ஆரணி சிறுவன் ஜீவசமாதி அடைந்தது உண்மையா? அதிர்ச்சி லைவ் வீடியோ

ஆன்மிகம் சமூக ஊடகம்

13 வயது சிறுவன் ஒருவன் ஜீவ சமாதி அடைந்ததாக சமூக ஊடகத்தில் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது. 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அதை பார்த்துள்ளனர். உண்மையில் சிறுவன் உயிருடன் ஜீவசமாதி செய்யப்பட்டது உண்மையா என்று ஆய்வை மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

???முகநூல் நண்பர்களே 13 வயது சிறுவன் ஜீவசமாதி மிக அருமையான காட்சி நேரடி ஒளிபரப்பாக இந்த வீடியோ எடுக்கப்பட்டது அன்பு நண்பர்கள் அனைவரும் இந்த சித்தர்கள் பற்றிய பார்த்துமகிழுங்கள் ஜீவசமாதி ஆனால் நாள் 16.04. 2019???

Archived link

13 வயதான சிறுவன் ஜீவசமாதி அடையும் வீடியோ ஃபேஸ்புக்கில் நேரலையாக ஒளிபரப்பாகிறது. இதைப் பார்த்து மகிழுங்கள் என்று பதிவிடப்பட்டு வீடியோ பகிரப்பட்டுள்ளது. அந்த பதிவில், கிணறு அமைக்கப் பயன்படும் வட்ட வடிவ சிமெண்ட் உறையின் உள்ளே, அமர்ந்த நிலையில் சிறுவன் ஒருவனைக் கொண்டுவந்து அமர வைக்கின்றனர். அவனுக்கு திருநீறு உள்ளிட்டவை பூசப்படுகிறது. பின்னர், கழுத்துவரை மண் போட்டு, தீப ஆராதனை காட்டி கிணற்றை மூடுகின்றனர். சிறுவன் எந்த அசைவுமின்றி இருக்கிறான்.

வீடியோவின் சிறுவனின் வயது 13 என்றும், வேலூரில் கடந்த ஏப்ரல் 16ம் தேதி இந்த நிகழ்வு நடந்தது என்றும் குறிப்பிட்டுள்ளனர். சிறுவன் ஜீவசமாதி அடைந்தது மிகப்பெரிய பாக்கியம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதனால், இந்த வீடியோவை 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஷேர் செய்துள்ளனர்.

உண்மை அறிவோம்:

இந்து மதத்தில்  ஜீவசமாதி அடைவது மிக முக்கியமான நிலையாகக் கருதப்படுகிறது. எல்லோராலும் ஜீவ சமாதி அடைய முடியாது. உலக நன்மைக்காக பல்வேறு காரியங்களைச் செய்தவர்கள், தியானம், விரதம், தவம் என கடுமையான மனநிலைகளைக் கடந்துதான் ஜீவசமாதி அடைய முடியும் என்கிறது இந்து மதம். உலக நன்மைக்காகவே அவர்கள் ஜீவசமாதி நிலையை அடைவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான தகவலைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Archived link

சமாதியடைவது என்பது முடிவு பெறும் ஒரு நிலையே அல்ல. இறைவனால் நியமிக்கப்பட்ட காரியங்களை ஒரு காலத்திற்குள் நடத்திக் காட்டிய பிறகு முக்தி அடைவதே ஆகும். ஆனால், அந்த ஞானியின் ஆற்றலும், அருளும் என்றுமே இந்த அண்டத்தில் நிலைத்திருக்கச் செய்துவிட்டு, இறைவனோடு இரண்டறக்கலக்கின்றனர். சமாதி நிலையில் இருப்பதும் யோகநெறியின் உச்சநிலை என உரைக்கப்படுகிறது. ஜீவசமாதி நிலையை அடைவது எப்படி, ஜீவசமாதி எப்படி நிகழ வேண்டும் என்று ஜீவசமாதிக்கான இலக்கணங்களைத் திருமூலம் வகுத்துள்ளார். இதுபற்றி படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Archived link

உண்மை இப்படி இருக்க, 13 வயது சிறுவன் ஜீவசமாதி அடைந்ததாக வீடியோ வைரல் ஆகி வருகிறது. சிறுவன் ஒருவனை கிணறு இறக்கப் பயன்படும் சிமெண்ட் உறையால் செய்யப்பட்ட குழிக்குள் வைத்து கழுத்து வரை மண்ணால் நிப்பி, சிமெண்ட் பலகையால் மூடும் காட்சிகள் நெஞ்சைப் பதைபதைக்கும் வகையில் உள்ளன. பலரும் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து, வீடியோவை நீக்க வேண்டும் என்று கமெண்ட் செய்திருந்தனர்.

உண்மையில் சிறுவன் உயிரோடு புதைக்கப்பட்டானா, இது குறித்து போலீசார் நடவடிக்கை ஏதும் எடுத்துள்ளனரா என்று ஆய்வை மேற்கொண்டோம். சிறுவன் ஜீவசமாதி அடைந்தது தொடர்பாக முதலில் கூகுளில் தேடினோம். நமக்கு பல செய்திகள் கிடைத்தன.

சிறுவன் ஏப்ரல் 16ம் தேதி ஜீவசமாதி அடைந்துவிட்டதாக, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ளது. உண்மையில், சிறுவன் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி கிணற்றில் விழுந்து இறந்துள்ளான்.

ஃபேஸ்புக் வீடியோவில் சிறுவன் வேலூரைச் சேர்ந்தவன் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், உண்மையில் அந்த சிறுவன் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள கண்ணமங்கலம் செண்பகத்தோப்பு ராமநாதபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவன்.

13 வயதான சிறுவன் தனநாராயணன் என்று வீடியோ மற்றும் பதிவில் குறிப்பிட்டு இருந்தனர். ஆனால், சிறுவனின் உண்மையான வயது 16. எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறான். வலிப்பு நோய் இருந்ததால் தொடர்ந்து படிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இவனது தந்தை அரிகிருஷ்ணன் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

உண்மையில், இந்த சிறுவன் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி கிணற்றில் தவறி விழுந்து இறந்துவிட்டான். 120 அடி ஆழ கிணற்றில் மிதந்த சிறுவனை தீயணைப்புத் துறையினர் மீட்டுள்ளனர். உடனடியாக, 108 ஆம்புலன்ஸ் சேவைக்கும் அழைத்துள்ளனர். அவர்கள் வந்து ஆய்வு செய்து பார்த்துவிட்டு சிறுவன் இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Archived link

சிறுவன் கிணற்றில் தவறி விழுந்ததாகவே அவனுடய உறவினர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், இந்த சிறுவனுக்கு ஆன்மிக நாட்டம் அதிகமாக இருந்தது என்று கூறப்படுகிறது. அருகில் இருந்த சாமியார் பழனி என்பவருடன் பழகி வந்திருக்கிறான். அவரிடம் தீட்சை பெற்றதாக கூறப்படுகிறது. அவரிடம், சிறுவன் தான் ஜீவ சமாதி அடைய என்ன வழி என்று கேட்டு இருக்கிறான். அவர் ஆலோசனையின் பேரிலேயே அவன் கிணற்றில் குதித்து ஜீவ ஜலசமாதி அடைந்ததாக அந்த சாமியார் பழனி தெரிவித்துள்ளார். இது தொடர்பான விபத்து மரணத்தை ஜலசமாதி ஆக்கிய லோக்கல் சாமியார் என்ற செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Archived link

சிறுவன் மரணம் தொடர்பாக சத்தவாசல் போலீல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சிறுவனின் தந்தை அரிகிருஷ்ணன் எழுத்துப்பூர்வமாக கேட்டுக்கொண்டதற்கு இணங்க பிரேத பரிசோதனை செய்யவில்லை. உடனடியாக அன்று இரவே, அதாவது மார்ச் 24ம் தேதியே, சிறுவனை அடக்கம் செய்துள்ளனர். அதை சாமியார் பழனி கூறியபடி ஜீவசமாதி முறையில் செய்துள்ளனர். போலிசில் புகார் அளித்தது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Archived link

சிறுவனின் உடல் அடக்கத்தை ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகத்தில் லைவ் ஆக ஒளிபரப்பியுள்ளனர். இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறுவனை உயிரோடு அடக்கம் செய்துவிட்டதாக குற்றச்சாட்டு எழ, சாமியார் பழனி மற்றும் அவரது உதவியாளர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Archived link

சிறுவன் உயிருடன் அடக்கம் செய்யப்பட்டானா என்று பல தரப்பில் இருந்தும் கேள்விகள் எழவே, சிறுவன் உடலை பிரேதப் பரிசோதனை செய்ய திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி உத்தரவிட்டார். இதன் படி ஏப்ரல் 22ம் தேதி சிறுவனின் உடல் வெளியே எடுக்கப்பட்டு அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்துள்ளனர். பின்னர், உடல் பழைய படியே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி கூறுகையில், “சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து இறந்துள்ளான். 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு துறையினர் அந்த சிறுவன் இறந்துவிட்டான் என்பதை உறுதி செய்துள்ளனர். ஆனால், ஜலசமாதி, ஜீவசமாதி அடைந்துவிட்டாக தவறான பரப்பப்படுகிறது. தவறான தகவலை இணையத்தில் பதிவிட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். இந்த நிகழ்வு தொடர்பாக மாலைமலர் வெளியிட்டுள்ள முழுமையான செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Archived link

சிறுவன் ஜீவசமாதி அடைந்த தகவல் தற்போது காட்டுத்தீ போல பரவிவிட்டது. பலரும் சமாதிக்கு வந்து வழிபட்டு செல்கின்றனர். வழிபட வருபவர்கள் வசதிக்காக, “அருள் மிகு தவராஜ பாலயோகி சிவானந்த பரமஹம்ச தனநாராயணர் சஜீவ சமாதி நிலையம் செல்லும் வழி” என்று போர்டு எல்லாம் வைத்துள்ளனர்.

புகைப்பட ஆதாரம்: மாலைமலர்

கைது நடவடிக்கை குறித்து கலெக்டரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துவிட்டனர். ஆனால், அவனை அடக்கம் செய்த போது அவன் உயிரோடு இருந்ததாக அவர்கள் நம்புகின்றனர். சிறுவனின் பெற்றோர், உறவினர்களின் நம்பிக்கை தொடர்பாக எந்த பிரச்னையும் இல்லை.

ஆனால், மருத்துவர்கள் ஆய்வு செய்து இறந்துவிட்டதாக அறிவித்த சிறுவனை, ஜீவசமாதி என்று உயிரோடு அடக்கம் செய்யப்பட்டதாக தவறான தகவல் பரப்புவதை மட்டும் அனுமதிக்க முடியாது. இதன் அடிப்படையிலேயே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார். இந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Archived link

நாம் மேற்கொண்ட ஆய்வின்படி,

1) சிறுவன் கிணற்றில் தவறி விழுந்துள்ளான்.

2) தீயணைப்புத் துறையினர் போராடி அந்த சிறுவன் உடலை கிணற்றில் இருந்த இறந்த நிலையில் மீட்டுள்ளனர்.

3) சம்பவ இடத்துக்கு வந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவக் குழுவினர், சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்து திரும்பியுள்ளனர்.

4) சிறுவன் இறந்தது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. ஆனால், சிறுவனின் தந்தையின் வேண்டுகோளுக்கு இணங்க பிரேத பரிசோதனை அப்போது செய்யப்படவில்லை.

5) இறந்த பிறகே சிறுவன் அடக்கம் செய்யப்பட்டதாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்துள்ளார்.

6) சிறுவனின் வயது 13 இல்லை. அவனுக்கு 16 வயது.

7) சிறுவன் ஏப்ரல் மாதம் ஜீவசமாதி அடையவில்லை. சம்பவம் நடந்தது மார்ச் 24ம் தேதி.

8) சிறுவன் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்று வீடியோ பதிவில் குறிப்பிடப்பட்டள்ளது. ஆனால், சிறுவன் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவன். வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த சாமியாரின் உபதேசங்களை கேட்டு வந்துள்ளான். அதனால், அவனுக்கு சாமியார் போல இறுதிச்சடங்கு செய்துள்ளனர்.

இந்த ஆதாரங்களின் அடிப்படையில், 13 வயது சிறுவன் ஏப்ரல் மாதம் 16ம் தேதி ஜீவசமாதி அடைந்ததாகக் கூறி தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளதாக, தெரியவருகிறது. ஏற்கனவே இறந்துவிட்ட சிறுவனை, ஜீவசமாதி முறைப்படி அடக்கம் செய்துள்ளனர். அதனையே வீடியோவாக எடுத்து பகிர்ந்துள்ளனர். எனவே இதை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

முடிவு:

உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள தகவல் தவறானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள் யாரும், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ என எதையும் உறுதிப்படுத்தாமல், மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Avatar

Title:ஆரணி சிறுவன் ஜீவசமாதி அடைந்தது உண்மையா? அதிர்ச்சி லைவ் வீடியோ

Fact Check By: Praveen Kumar 

Result: False