
கொரோனாவைக் குணப்படுத்த ஹைட்ராக்ஸிகுரோரோகுயின் மாத்திரை வழங்கிய இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்க அமெரிக்க மாணவர்கள் ஒன்றிணைந்து இந்திய தேசிய கீதத்தை பாடியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

வெளிநாட்டினர் இந்திய தேசிய கீதம் பாடும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோவில், ஹைட்ரோக்சி குளோரோகுயின் மாத்திரை வழங்கிய இந்தியாவுக்கு நன்றி கூறும் வகையில் மாணவர்கள் பாடியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
நிலைத் தகவலில், “ஹைட்ராக்ஸி குளோரோகுயின் வழங்கப்பட்டதற்கு இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்க அமெரிக்கா மாணவர்களால் ஒன்றிணைக்கப்பட்டது என்ன ஒரு அழகான நன்றியுணர்வு…” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை இராமமூர்த்தி ஆதிமூலம் என்பவர் 2020 ஏப்ரல் 29ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
அமெரிக்க மாணவர்கள் இந்திய தேசிய கீதத்தை பாடுவது மகிழ்ச்சியை அளிக்கிறது. கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரை வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பாடியதாக பகிரப்படுவது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
அமெரிக்க மாணவர்கள், இந்திய தேசிய கீதம், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் ஆகிய கீவார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு கூகுளில் தேடினோம். அப்போது 2017ம் ஆண்ட ஆகஸ்ட் 13ம் தேதி யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த வீடியோ கிடைத்தது.
அந்த வீடியோவைப் பார்த்தோம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட அதே வீடியோதான் இது. இந்த வீடியோவை அனிஷா தீக்ஷித் என்பவர் பதிவேற்றம் செய்திருந்தார். சுமார் 7.9 லட்சம் பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.

வீடியோவின் தொடக்கத்தில் இந்தியாவின் 71வது சுதந்திர தினத்தையொட்டி ரிக்ஷாவாலி உலகின் பல பகுதிகளில் உள்ளவர்களை ஒன்று சேர்த்து நம்முடைய அன்புக்குரிய இந்திய தேசிய கீதத்தை பாட வைத்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது. யார் இந்த ரிக்ஷாவாலி என்று பார்த்தால் அனிஷா தீக்ஷித் என்ற யூடியூப் பிரபலம் என்று செய்திகள் கிடைத்தன. மேலும், இந்த வீடியோவில் பங்கேற்றவர்கள் பற்றிய விவரத்தையும் அவர் வெளியிட்டிருந்தார்.

தொடர்ந்து வேறு செய்தி ஏதும் உள்ளதா என்று தேடியபோது, 2017ம் ஆண்டு ஃபினான்ஷியல் எக்ஸ்பிரஸ் இணையதளத்தில் வெளியான செய்தி கிடைத்தது. அதில், எட்டு வெளிநாட்டினர் இந்திய தேசிய கீதத்தை பாடியதாக குறிப்பிட்டிருந்தனர்.
இதன் மூலம், மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய வீடியோவை எடுத்து, கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரை வழங்கியதால் இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அமெரிக்க மாணவர்கள் இந்திய தேசிய கீதத்தை பாடியதாக பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
