FACT CHECK: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஏன் பங்கேற்கவில்லை?- தியாகராஜன் பெயரில் பரவும் வதந்தி!

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

கொழுந்தியாள் மகள் பூப்புனித நீராட்டு விழாவில் பங்கேற்க இருப்பதால், டெல்லியில் நடைபெறும் ஜிஎஸ்டி கூட்டத்திற்கு செல்லவில்லை என்று நிதியமைச்சர் தியாகராஜன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

தமிழ்நாடு அரசின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “ஜிஎஸ்டி கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? எனது கொளுந்தியா மகள் பூப்புனித நீராட்டு விழாவில் நான் பங்கேற்க இருப்பதால் டெல்லியில் நடைபெறும் ஜிஎஸ்டி கூட்டத்திற்கு செல்லவில்லை – மதுரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்” என்று இருந்தது.

நிலைத் தகவலில், “கொழுந்தியா வீட்டில் சுபநிகழ்ச்சிகள் இருக்கும் நாளில் ஜிஎஸ்டி கூட்டத்தை நடத்த முடிவெடுத்த மத்திய அரசுக்கு கண்டனங்கள்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த பதிவை Ban PETA India என்ற ஃபேஸ்புக் பக்கம் 2021 செப்டம்பர் 18ம் தேதி பதிவிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஜிஎஸ்டி கூட்டம் லக்னோவில் நடந்தது. இதில் தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கவில்லை. அவருக்கு பதில் தமிழகத்தின் சார்பாக நிதி செயலாளரும் வணிக வரி ஆணையாளரும் கலந்துகொண்டனர். நிதியமைச்சர் சார்பில் எழுதி அளிக்கப்பட்ட அவருடைய கருத்துக்கள் அந்த கூட்டத்தில் வாசிக்கப்பட்டது. ஜிஎஸ்டி கூட்டம் தொடர்பாக தாமதமாகத் தகவல் தெரிவித்ததால் அதில் பங்கேற்கவில்லை என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருந்தார். 

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு தரப்பில் கூட்டத்தை புறக்கணித்தது போலவும், அவரை நையாண்டி செய்யும் வகையிலும், கொழுந்தியாள் மகள் பூப்புனித நீராட்டு விழாவுக்கு செல்ல இருப்பதால் ஜிஎஸ்டி கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாராஜன் கூறியதாக நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டு வருகிறது. இது உண்மை என்று கருதி ஏராளமானவர்கள் அதை தங்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மையில் நிதி அமைச்சர் தியாகராஜன் அப்படி கூறினாரா என்று பார்த்தோம். இது தொடர்பாக அவருடைய பேட்டி காணொளியைத் தேடினோம். புதிய தலைமுறையில் நிதியமைச்சர் தியாகராஜன் பேட்டி வெளியாகி இருந்தது. அதில், “ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்கத் தாமதமாக அழைப்பு அனுப்பப்பட்டது. அதை விடக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் மிகவும் தாமதமாக வழங்கப்பட்டது. அதற்குள்ளாக இங்கு சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாக வாக்குறுதி அளித்துவிட்டேன். இந்த பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்த உடன் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு போக வேண்டும். அதனால், எல்லாவற்றையும் சேர்த்து வைத்து முடிவெடுத்தோம்” என்று கூறியிருந்தார். கொழுந்தியாள் மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா என்று அவர் கூறவில்லை.

அடுத்ததாக நியூஸ் 7 தமிழ் இந்த நியூஸ் கார்டை வெளியிட்டதா என்று பார்த்தோம். கொழுந்தியாள் என்பதைத் தவறாக கொளுந்தியாள் என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும், இதில் பயன்படுத்தப்பட்ட தமிழ் ஃபாண்ட், நியூஸ் 7 தமிழ் பயன்படுத்தும் ஃபாண்ட் போல இல்லை. எனவே, இது போலியானது என்று தெரிந்தது.

இதை உறுதி செய்ய, செப்டம்பர் 17ம் தேதி நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட நியூஸ் கார்டுகளை பார்வையிட்டோம். அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்ற நியூஸ் கார்டு வெளியாகி இருப்பது கிடைத்தது. ஆனால் அதில், “தாமதமாக அழைப்பு வந்ததால் டெல்லியில் நடைபெறும் ஜிஎஸ்டி கூட்டத்திற்கு செல்லவில்லை – மதுரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடுத்து எடிட் செய்து வெளியிட்டிருப்பது தெரிந்தது.

அசல் பதிவைக் காண: Facebook 

இது குறித்து நியூஸ் 7 தமிழ் டிஜிட்டல் பிரிவு நிர்வாகி சுகிதாவை தொடர்புகொண்டு கேட்டோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார். 

Archive

நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இது தொடர்பாக கருத்து ஏதும் தெரிவித்துள்ளாரா என்று அவருடைய ட்விட்டர் பக்கத்தைப் பார்த்தோம். அப்போது, இது வடிகட்டிய முட்டாள் தனம் என்று குறிப்பிட்டு ட்வீட் வெளியிட்டிருப்பது தெரிந்தது.

Archive

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், கொழுந்தியாள் மகள் பூப்புனித நீராட்டு விழாவில் பங்கேற்க இருப்பதால் ஜிஎஸ்டி கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்று பழனிவேல் தியாகராஜன் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாக பரவும் மேற்கண்ட நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஏன் பங்கேற்கவில்லை?- தியாகராஜன் பெயரில் பரவும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian 

Result: Altered

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •