FactCheck: 2019ல் விஜயகாந்த் பற்றி வெளிவந்த செய்தி தற்போது மீண்டும் பரவுகிறது!
‘’கூட்டணி பேச்சுவார்த்தையின்போது சுயநினைவின்றி அமர்ந்திருந்த விஜயகாந்த்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
மேற்கண்ட செய்தியின் புகைப்படத்தை வாசகர் ஒருவர் நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தார்.
இதன்பேரில், நாம் ஃபேஸ்புக்கில் யாரேனும் இந்த தகவலை பகிர்ந்துள்ளனரா என்று தகவல் தேடினோம். அப்போது, சிலர் இதனை ஷேர் செய்து வருவதைக் கண்டோம்.
உண்மை அறிவோம்:
தமிழ்நாட்டில் தற்போது சட்டமன்ற தேர்தல் 2021 பிரசார பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ஏப்ரல் 6ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ள சூழலில், நாள்தோறும் புதுப்புது செய்திகள், சமூக வலைதளங்களில் பரவுகின்றன. அதிலும் குறிப்பாக, பழைய செய்திகளை புதியதுபோல பகிர்வதை, சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் கவனக்குறைவாகச் செய்து வருகின்றனர்.
அதில் ஒன்றுதான் மேற்கண்ட ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்ஆப்பில் பரவும் செய்தியும். ஆம், தற்போதைய 2021 சட்டமன்ற தேர்தலை பொறுத்த வரையிலும், அதிமுக கூட்டணியில் தேமுதிக இல்லை. சீட் பங்கீட்டில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தேமுதிக கூட்டணியில் இருந்து வெளியேறியதோடு, காரசாரமான விமர்சனங்களையும் அதிமுக மீது முன்வைத்ததை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
இதன்பின்னர், அமமுக உடன் தேமுதிக கூட்டணி வைப்பதாக, அறிவிப்பு வெளியானது.
உண்மை இப்படியிருக்கும் சூழலில், விஜயகாந்த் பற்றிய பழைய செய்தி ஒன்றின் ஸ்கிரின்ஷாட்டை சமூக வலைதளங்களில் பகிர்ந்து குழப்பம் ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்த புகைப்படம் 2019 மக்களவைத் தேர்தலின்போது, அதிமுக, தேமுதிக இடையே நடைபெற்ற கூட்டணி பங்கீடு தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பின்போது எடுக்கப்பட்டதாகும்.
அதுபற்றிய வீடியோ ஆதாரமும் கீழே தரப்பட்டுள்ளது.
அந்த செய்தியாளர்கள் சந்திப்பின் இறுதியில்தான், விஜயகாந்த் சுயநினைவின்றி அமர்ந்திருந்ததாகவும், அவரை அழைத்துச் செல்லும்படி, ஓபிஎஸ் கூறியதாகவும் செய்தி வெளியானது.
அப்போதே இதுபற்றி சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட ஒரு பதிவு ஒன்றின் லிங்கை கீழே இணைத்துள்ளோம்.
எனவே, பழைய செய்தியை புதியதுபோல பகிர்ந்து வருகிறார்கள் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
Title:2019ல் விஜயகாந்த் பற்றி வெளிவந்த செய்தி தற்போது மீண்டும் பரவுகிறது!
Fact Check By: Pankaj IyerResult: Missing Context