
மோடிக்கு ஓட்டுப் போட வேண்டாம் என, மும்பை பங்குச்சந்தை வாரியம் கூறியதாக, ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். அதில், கிடைத்த விவரங்கள் இங்கே தொகுத்து தரப்பட்டுள்ளது.
தகவலின் விவரம்:
கடந்த ஏப்ரல் 18ம் தேதியன்று இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், மும்பை பங்குச்சந்தை வாரியமான BSE, பிரதமர் மோடிக்கு ஓட்டுப் போட வேண்டாம் எனக் கூறி, டிராக்கர் ஓட்டியதாகக் கூறப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரமாக, புகைப்படம் ஒன்றும் வெளியிட்டுள்ளனர். இது பார்ப்பதற்கு உண்மை போலவே இருப்பதால், பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மையா என்ற சந்தேகத்தில், கூகுளில் பதிவிட்டு, ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இதுதொடர்பான உண்மை புகைப்படம் கிடைத்தது. ஆம். மும்பை பங்குச்சந்தை வாரியம் பற்றிய விக்கிப்பீடியா சுயவிவரப் பக்கத்திலும், மும்பை பங்குச்சந்தை வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் மேற்கண்ட புகைப்படத்தின் உண்மையான மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த புகைப்படத்தை எடுத்து, மோடிக்கு எதிராக தவறாகச் சித்தரித்து, விஷமத்தனமாக வெளியிட்டுள்ளனர் என எடுத்த எடுப்பிலேயே, தெளிவாகிறது. ஆதார படங்கள் கீழே தரப்பட்டுள்ளன.


இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படம் தவறான ஒன்று என உறுதி செய்யப்படுகிறது. இதனை உரிய ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளோம். இதுதவிர, குறிப்பிட்ட புகைப்படத்தை பகிர்ந்த Abdul Wahab என்பவரின் விவரம் தேடி பார்த்தோம். அவரது ஃபேஸ்புக் பக்கம் முழுக்க, இஸ்லாம் சார்பான பதிவுகளும், பாஜக, மோடி எதிர்ப்பு பதிவுகளும் அதிகம் நிரம்பியுள்ளன. எனவே, இது தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காக சித்தரிக்கப்பட்ட புகைப்படம்தான் என சந்தேகமின்றி தெளிவாகிறது.
இறுதியாக, இந்த புகைப்படம் பற்றிய கூகுள் தேடலின்போது, ஒரு சுவாரசியமான செய்தி கிடைத்தது. அதையும் இங்கே பகிர விரும்புகிறோம். இவர்கள் பகிர்ந்துள்ள புகைப்படத்தை முதன்முதலாக, குணால் காம்ரா என்பவர் ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார் எனவும், இதன்பேரில் அப்போதே மும்பை பங்குச்சந்தை வாரியம் அதிகாரப்பூர்வ எச்சரிக்கை விடுத்திருந்த தகவலும் தெரியவந்தது.
குணால் காம்ரா வெளியிட்ட ட்விட்டர் பதிவு கீழே தரப்பட்டுள்ளது.
These photos are as real as Modiji’s promises… pic.twitter.com/zEBOUxyLKJ
— Kunal Kamra (@kunalkamra88) April 14, 2019
Archived Link
மும்பை பங்குச்சந்தை வாரியம் வெளியிட்ட எச்சரிக்கை விவரமும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு, தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இத்தகைய தவறான புகைப்படம், செய்தி மற்றும் வீடியோ போன்றவற்றை நமது வாசகர்கள் யாரும் சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் அளித்தால் உரிய சட்ட நடவடிக்கையை நீங்கள் சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Title:மோடிக்கு ஓட்டுப் போட வேண்டாம்: மும்பை பங்குச்சந்தை செய்தி உண்மையா?
Fact Check By: Parthiban SResult: False
