
நாடாளுமன்றத்தில் தன்னுடைய பேச்சின் போது குறுக்கிட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வாயை மூடிக்கொண்டு உட்காரும்படி மற்றும் பாஜக அமைச்சர்களைப் பார்த்து எதிர்க்கட்சி எம்.பி ஒருவர் கூறியதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
சதாப்தி ராய் என்ற திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி நாடாளுமன்றத்தில் பேசிய வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அவரது பேச்சின் போது அமித்ஷா குறுக்கிட்டது போலவும், வாயை மூடும்படி திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி கூறியதாகவும், இதனால் பேச முடியாமல் அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டவர்கள் அமர்ந்திருப்பது போலவும் வீடியோ உள்ளது.
நிலைத் தகவலில், “வாய மூடிக்கிட்டு உட்காருடா நாயே. பண ஒழிப்பில் கருப்பு பணம் ஒழிந்ததா? தீவிரவாதம் -அதை ஒடுக்க முடிந்ததா?
டபுள் இன்ஜின் சர்க்கார் டெல்லியில் எப்படி குண்டு வெடித்தது யார் வைத்தது? பங்களாதேஷிக்கள் நுழைந்ததாக சொன்ன பீகாரில் நீங்க தானடா ஜெயிச்சீங்க பிஞ்ச செருப்படி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
நாடாளுமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சதாப்தி ராய் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டவர்களை நேரடியாக எதிர்த்து, அவர்களை வாயை மூடி உட்காரும்படி துணிச்சலாக பேசினார் என்று பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். பொதுவாக உறுப்பினர் பேசும் போது, அமைச்சர்கள் குறுக்கிட்டு பதில் அளிக்க உரிமை உள்ளது. அப்படி இருக்க அமித்ஷா எப்படி பேசாமல் அமர்ந்தார் என்ற கேள்வி எழுந்தது.
மேலும், எம்.பி-க்கள் ஆக்ரோஷமாக பேசிய வீடியோக்களை எடுத்து, மோடி, அமித்ஷா உள்ளிட்டவர்களின் பழைய வீடியோக்களை சேர்த்து, பதில் அளிக்கத் திணறினார்கள் என்று சமூக ஊடகங்களில் பரப்புவது தொடர்ந்துகொண்டே இருக்கிறது. எனவே, இந்த வீடியோவும் அந்த வகையைச் சார்ந்ததாக இருக்கலாம் என்பதால் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டோம்.
நாடாளுமன்ற உறுப்பினர் சதாப்தியின் பேச்சை தேடி எடுத்தோம். திரிணாமுல் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அவரது முழு பேச்சும் வெளியாகி இருந்தது. அதில், தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக அவர் பேசியிருப்பது தெரிந்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று அவர் பேசியதாக இல்லை. பீகாரில் எந்த கட்சியும் வெற்றிபெறவில்லை, தேர்தல் ஆணையம் வென்றது என்று அவர் குறிப்பிட்டிருந்தார். “ஒரு சில பணக்காரர்கள் பணக்காரர்களாகி வருகிறார்கள். பயங்கரவாதிகளை ஏன் உங்களால் தடுக்க முடியவில்லை? சைபர் குற்றங்களை ஏன் உங்களால் தடுக்க முடியவில்லை? மக்களுக்கு ஏன் வேலை கிடைக்கவில்லை” என்றெல்லாம் வரிசையாக அவர் கேள்வி எழுப்பினார். அதை சற்று மாற்றி குறிப்பிட்டிருக்கலாம் என்று தெரிந்தது.
அமித்ஷாவை மிரட்டி அமர வைத்தாரா என்று அறிய அந்த வீடியோவை நாடாளுமன்ற இணையதள பக்கத்தில் தேடி எடுத்தோம். டிசம்பர் 10, 2025 அன்று அவர் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான விவாதத்தில் பங்கேற்றுப் பேசியதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. வீடியோவின் 6வது நிமிடத்தில் ஆளுங்கட்சி உறுப்பினர்களைப் பார்த்து “சுப், சுப், சுப்” (வாயை மூடுங்கள்) என்று அவர் கூறுவதைக் காண முடிந்தது. வாயை மூடிக்கொண்டு உட்காருடா நாயே என்று அவர் கூறாததை எல்லாம் சேர்த்து விஷமத்தனமாக பதிவிட்டிருப்பது தெரிந்தது. அதேபோல், ஆளுங்கட்சி பக்கம் அமித்ஷா அமர்ந்திருந்ததாக எந்த தகவலும் இல்லை. முழு வீடியோவையும் பார்த்தோம். ஆளுங்கட்சி தரப்பை அந்த வீடியோவில் அவர்கள் காட்டவே இல்லை. எனவே, இந்த வீடியோ எடிட் செய்யப்பட்டது என்பது தெளிவானது.
இதை உறுதிசெய்துகொள்ள, நரேந்திர மோடி, அமித்ஷா இடம் பெற்ற காட்சிகள் எப்போது எடுக்கப்பட்டன என்பதை அறிய ஆய்வைத் தொடர்ந்தோம். அமித்ஷாவின் வீடியோ காட்சியை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது 2025 ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி அமித்ஷா ஒரு விவாதத்தின் போது காங்கிரஸ் கட்சியினரை விமர்சித்துப் பேசிய காட்சி அது என்பது தெரியவந்தது. அதாவது, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி பேசியதற்கு கிட்டத்தட்ட மூன்றரை மாதங்களுக்கு முன்பு அமித்ஷா பேசிய வீடியோ வெளியாகி இருந்தது.
அடுத்ததாக பிரதமர் நரேந்திர மோடியின் வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம். நம்முடைய ஆய்வில் அது இம்மாத தொடக்கத்தில், நாடாளுமன்றத்தில் 2026 பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது. அந்த வீடியோவும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் மோடி இடம் பெற்ற காட்சியும் துல்லியமாக ஒத்துப்போனது. இதன் மூலம் 2026 பட்ஜெட் உரையின் போது நாடாளுமன்றத்தில் மோடி அமர்ந்திருந்த வீடியோவை பயன்படுத்தி தவறான வீடியோ உருவாக்கப்பட்டிருப்பது உறுதியானது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதியாகிறது.
முடிவு:
அமித்ஷாவை வாயை மூடிக்கொண்டு அமரும்படி எதிர்க்கட்சி எம்.பி ஆக்ரோஷமாக பேசியதாக பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
FacebookI X PostI Google News ChannelI Instagram
Title:நாடாளுமன்றத்தில் அமித்ஷாவை வாயை மூடி உட்காரும்படி கூறினாரா எதிர்க்கட்சி எம்.பி?
Fact Check By: Chendur PandianResult: Altered


