FACT CHECK: சொந்த பயன்பாட்டுக்கான வாகனத்தை வாடகைக்கு விட்டால் கைது என்று சைலேந்திர பாபு உத்தரவிட்டாரா?

சமூக ஊடகம் சமூகம் தமிழ்நாடு

சொந்த பயன்பாட்டுக்காக உள்ள வாகனத்தை வாடகைக்கு விட்டால் உரிமையாளர் கைது செய்யப்படுவார் என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

சன் நியூஸ் தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “சொந்த பயன்பாட்டுக்காக உள்ள வாகனம் – சொந்த பயன்பாட்டுக்காக உள்ள வாகனத்தை வாடகைக்கு சென்றாள் வாகனத்தையும் வாகனத்தை இயக்கி வந்த ஓட்டுநரையும் கைது செய்யப்பட வேண்டும் டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Independent Taxi Driver என்ற ஃபேஸ்புக் பக்கம் 2021 ஆகஸ்ட் 2ம் தேதி பதிவிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சொந்த பயன்பாட்டுக்காக உள்ள வாகனங்களை வாடகைக்கு விடுவது சட்டத்திற்குப் புறம்பானது. இருப்பினும் நாடு முழுக்க சொந்த பயன்பாட்டுக்காக வாங்கப்படும் வாகனங்களை வாடகை டாக்சியாக பயன்படுத்துவது சர்வசாதாரண விஷயமாக உள்ளது. இந்த நிலையில் டிஜிபி சைலேந்திரபாபு இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்தார் என்று சன் நியூஸ் தொலைக்காட்சியில் நியூஸ் கார்டு வெளியானதாக பலரும் ஷேர் செய்து வருகின்றனர். இது பற்றி ஆய்வு செய்தோம்.

சமீபத்தில் டிஜிபி சைலேந்திரபாபு இப்படி ஒரு உத்தரவைப் பிறப்பித்ததாக எந்த செய்தியும் இல்லை. கூகுளில் தேடிப் பார்த்தபோது எந்த செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை. எனவே, இந்த நியூஸ் கார்டு உண்மையானதா என்று பார்த்தோம்.

இந்த நியூஸ் கார்டில் உள்ள தமிழ் ஃபாண்ட் கிட்டத்தட்ட சன் நியூஸ் பயன்படுத்தும் ஃபாண்ட் போலவே உள்ளது. இருப்பினும் பின்னணியில் காணப்படும் சூரியன் வாட்டர் மார்க் லோகோ இல்லை. எனவே, போலியானது என்பது நமக்கு தெரிந்தது. இதை உறுதி செய்ய சன் நியூஸ் வெளியிட்ட நியூஸ் கார்டுகளை பார்வையிட்டோம்.

அப்போது ஜூலை 30, 2021 அன்று சன் நியூஸ் தொலைக்காட்சியில் இதே போன்று நியூஸ் கார்டு வெளியாகி இருப்பது தெரியவந்தது. அதில், “பிறந்த நாள், திருமண நாளுக்கு விடுப்பு வழங்க வேண்டும்! காவலர்களுக்கு கட்டாய வார விடுமுறை அளிக்க வேண்டும்; வார ஓய்வு நாளில் விருப்பத்துடன் பணியாற்றும் காவலர்களுக்கு மிகைநேர ஊதியம் வழங்கப்பட வேண்டும்” டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடுத்து எடிட் செய்திருப்பது தெரியவந்தது.

இதை மேலும் உறுதி செய்துகொள்ள சன் நியூஸ் தொலைக்காட்சியின் டிஜிட்டல் பிரிவு நிர்வாகி மனோஜை தொடர்புகொண்டு கேட்டோம். அப்போது அவர் இது போலியானது என்பதை உறுதி செய்தார். இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு போலியானது என்பது உறுதியானது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

சொந்த பயன்பாட்டுக்கு வாங்கிய வாகனங்களை வாடகைக்கு விடுவது சரியா என்பது தொடர்பாக ஏதேனும் செய்தி கிடைக்கிறதா என்று பார்த்தோம். அப்போது, தி இந்துவில் வெளியான செய்தி ஒன்று நமக்கு கிடைத்தது. அதில் 60க்கும் மேற்பட்ட வாடகைக்கு விடப்பட்ட தனியார் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும், அனைத்திந்திய சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் நல சங்கத்தின் இணை செயலாளர் சி.பி.பாலாஜியின் பேட்டியையும் வெளியிட்டிருந்தனர். அதில், “தனியார் வாகனங்களுக்கு வாடகை வாகனங்களைக் காட்டிலும் சாலை வரி குறைவு. மேலும் பர்மிட் கட்டணமும் இல்லை. டி-போர்டு வாகனங்களுக்கு வசூலிக்கப்படுவதில் பாதிதான் இன்ஷூரன்ஸ் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் வாடகை வண்டி என்றால் ஒவ்வொரு ஆண்டும் ஃபிட்னெஸ் சர்டிஃபிகேட் எனப்படும் எஃப்.சி செய்ய வேண்டும். சொந்த பயன்பாட்டுக்கான வாகனம் என்றால் முதல் 15 ஆண்டுகளுக்கு எஃப்.சி தேவைப்படுவது இல்லை. எனவே, பலரும் தனியார் வாகனத்தை வாடகைக்கு விடுகின்றனர். இது தவறானது. விபத்து ஏற்பட்டால் பயணிகள் காப்பீடு பெற முடியாது” என்று கூறியிருந்தார்.

அசல் பதிவைக் காண: thehindu.com I Archive

முடிவு:

சொந்த பயன்பாட்டுக்காக வாங்கப்பட்ட வாகனங்களை வாடகைக்கு விட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன் உரிமையாளர் கைது செய்யப்படுவார் என டிஜிபி கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:சொந்த பயன்பாட்டுக்கான வாகனத்தை வாடகைக்கு விட்டால் கைது என்று சைலேந்திர பாபு உத்தரவிட்டாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False