‘எதுக்குப் புரியாம பேசுற’, என்று மோடியிடம் கேட்டாரா கனிமொழி?
"நீங்கள் என்ன பேசினாலும் புரியாது... எதுக்கு புரியாம பேசுற" என்று பிரதமர் நரேந்திர மோடியைப் பார்த்த கனிமொழி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
நாடாளுமன்றத்தில் கனிமொழி மற்றும் மோடி பேசுவது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இந்தியில் பேச, நீங்கள் என்ன பேசினாலும் புரியாது. எதுக்கு புரியாம பேசுற?" என்று நரேந்திர மோடியைப் பார்த்து கனிமொழி பேசுவது போலவும் வீடியோவில் உள்ளது. நிலைத் தகவலில், "That அவன் பொருள வச்சு அவனை செய்துவிடல் 😤" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Prakash @Hereprak என்ற எக்ஸ் தள (ட்விட்டர்) ஐடி கொண்டவர் 2023 செப்டம்பர் 20ம் தேதி பதிவிட்டுள்ளார். இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பிரதமர் மோடி இந்தியில் பேசுவது தனக்கு புரியாது என்று கனிமொழி கூறுவது போன்று வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் கனிமொழி பேசுவது வேறு ஒரு இடத்தில், பிரதமர் மோடி பேசுவது வேறு ஒரு இடத்தில்... இரண்டு வெவ்வேறு வீடியோக்களை எடுத்து ஒன்று சேர்த்து வதந்தி பரப்பியிருப்பது தெரிகிறது.
வீடியோவை பார்க்கும் போது, கனிமொழி இருப்பது புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மக்களவையின் உள்ளே என்பது தெரிகிறது. பிரதமர் மோடி இருப்பதோ பழைய நாடாளுமன்ற கட்டிடத்தின் மாநிலங்களவையின் உள்ளே என்பது அவருக்குப் பின்புறம் உள்ள இருக்கையின் நிறம் கூறுகிறது. மேலும், பிரதமர் மோடி பேசும் போது, "பிரதமர் நரேந்திர மோடி, சபாநாயகர் இருக்கையில் மாண்புமிகு தலைவர் (குடியரசுத் துணைத் தலைவரை மாநிலங்களவையின் தலைவர் என்று கூறுவார்கள்) என்று காட்டப்படுகிறது. அதே போல் கனிமொழி பேசும் போது, "கனிமொழி கருணாநிதி, தூத்துக்குடி (தமிழ்நாடு), இருக்கையில்: மாண்புமிகு சபாநாயகர்" என்று வருகிறது.
அதே போல் அவர்கள் எந்த விவாதத்தில் பேசுகிறார்கள் என்பதையும் வீடியோவில் பதிவிட்டிருப்பதை காண முடிந்தது. கனிமொழி பேசும் காட்சி வரும் வீடியோவில், "The Constitution One Hundred and Twenty-Eighth Amendment (அரசியலமைப்புச் சட்டம் 188வது திருத்தம்) என்று வருகிறது. அதுவே பிரதமர் நரேந்திர மோடி பேசும் பகுதியில் Motion of Thanks on The President's Address (குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்) என்று வருகிறது. எஇவை இந்த வீடியோக்கள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டது இல்லை என்பதை உறுதி செய்கின்றன.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் தற்போதுதான் அவை நடவடிக்கை தொடங்கியுள்ளது. எனவே, கனிமொழி பேசிய வீடியோவை நாடாளுமன்ற தொலைக்காட்சியின் யூடியூப் பக்கத்தில் இருந்து எடுத்தோம். 188வது சட்டத் திருத்தம் தொடர்பான விவாகத்தில் கனிமொழி பேசியதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. கனிமொழி பேச எழுந்ததும் ஆளுங்கட்சித் தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்புகிறது. ‘நான் இன்னும் பேசவே தொடங்கவில்லை அதற்குள்ளாகவா?,’ என்று கனிமொழி எதிர்ப்பு தெரிவிக்கிறார். அதில், ‘நீங்கள் என்ன பேசினாலும் புரியாது,’ என்ற காட்சி 30வது விநாடியில் வருவதைக் காண முடிந்தது.
இதுதொடர்பாகத் தேடிய போது ஊடகங்களில் வெளியான செய்திகள் நமக்குக் கிடைத்தன. கனிமொழி பேசத் தொடங்கியதும் ஆளுங்கட்சி எம்.பி.,க்கள் குரல் எழுப்பினர் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. மோடிக்கு எதிராக கனிமொழி பேசியதாக செய்தியில் குறிப்பிடப்படவில்லை.
பிரதமர் மோடியின் நாடாளுமன்ற பேச்சைத் தேடி எடுப்பது அவ்வளவு கடினமாக இல்லை. நாடாளுமன்ற யூடியூப் பக்கத்தில் நாடாளுமன்றத்தில் பேசிய மோடி என்று டைப் செய்து தேடிய போது சில வீடியோக்கள் கிடைத்தன. அதில் பிப்ரவரி 9, 2023 அன்று பதிவிடப்பட்டிருந்த வீடியோ நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவுடன் ஒத்துப்போனது. அதில் 1.23வது மணி நேரத்தில் 49வது நிமிடத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உள்ளது போன்று இரண்டு கைகளையும் விரித்து, நெஞ்சில் அடித்துச் சவால்விடும் வகையில் நரேந்திர மோடி பேசும் காட்சி வருகிறது.
இதன் மூலம் இரண்டு வெவ்வேறு வீடியோக்களை எடுத்து. பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கனிமொழி பேசியதாக போலியாக வீடியோ உருவாக்கப்பட்டு வதந்தி பரப்பப்பட்டிருப்பது தெளிவாகிறது.
முடிவு:
‘நீங்கள் பேசுவது புரியவில்லை,’ என்று மோடிக்கு எதிராக கனிமொழி பேசியது போன்று பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
Title:‘எதுக்குப் புரியாம பேசுற’, என்று மோடியிடம் கேட்டாரா கனிமொழி?
Written By: Chendur PandianResult: False