிருந்தது தெரிந்தது. அதை பார்த்தோம்.
ஆஜ்தக் ஊடகம் வெளியிட்டிருந்த வீடியோவில் உத்தரப்பிரதேசம் வாரணாசியில் கங்கையில் தடையை மீறி விநாயகர் சிலையைக் கரைக்கச் சென்றவர்கள் மீது போலீஸ் தடியடி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக வெளியான செய்திகளைத் தேடி எடுத்தோம்.
2023 செப்டம்பர் 23ம் தேதி வெளியான செய்தி ஒன்றில், “நீர் மாசு அடைவதைத் தடுக்க கங்கை ஆற்றில் விநாயகர் சிலைகளை கரைக்க 2013ம் ஆண்டு அலகாபாத் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்த நிலையில் 2015ம் ஆண்டு தடையை மீறி ஆற்றில் விநாயகர் சிலையைக் கரைக்க 1000க்கும் மேற்பட்டவர்கள் அவிமுக்தேஷ்வரானந்தா தலைமையில் சென்றனர். அவர்களை போலீசார் தடியடி கலைத்தனர். தாக்குதலுக்கு ஆளான அவிமுக்தேஷ்வரானந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் மூலம் அயோத்தியில் ராமர் சிலை கட்ட வேண்டும் என்ற கோரிக்கைக்காகப் போராட்டம் நடத்திய சங்கராச்சாரியார் மீது போலீசார் தாக்குதல் நடத்தினர் என்று குறிப்பிடப்பட்ட தகவல் தவறானது என்று தெளிவானது. அதே போல், 8 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தின் வீடியோவை எடுத்துவந்து, மோடி ஆதரவாளர்களால் சங்கராச்சாரியார் தாக்கப்பட்டார் என்ற வதந்தி உருவாக்கப்பட்டுள்ளது என்பதும் தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்த சங்கராச்சாரியார் மீது தாக்குதல் நடத்திய பாஜக-வினர் என்று பரவும் வீடியோ 2015ல் வாரணாசியில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:ஜோதிர் மட சங்கராச்சாரியார் பாஜக குண்டர்களால் தாக்கப்பட்டாரா?
Written By: Chendur PandianResult: False
