
நான் தினமும் கோமியம் குடிக்கிறேன், அதனால் எனக்கு கொரோனாத் தொற்று வரவில்லை என்று பேட்டி அளித்த பாரதிய ஜனதா கட்சி எம்.பி பிரக்யா சிங் தாக்கூருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
“நான் தினமும் பசுவின் சிறுநீரைக் குடிக்கிறேன், எனக்கு கோவிட் இல்லை என்று பா.ஜ.க எம்பி பிரக்யா சிங் தாக்கூர் பேட்டி” என மின்ட் இதழில் வெளியான செய்தி மற்றும் “சுவாசக் கோளாறு காரணமாக பாஜக எம்பி பிரக்யா தாக்கூர் மும்பை மருத்துவமனையில் அனுமதி” என்று இந்தியா டுடே வெளியிட்ட செய்தியை இணைத்து புகைப்பட பதிவு வெளியிடப்பட்டுள்ளது.
நிலைத் தகவலில், “”நான் தினமும் மாட்டு மூத்திரம் குடிக்கிறேன், அதனால் எனக்கு கொரோனா வராது” என சவடால் விட்ட பிஜேபி எம்.பி பிரக்யா சிங் தாக்கூருக்கு கோரோனா வந்தது மட்டுமில்ல! நேற்று முச்சு திணறல் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆக்சிஜன் கொடுப்பதாகச் செய்திகள் வெளியாகி உள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. இந்த பதிவை All India Congress committee friends என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Liyakath Ali என்பவர் மே 23, 2021 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பிரக்யா சிங் தாக்கூர் தான் தினமும் கோமியம் குடிக்கிறேன். அதனால் எனக்கு கொரோனா வராது என்று கூறியிருந்தார். இந்த நிலையில் சுவாசத் திணறல் காரணமாக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்தி ஒன்றை கொடுத்து பதிவிடப்பட்டுள்ளது. இந்தியா டுடே வெளியிட்ட செய்தி என்று குறிப்பிடப்பட்டு இருந்ததால் இது உண்மையாக இருக்கும் என்றே நம்பும் வகையில் இருந்தது.
பதிவை வெளியிட்டவர் நேற்று அதாவது பதிவு வெளியான மே 23, 2021க்கு முந்தைய நாள் (மே 22ம் தேதி) அவர் மும்பை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார் என்று குறிப்பிட்டிருந்தார். எனவே, இந்தியா டுடே வெளியிட்ட செய்தியை பார்த்தோம். இந்தியா டுடே இணையதளத்துக்கு சென்று செய்தியின் தலைப்பை டைப் செய்து தேடினோம். அப்போது, இந்த செய்தி 2021 மார்ச் 6ம் தேதி வெளியாகி இருப்பது தெரிந்தது.

அசல் பதிவைக் காண: indiatoday.in I Archive 1 I news18.com I Archive 2
அந்த செய்தியில், “மூச்சுத் திணறல் காரணமாக போபால் எம்.பி பிரக்யா சிங் தாக்கூர், மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த டிசம்பர் மாதம் அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சுத் திணறல் மற்றும் உயர் ரத்த அழுத்த பிரச்னை இருந்தது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என்பது தெரிந்தது. அவரது உடல் நிலை அவ்வப்போது பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

அசல் பதிவைக் காண: livemint.com I Archive
கோமியம் குடிப்பதால் தனக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று வெளியான செய்தி எப்போது என்று பார்த்தோம். அது மே 17, 2021 அன்று வெளியாகி இருந்தது. அதாவது, பிரக்யா சிங் தாக்கூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டரை மாதங்கள் ஆன நிலையில் இந்த செய்தி வெளியாகி இருப்பது தெரிந்தது. இதன் மூலம் மே மாதம் 22ம் தேதி பிரக்யா கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதியானது.
பிரக்யா சிங் தாக்கூர் கடந்த மார்ச் மாதம் மூச்சுத் திணறல் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியை எடுத்து, தற்போது கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது போல பகிர்ந்திருப்பது உறுதி செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில் கொரோனா தொற்று காரணமாக பிரக்யா சிங் தாக்கூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
பாஜக எம்.பி கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:பா.ஜ.க எம்.பி பிரக்யா தாக்கூர் கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா?
Fact Check By: Chendur PandianResult: Explainer
