
நடிகை ஜோதிகா ஏப்ரல் 20ம் தேதி காலமானார் என்று விஷமிகள் வதந்தி பரப்பி வருகின்றனர். இதுபற்றி உண்மை நிலையை ஆய்வு செய்தோம்.
வதந்தியின் விவரம்:

நடிகை ஜோதிகா படத்துடன் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் பகிரப்பட்டுள்ளது. அதில், “நடிகை ஜோதிகா, ஏப்ரல் 20, 2020 அன்று இரவு இயற்கை எய்தினார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Venkatesh Mba என்பவர் 2020 ஏப்ரல் 21 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழகத்தில் தங்களுக்குப் பிடிக்காதவர்கள், தங்களுக்கு பிடிக்காத கருத்துக்களைக் கூறினால் அவர்கள் காலமாகிவிட்டதாக, கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் சமூக ஊடகங்களில் வெளியிடுவது வேதனையான ஒன்று.
சமீபத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ஜோதிகாவின் பேச்சு விஷமிகளால் திரித்து கூறப்பட்டது. தஞ்சாவூர் பெரிய கோவில் தேவையா என்று ஜோதிகா கேட்டதாக தவறாக திரித்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. சில இணையதள ஊடகங்கள் கூட ஜோதிகா பேசாததை எல்லாம் பேசியதாக குறிப்பிட்டு செய்தி வெளியிட்டு வருகின்றன.
குறிப்பாக, updatenews360.com என்ற இணைய ஊடகம் “தஞ்சை பெரிய கோவில் எதற்கு? அதை கட்டுவதற்கு பதிலாக இதை செய்திருக்கலாம் ஜோதிகாவின் தெனாவட்டு பேச்சு!” என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது. இதைப் பார்ப்பவர்கள் ஜோதிகா உண்மையில் அப்படி பேசியிருப்பார் என்றே கருதுவார்கள்.

முதலில் ஜோதிகா என்ன பேசினார் என்று பார்த்தோம். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. பா.ஜ.க-வைச் சேர்ந்தவரும் நடிகருமான எஸ்.வி.சேகர் கூட அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

பிரகதீஸ்வரர் ஆலயம் மிகவும் புகழ்பெற்றது, அழகாக இருக்கும். கண்டிப்பாக பார்க்க வேண்டும், பார்க்காமல் போய்விடாதீர்கள் என்று சொன்னார்கள். நான் ஏற்கெனவே பார்த்துள்ளேன். மிகவும் அழகாக உள்ளது. கிட்டத்தட்ட உதய்பூரில் உள்ள அரண்மனைகள் மாதிரி நன்கு பராமரித்து வருகிறார்கள்.
அடுத்த நாள் என்னுடைய படப்பிடிப்பு மருத்துவமனையில் இருந்தது. அது சரியாக பராமரிக்கப்படாமல் மோசமாக இருந்தது. நான் கண்டதை என் வாயால் சொல்ல முடியாது. எல்லோருக்கும் ஒரு கோரிக்கை.
‘ராட்சசி’படத்தில் இதை இயக்குநர் கௌதம் ராஜ் சொல்லியிருக்கிறார். கோயிலுக்காக அதிகம் காசு கொடுக்கிறீர்கள். வண்ணம் பூசி பராமரிக்கிறீர்கள். கோவில் உண்டியலில் அவ்வளவு காசு போடுகின்றீர்கள். தயவு செய்து அதே காசை பள்ளிகளுக்கு கொடுங்கள். மருத்துவமனைகளுக்குக் கொடுங்கள். இது மிகவும் முக்கியம். எனக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. அந்த மருத்துவமனையைப் பார்த்த பிறகு நான் கோவிலுக்குப் போகவில்லை. கோவிலைப் போல மருத்துவமனைகளும், பள்ளிகளும் முக்கியம். எனவே அவற்றுக்கும் நிதியுதவி செய்யுங்கள்” என்று பேசியிருந்தார். இது தொடர்பாக செய்தியும் வெளியாகி உள்ளது.

ஆனால் சமூக ஊடகங்களில் ஜோதிக்கா, “தஞ்சாவூர் பெரிய கோவில் தேவையா? கோவில்களில் பணம் போடாதீர்கள், அதற்கு பதில் ஏதாவது உருப்படியாக செய்யுங்கள்” என்று கூறியதாக வதந்தி பரவியது. கோவிலையே தவறாக பேசிவிட்டார் ஜோதிகா என்று கூறி பலரும் ஜோதிகா இறந்துவிட்டார் என்று பகிர்ந்து வருகின்றனர்.

இது தொடர்பாக சூர்யா, ஜோதிகா மேலாளர் தங்கதுரையிடம் பேசினோம். “மேடம் நலமாக உள்ளார்” என்று கூறினார். அவர் தரப்பு கருத்தை அறிய முடியவில்லை.
சூர்யா, ஜோதிகா தரப்பில் இருந்து நம்மிடம் பேசியவர்கள், “ஜோதிகா நலமுடன் உள்ளார். ஜோதிகா என்ன பேசினார் என்ற வீடியோ சமூக ஊடகங்களிலேயே உள்ளது. இதைப் பார்த்து ஜோதிகா பேசியது உண்மைதானா என்று சரிபார்க்க கூட மனம் இன்றி அவதூறு பரப்புகின்றனர். திரையுலகில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல பணிகளை செய்து வருவது சூர்யா குடும்பம்தான். எதையும் தெரிந்துகொள்ளால், விஷமத்தனமான வதந்தியை பரப்புகின்றனர்” என்றார்.
ஜோதிகா இந்து மதம் பற்றி, இந்து கோவிலைப் பற்றி தவறாக பேசிவிட்டார் என்று நினைத்து அவர் மரணமடைந்துவிட்டார் என்று விஷமத்தமனாக பதிவுகளை பகிர்ந்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஜோதிகா இறந்துவிட்டார் என்று பகிரப்படும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு வெறும் வதந்தி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
