
விவசாய சட்ட மசோதாவை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
Facebook I Archive 1 I Archive 2
பேரணி போல வருபவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஊடக_வேசிகள் காட்டாவிட்டாலும் இந்தியா முழுவதும் இதை எடுத்துச் செல்லுங்கள்…!!! விவசாய சட்ட மசோதா எதிர்த்து போராடிய விவசாயிகளை காவி ஏவல்துறை அடித்து விரட்டும் காட்சி…!!!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை நிஜத்தின் நிழல் என்ற ஃபேஸ்புக் பக்கம் கடந்த செப்டம்பர் 26, 2020 அன்று பகிர்ந்துள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
விவசாய சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராடி வருவது பற்றிய செய்தியை ஊடகங்கள் மறைப்பது போல பலரும் சமூக ஊடகங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். பல ஆண்டுகளுக்கு முந்தைய படங்கள், வீடியோக்களை எல்லாம் எடுத்துப் போட்டு இவை எல்லாம் தற்போது நடந்தது போன்று பகிர்ந்து வருகின்றனர். இது உண்மை என்று நம்பி பலரும் ஊடகங்களை விமர்சித்து கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த வீடியோவைப் பார்க்கும் போது விவசாயிகள் போல இல்லை. தற்போது கொரோனா ஊரடங்கு உள்ள நிலையிலும் பல மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் செய்து வருகின்றனர். போராட்டத்தில் பங்கேற்பவர்களில் ஒரு சிலராவது முகக் கவசம் அணிந்து போராடுவதை காண முடிகிறது.
இவர்கள் அனைவரும் விவசாயிகள் போல தெரியவில்லை என்பதால் இந்த வீடியோ உண்மையில் தற்போது எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம். வீடியோ காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம்.
அப்போது பல மாதங்களாக இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதைக் காண முடிந்தது. குறிப்பாக குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்ட போது அந்த சட்டத்தை எதிர்த்து குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் நடந்த பேரணி என்று பலரும் இதை ஷேர் செய்திருப்பது தெரிந்தது. வேறு பல இடங்களில் நடந்தது என்றும் பகிரப்பட்டு வந்திருப்பது தெரிந்தது.
உண்மையில் இந்த வீடியோ எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்று நம்முடைய ஆய்வைத் தொடர்ந்தோம். அப்போது 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ம் தேதி உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் நடந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தின் போது போலீசார் நடத்திய தடியடி சம்பவம் என்று யூடியூப் வீடியோ கிடைத்தது.
வேறு ஏதேனும் ஊடகங்கள் இது தொடர்பான வீடியோ, செய்தியை வெளியிட்டுள்ளதா என்று தேடிப் பார்த்தோம். அப்போது ரிபப்ளிக், டைம்ஸ் ஆஃப் இந்தியா உள்ளிட்ட பல ஊடகங்களில் இது தொடர்பான செய்தி, வீடியோ வெளியிடப்பட்டு இருந்தது. குறிப்பாக தடியடி தொடங்கும் காட்சி அப்படியே ரிபப்ளிக் டி.வி யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டு இருந்தது.
இதன் மூலம் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின் வீடியோவை விவசாயிகள் போராட்டத்தின் போது எடுக்கப்பட்டது என்று தவறான தகவல் சேர்த்து வெளியிட்டிருப்பதுடன், இந்த தகவலை பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மறைத்துவிட்டதாக விஷமத்தனமான தவறான பிரசாரம் செய்யப்பட்டிருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் இந்த பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவில் இடம் பெற்ற தகவல் தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:விவசாய சட்ட மசோதாவை எதிர்த்த விவசாயிகள் மீது போலீசார் தடியடி; வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
