தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று தி.மு.க-வைச் சேர்ந்த எ.வ.வேலு கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு புகைப்படத்துடன் நியூஸ்7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், "எ.வ.வேலு திருவண்ணாமலை கூட்டத்தில் ஆவேசம். ஒரு சாதியினருக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்குவது.. எந்த விதத்தில் நியாயம்.! திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம்!" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த பதிவை Anna Goundar என்பவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் 2021 மார்ச் 19 அன்று பதிவிட்டிருந்தார். இதைப் போல பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தி.மு.க தேர்தல் அறிக்கையில் வன்னியருக்கு வழங்கப்பட்ட உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று அறிவித்ததாக, முன்னாள் அமைச்சர் பொன்முடி வன்னியர் உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று உறுதி அளித்ததாக தொடர்ந்து சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. ஏன் இப்படி வதந்தியைத் தொடர்ந்து பரப்பி வருகின்றனர் என்ற அரசியலுக்குள் நாம் செல்லவில்லை.

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திருவண்ணாமலையில் நடந்த கூட்டத்தில் எ.வ.வேலு, "தி.மு.க ஆட்சிக்கு வந்தால் வன்னியர் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம்" என்று கூறியதாக நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு வெளியிட்டதாக சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். எனவே, இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

இந்த நியூஸ் கார்டை பார்க்க நியூஸ் 7 தமிழ் வெளியிடும் நியூஸ் கார்டு டிசைனுடன் ஒத்துப்போகவில்லை. தமிழ் ஃபாண்ட், பின்னணி டிசைன் என அனைத்தும் எடிட் செய்யப்பட்டது போலவே இருந்தது. இந்த நியூஸ் கார்டில் 2021 மார்ச் 18ம் தேதி வெளியானதாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது. எனவே, 2021 மார்ச் 18ல் வெளியான நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டுகளை ஆய்வு அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் செய்தோம். எ.வ.வேலு பேசியதாக எந்த ஒரு நியூஸ் கார்டும் இல்லை.

வன்னியருக்கு உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று தி.மு.க-வோ, தி.மு.க தரப்பில் முன்னணி நிர்வாகிகள் யாராவது பேசியுள்ளார்களா என்று தேடினோம். ஆனால் அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று ஸ்டாலின் கூறிய பழைய செய்திகள்தான் கிடைத்தன. எனவே, இது பற்றி அறிய தி.மு.க நிர்வாகி ஒருவரைத் தொடர்புகொண்டு பேசினோம். அதற்கு அவர், "இப்படி எல்லாம் யாராவது பேசுவார்களா... இது பொய் என்று உங்களுக்கே தெரியவில்லையா?" என்று பதில் கேள்வி எழுப்பினார்.

அசல் பதிவைக் காண: bbc.com I Archive 1 I kalaignarseithigal.com I Archive 2

இது குறித்து நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் டிஜிட்டல் பிரிவு நிர்வாகி சுகிதாவை தொடர்புகொண்டு கேட்டோம். இது போலியானது என்று அவர் உறுதி செய்தார். இதன் அடிப்படையில், "வன்னியர் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம்" என எ.வ.வேலு பேசியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

வன்னியர் உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என எ.வ.வேலு கூறினாரா?

Fact Check By: Chendur Pandian

Result: Altered