101 வயதில் குழந்தை பெற்ற பாட்டி? – ஃபேஸ்புக்கில் பரவும் விஷம பதிவு!

சமூகம் சர்வதேசம் மருத்துவம் I Medical

101 வயதில் பாட்டி ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளதாக வீடியோ மற்றும் பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Old Lady 2.png
Facebook LinkArchived Link

வயதான பாட்டி ஒருவர் கையில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், இத்தாலியைச் சார்ந்த 101 வயதான அனடொலியா வெர்ட்டெல்லா என்ற பெண்மணிக்கு 17வது குழந்தை பிறந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர். 

இந்த பதிவை நமது தமிழன் குரல் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2016 ஜூலை 25ம் தேதி வெளியிட்டுள்ளது. 

Old Lady 3.png
Youtube LinkArchived Link

அதேபோல், இந்த பாட்டி பற்றிய செய்தியுடன் புதிதாக யூடியூபில் வீடியோ வெளியாகி உள்ளது. ஒரு சில நாட்களிலேயே 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அந்த வீடியோவை பார்த்துள்ளனர். ஃபேஸ்புக்கிலும் அது பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை Tamil Bucket என்ற யூடியூப் பக்கம் வெளியிட்டுள்ளது. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம்.

உண்மை அறிவோம்:

சமீபத்தில் ஆந்திராவில் 74 வயதான பெண்மணிக்கு குழந்தை பிறந்தது. அவர்தான் முதுமையில் குழந்தைப் பெற்றவர்களில் அதிக வயதுடைய பெண் என்று அப்போது கூறப்பட்டது. இந்த நிலையில், ஃபேஸ்புக்கில் 101 வயது பாட்டிக்கு பிறந்த குழந்தை என்று ஒரு வீடியோ பகிரப்பட்டு இருந்தது. யூடியூப் வீடியோ லிங்கை எடுத்து ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தனர். அது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம்.

ndtv.comArchived Link

இது தொடர்பாக ஃபேஸ்புக்கில் தேடியபோது, சில ஆண்டுகளுக்கு முன்பு 101 வயதில் குழந்தை பெற்ற பெண் என்று பலரும் பதிவிட்டது தெரிந்தது. அவற்றையும் அடிப்படையாகக் கொண்டு ஆய்வைத் தொடங்கினோம்.

முதலில், 101 வயதான பெண்மணியின் படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, அந்த பாட்டி தொடர்பான பல செய்திகள் நமக்குக் கிடைத்தன. 

இத்தாலியைச் சார்ந்த 101 வயது பாட்டிக்கு கர்ப்பப்பை மாற்று அறுவைசிகிச்சைக்குப் பிறகு குழந்தை பிறந்தது என்று பலரும் இந்த படத்துடன் செய்தியை ஷேர் செய்திருந்தனர். world news daily report என்ற ஊடகம் இந்த செய்தியை வெளியிட்டிருந்தது தெரிந்தது. ஆனால், எப்போது வெளியானது என்று அதில் தேதி இல்லை. செய்தி ஊடகத்தின் பெயர் லோகோவில்  Where Facts don’t matter அதாவது உண்மை ஒரு பொருட்டே இல்லை என்று குறிப்பிட்டு இருந்தனர். இதன் மூலம் இந்த இணையதளம் வெளியிட்ட செய்தி என்பது முழுக்க முழுக்க பொய் என்பது உறுதியானது.

Old Lady 4.png
worldnewsdailyreport.comArchived Link

தொடர்ந்து தேடியபோது, ஏபிசிநியூஸ் என்ற நம்பகமான ஊடகம் வெளியிட்ட செய்தி நமக்கு கிடைத்தது. இதயத்தை நெகிழச்செய்யும் 101 வயது கொள்ளுப்பாட்டியின் மரணம் என்று தலைப்பிட்டு 2015ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி செய்தி வெளியிட்டிருந்தனர். அந்த செய்தியைப் படித்துப் பார்த்தோம். அமெரிக்காவைச் சேர்ந்த ரோஸா காம்ஃபில்ட் என்ற 101 வயதான பாட்டி தன்னுடைய கொள்ளு பேத்தியுடன் இருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரல் ஆகிவரும் நேரத்தில் அவர் மரணம் அடைந்துள்ளார். இந்த படத்தை அந்த பாட்டியின் பேத்தி சாரா ஹம் சமூக ஊடகத்தில் வெளியிட்டிருந்தார். பல தலைமுறைகள் என்று குறிப்பிட்டு வெளியிடப்பட்டிருந்த அந்த படம் லட்சக் கணக்கில் ஷேர் ஆகி இருந்தது. 

abcnews.go.comArchived Link

பாட்டியின் மரணம் குறித்து சாரா கூறுகையில், “என்னுடைய பாட்டி எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கக் கூடியவர். நிறையக் கதைகள் சொல்வார். என்னுடைய மகள் பிறந்து இரண்டு வாரங்கள் ஆனபோது இந்த படம் எடுக்கப்பட்டது. அன்றைக்குத்தான் பாட்டி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆக இருந்தார். அதுதான் சரியான தருணமாக இருக்கும் என்பதால் கொள்ளு பேத்தியைப் பார்க்க வைத்தோம்.  நாங்கள் வெளியிட்டிருந்த புகைப்படத் தொகுப்பில் ஐந்து தலைமுறையினர் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களும் அடக்கம்” என்று இருந்தது.

தொடர்ந்து தேடியபோது இந்த தகவல் தவறு என்று சில உண்மை கண்டறியும் ஆய்வுகள் நடந்திருப்பதும் தெரியவந்தது. அதில் ஏதாவது முக்கியமான தகவல் கிடைக்கிறதா என்று பார்த்தோம்.   அதில், world news daily report என்ற ஊடகம் தொடர்ந்து பொய்யான செய்திகளை வெளியிட்டு வருவதாகவும் அதில் ஒன்றுதான் 101 வயது பாட்டிக்கு 17வது குழந்தை பிறந்தது என்ற செய்தியும் என்று குறிப்பிட்டு இருந்தனர். 

snopes.comArchived Link

நம்முடைய ஆய்வில்,

சமீபத்தில் ஆந்திராவில் 74 வயதான பெண்மணி ஒருவருக்கு குழந்தை பிறந்திருப்பதுதான் உலகின் சாதனையாக கருதப்படுகிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

101 வயது பெண்மணிக்கு 17வது குழந்தை பிறந்தது என்று செய்தி வெளியிட்ட ஊடகம் பொய் செய்திகளை வெளியிட்டு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொள்ளுப்பேத்தியுடன் பாட்டி இருக்கும் புகைப்படத்தை எடுத்து தவறான கருத்தை சேர்த்து செய்தி வெளியிட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், 101 வயது பெண்மணிக்கு குழந்தை பிறந்தது என்ற தகவல் பொய்யானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:101 வயதில் குழந்தை பெற்ற பாட்டி? – ஃபேஸ்புக்கில் பரவும் விஷம பதிவு!

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •