
‘’அன்புமணி ராமதாஸ், சேலம் – சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து கருத்து கூறவில்லை,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்தோம்.
தகவலின் விவரம்:

Tamil peoples. com என்ற ஃபேஸ்புக் ஐடி மேற்கண்ட பதிவை வெளியிட்டுள்ளது. இதில், அன்புமணி பற்றி நியூஸ் 7 வெளியிட்ட செய்தி ஒன்றை இணைத்து, அதன் கீழே, கவுண்டமணியின் புகைப்படத்தை பகிர்ந்து, அதில், ‘’மிஸ்டர் மணி, நீ தான் தைரியமான ஆளாச்சே, அப்ப எட்டுவழி சாலையை எதிர்த்து கருத்து தெரிவித்துப் பாரேன்,’’ என்று கூறியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
முதலில் மேற்கண்ட பதிவில் உள்ளது போன்ற நியூஸ்7 செய்தி என்னவென்று விவரம் தேடிப் பார்த்தோம்.

அன்புமணி பற்றி நியூஸ்7 வெளியிட்ட அந்த செய்தியின் விவரம் கிடைத்தது. அதில், ‘’நடிகர் சூர்யா சமீபத்தில் கல்விக் கொள்கை பற்றி தெரிவித்த கருத்தை வரவேற்று, அன்புமணி செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். இந்தியாவில் யார் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம். அது ஜனநாயகம் வழங்கியுள்ள உரிமை என அவர் கூறியுள்ளார்,’’ என்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

ஆனால், இவர்கள் கூறியுள்ளதுபோல, எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக அன்புமணி எந்த கருத்தும் கூறவில்லை என்ற தகவல் தவறானது. இதுதொடர்பாக, ஏற்கனவே நாம் உண்மை கண்டறியும் ஆய்வு ஒன்றை செய்து, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளோம். அதுபற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
எட்டுவழிச்சாலை திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவர்களில், அன்புமணியும் ஒருவர் ஆவார். இதை அனைத்தையும் ஒன்றிணைத்து விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது. ஆனாலும், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.
அஇஅதிமுக, பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும் எட்டு வழிச்சாலை திட்டத்தில் தமிழக அரசின் முடிவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அன்புமணி கேவியட் மனு தாக்கல் செய்திருக்கிறார். இந்த விவகாரத்தில் பாமக தொடர்ந்து போராடும் என அவ்வப்போது கருத்து தெரிவித்தும் வருகிறார்.
இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
எனவே, உரிய ஆதாரங்கள் எதுவுமின்றி, தனிநபர் தாக்குதலை முன்வைத்து அன்புமணி பற்றி தவறான தகவலை மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் வெளியிட்டுள்ளனர் என்று தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் படி, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:அன்புமணி எட்டு வழிச்சாலை திட்டத்தை எதிர்த்துப் பேசவில்லை: ஃபேஸ்புக் செய்தி உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: False
