ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி மீட்கப்பட்டு இந்தியாவுடன் இணைக்கப்பட்டதா?

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகள் மீட்கப்பட்டு இந்தியாவுடன் இணைக்கப்பட்டுவிட்டது என்று சமூக ஊடகங்களில் ஒரு பதிவு பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link 1Archived Link 2

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இந்தியக் கொடியின் நிறம் அடிக்கப்படுவது போன்ற வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கூகுள் மேப் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு எல்லை கோட்டை (loc) எடுத்து விட்டது. இனி ஒரே #காஷ்மீர் தான் . இந்த விஷயம் கூகுளிற்கும் தெரிந்து விட்டது… எனவே இனி #ஆக்கிரமிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை…. உயிர்த் தியாகம் செய்த இராணுவ வீரர்களுக்கு புகழஞ்சலி…. ஜெய்_ஜவான்… ஜெய்_ஹிந்த்… பாரத்_மாதா_கீ_ஜெய்…” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Babu Sabapathi என்பவர் 2020 மே 10ம் தேதி வெளியிட்டுள்ளார்.

Facebook LinkArchived Link

மே 9, 2020 அன்று இந்த வீடியோவை பகிர்ந்துள்ள J Muralee Dharan என்பவர், “அமித்ஷாஜி அதிரடி நடவடிக்கை. ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 24 சட்ட மன்ற தொகுதிகள் நிலப் பரப்பு மீட்கப்பட்டு இந்தியாவுடன் இணைக்கப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார். பலரும் இந்த பதிவுகளை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்தியா, பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்தபோது காஷ்மீர் பகுதி தனி நாடாகவே இருந்தது. காஷ்மீர் மன்னராக இருந்த ஹரிசிங், இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுடன் சேராது, ஜம்மு காஷ்மீரைத் தனித்து தன்னாட்சியுடன் நிர்வகிக்க முடிவு செய்தார். இதனால், பாகிஸ்தான் தூண்டுதலின்பேரில் பஷ்தூன் மக்கள் ஜம்மு காஷ்மீரின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் தாக்குதல் நடத்தி நிலத்தைக் கைப்பற்றினர். இதன் பிறகே இந்தியாவுடன் இணைய காஷ்மீர் ஒப்புக்கொண்டது. 1947ம் ஆண்டு அக்டோபர் 26ம் தேதி காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது.

பாகிஸ்தான் ஆதரவு படைகளால் கைப்பற்றப்பட்ட பகுதிகள் ஆசாத் காஷ்மீர் மற்றும் கில்ஜிட் பால்டிஸ்தான் என்று அழைக்கப்படுகின்றன. இது தவிர 1962ம் ஆண்டு கில்ஜிட் பால்டிஸ்தான் மாநிலத்தில் இருந்து ஒரு பகுதியை பாகிஸ்தான் அரசு சீனாவுக்கு அளித்தது. தற்போது அந்த பகுதி சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. எந்த எந்த நாட்டிடம் எவ்வளவு நிலப்பரப்பு உள்ளதோ, பேசித் தீர்க்கும் வரை அதை அவர்களே வைத்துக்கொள்ளலாம்… அப்படியான நிலப் பரப்பு எல்லையை வரையறுப்பது எல்லை கட்டுப்பாட்டுக் கோடு ஆகும்.  இது தொடர்பான வரைபடம் கீழே…

இப்படி பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை மீட்க இந்திய அரசு போராடி வருகிறது. அதே நேரத்தில், இந்தியாவுடன் இணைக்கப்பட்ட பகுதிகளை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று பாகிஸ்தானும் பிரச்னை செய்து வருகிறது. இந்த பிரச்னையை பாகிஸ்தான் சர்வதேச நாடுகள் மத்தியில் எழுப்பி வருகிறது. ஆனால், இது இரு நாட்டு பிரச்னை, மூன்றாம் நாட்டின் தலையீடு தேவையில்லை என்று கூறி வருகிறது.

அப்படி இருக்கும்போது, ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகள் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதாக கூறுவது ஆச்சரியத்தை அளிக்கிறது. அதிலும் கூகுளுக்கு தெரிந்துவிட்டது, கூகுளே கூறிவிட்டது என்று கூறியிருப்பது வியப்பபை ஏற்படுத்துகிறது.

இந்திய வானிலை ஆய்வு மையம் இதுவரை இந்தியக் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீர் பகுதிக்கு மட்டுமே வானிலை அறிக்கையை அளித்து வந்தது. தற்போது, மே 6ம் தேதியில் இருந்து பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர், கில்ஜிட் பால்டிஸ்தான் பகுதிக்கும் வானிலையை அறிவிக்க ஆரம்பித்ததில் இருந்து இந்த பிரச்னை தொடங்கியதாக டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 24 சட்டமன்றத் தொகுதிகளை இந்திய அரசு தொடக்கத்தில் இருந்தே ரிசர்வ் பகுதிகளாக வைத்துள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவை நீக்கும் போது கூட இந்த தொகுதிகள் ரிசர்வ் தொகுதிகளாகவே வைக்கப்பட்டிருந்தது எனவும் குறிப்பிட்டிருந்தனர்.

timesnownews.comArchived Link

கூகுள் மேப்-ல் இந்திய வரைபடத்தைக் காட்டும்போது எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியை எல்லையாக கருதி, வெளியிட்டு வந்தது. கூகுள் இந்தியா மேப்-க்கும், இந்தியாவின் அதிகாரப்பூர்வ வரைபடத்துக்கும் இடையே இது வித்தியாசத்தைக் காட்டியது. அதனால், சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவின் எல்லையை எல்லைக் காட்டுப்பாட்டுக் கோட்டுடன் முடிக்காமல், உண்மையான எல்லைக் கோட்டுப் பகுதி வரைக்கும் மாற்றி வெளியிட்டது கூகுள் மேப்.

இந்தியாவில் இருந்து இந்திய வரைபடத்தை பார்க்கும்போது மட்டும் இந்த மேப் தெரியும் வகையில் கூகுள் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது. இதுவே, மற்ற நாடுகளில் இருந்து பார்த்தால், இந்திய வரைபடம் என்பது எல்ஓசி எனப்படும் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதி வரை மட்டுமே தெரியும் வகையில் இருக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது. 

washingtonpost.comArchived Link

இது தொடர்பாக தேடியபோது தி வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட செய்தி கிடைத்தது. 2020 பிப்ரவரி 14ம் தேதி வெளியான அந்த செய்தியில், கூகுள் மேப் இயக்குநர் ஈதன் ராஸ்ஸல் பேட்டியை வெளியிட்டிருந்தனர். அதில் அவர், “எங்கள் இலக்கு துல்லியமான வரைபடத்தை வழங்க வேண்டும் என்பதுதான். பிரச்னைக்குரிய பகுதிகள், எல்லைக் கட்டுப்பாடு கோடு போன்ற விவகாரங்களில் நாங்கள் எந்த பக்க சார்பின்றியும் இருக்க விரும்புகிறோம். இது போன்ற இடங்களை கிரே நிறத்தில் இடைவெளியிட்ட கோடுகள் மூலம் சுட்டிக்காட்டுகிறோம். அதுவே உள்நாட்டில் இருந்து அந்த வரைபடத்தைப் பார்க்கும்போது உள்ளுர் சட்டத்துக்கு ஏற்ப பெயர்கள் மற்றும் எல்லைகளை காட்டும் வகையில் வைத்திருக்கிறோம்” என்றதாக குறிப்பிட்டிருந்தனர்.

அந்த செய்தியிலேயே இந்திய வரைபடத்தை வெளியிட்டிருந்தனர். அதில் இந்தியாவில் இருந்து பார்க்கும்போது இந்திய எல்லைகள் தெளிவாகவும், பாகிஸ்தானில் இருந்து பார்க்கும்போது எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதிகளோடும் இந்திய வரைபடம் இருப்பதை காண முடிந்தது. 

landportal.orgArchived Link

ஆசாத் காஷ்மீர், கில்ஜிட் பால்டிஸ்தான் பற்றி தேடியபோது, அவை பாகிஸ்தானின் நிர்வாக மாநிலங்களாக தொடர்ந்து நீடித்துக்கொண்டு இருப்பதை காண முடிந்தது.  

சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் ஆன நிலையிலும், பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்தாலும் ஆசாத் காஷ்மீர், கில்ஜிட் பால்டிஸ்தான் இந்தியப் பகுதியாகத்தான் பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் அந்த பகுதிகள் தற்போது பாகிஸ்தான் கட்டுப்பாட்டில்தான் உள்ளன என்பது தெளிவாகி உள்ளது.

கூகுள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை உள்ளுர் விதிகளுக்கு ஏற்ப மாற்றியுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பே அறிவித்திருந்தது. இதன் மூலம், பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்த ஆசாத் காஷ்மீர் பகுதிகள் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட விட்டது, எல்லைக்கோட்டுப்பாட்டுக் கோட்டை கூகுள் நீக்கிவிட்டது என்று கூறப்படும் பதிவுகள் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி மீட்கப்பட்டு இந்தியாவுடன் இணைக்கப்பட்டதா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •