திருமுருகன் காந்தி இந்துக்களை விமர்சித்தாரா?- அவரது பேச்சை திரித்து பகிரப்படும் தகவல்!

அரசியல் சமூக ஊடகம்

‘’திருமுருகன் காந்தி இந்துக்களை விமர்சித்தார்,’’ என்று பகிரப்படும் தகவலை காண நேரிட்டது. அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். 

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

இதில், திருமுருகன் காந்தி பெயரில் நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளனர். அந்த நியூஸ் கார்டில், ‘’அரேபியர்கள் இன்னும் வீரத்துடன் எதிர்த்திருந்தால் ஒட்டுமொத்த இந்துக்களும் முஸ்லீமாக மாறியிருப்பார்கள்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

இதனை பலரும் உண்மை என நம்பி பலரும் ஷேர் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்: 

சவூதி அரேபியா, துபாய், கத்தார் போன்ற அரபு நாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள், அங்கிருந்தபடியே முஸ்லீம்களுக்கு எதிரான கருத்துகளை ட்விட்டரில் பகிர்வதாக சர்ச்சை எழுந்துள்ளது. குறிப்பாக, கொரோனா வைரஸ் பரவ முஸ்லீம்கள்தான் காரணம் என்று பலர் ட்விட் வெளியிட்டதால், அதன்பேரில் அரபு நாடுகளைச் சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவிக்க தொடங்கியுள்ளனர். 

குறிப்பாக, துபாய், கத்தார் போன்ற நாடுகள் இந்த விவகாரத்தை சட்டப்பூர்வமான விசயமாக கையாள தொடங்கியுள்ளன. இதனால், அங்கு வேலை பார்க்கும் இந்தியர்கள் வேலையிழக்க நேரிடும் எனக் கூறப்படுகிறது. 

இந்த பரபரப்பு காரணமாக, பாஜக ஆதரவாளர்கள் பலர் முஸ்லீம்களை ஆதரித்து சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். ஒரே நாளில் திடீரென பாஜகவினர் இப்படி முஸ்லீம்களை ஆதரிக்க தொடங்கியது பலரையும் வியப்படைய செய்துள்ளது. இதுபற்றி தமிழக அரசியல் கட்சியினர் வித விதமான கருத்து தெரிவிக்கின்றனர். 

அதில் ஒன்றுதான் திருமுருகன் காந்தி பற்றி நாம் பார்க்கும் செய்தியும். 

திருமுருகன் காந்தி உண்மையில், ஒட்டுமொத்த இந்துக்களும் முஸ்லீமாக மாறியிருப்பார்கள் என்று கூறவில்லை. அவர் கூறியது, ‘’அரேபியர்கள் இன்னும் வலிமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தால் ஒட்டுமொத்த ஆர்எஸ்எஸ் கூடாரமே முஸ்லீமாக மாறியிருக்கும்,’’ என்பதுதான். 

அவரது ட்விட்டர் பதிவு கீழே தரப்பட்டுள்ளது. 

Thirumurugan Gandhi Twitter LinkArchived Link 

ஒட்டுமொத்த ஆர்எஸ்எஸ் கூடாரம்’ என்று அவர் சொன்னதை தவறாக அர்த்தப்படுத்தி ‘ஒட்டுமொத்த இந்துக்களும் முஸ்லீமாக மாறியிருப்பார்கள்’ என்று நம் டிவி செய்தி வெளியிட்டிருக்கிறது. இந்த செய்தி வைரலானதை தொடர்ந்து, இதுபற்றி திருமுருகன் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.

Thirumurugan Gandhi ExplanationArchived Link

இதன்படி, அரசியல் உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே திருமுருகன் காந்தி சொன்னதை தவறாகச் சித்தரித்து செய்தியாக வெளியிட்டுள்ளனர் என்று தெளிவாகிறது. இதனை திருமுருகன் காந்தியே மறுத்துள்ளதோடு, இந்த பொய் பிரசாரம் பற்றி சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பேன் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். 

இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி, நாம் ஆய்வு மேற்கொண்ட செய்தி, தவறான புரிதலின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளதாக, தெரியவருகிறது. 

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், உண்மையும், பொய்யும் கலந்த செய்தி இடம்பெற்றுள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய சந்தேகத்திற்கு இடமான செய்திகளை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:திருமுருகன் காந்தி இந்துக்களை விமர்சித்தாரா?- அவரது பேச்சை திரித்து பகிரப்படும் தகவல்!

Fact Check By: Pankaj Iyer 

Result: Partly False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •