
‘’வங்கிகளுக்கு 7 நாட்கள் தொடர் விடுமுறை,’’ என்ற தலைப்பில் வைரலாக பகிரப்பட்டு வரும் செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link 1 | PuthiyaThalaimurai | Archived Link 2 |
புதிய தலைமுறை இணையதளத்தில் வெளியிட்ட செய்தியின் லிங்கை, இந்த ஃபேஸ்புக் பதிவில் இணைத்து பகிர்ந்துள்ளனர். அந்த செய்தியை படித்து பார்த்தபோது, அதில், ‘’இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு 26, 27 தேதிகளில் வேலை நிறுத்தம் செய்வதால் வங்கிகள் இயங்காது. 28, 29 தேதிகளில் சனி, ஞாயிறு விடுமுறை. அதன்பின், அக்.,1 தேதி அரையாண்டு கணக்கு முடிப்பு. அக்., 2 காந்தி ஜெயந்தி விடுமுறை,’’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.

உண்மை அறிவோம்:
இவர்கள் குறிப்பிடுவது போல, செப்டம்பர் 26, 27 தேதிகளில் பொதுத்துறை வங்கி ஊழியர் சங்கத்தினர் வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்திருந்தனர். ஆனால், தற்போதைய நிலையில் வேலைநிறுத்த முடிவை ஒத்திவைப்பதாக வங்கி ஊழியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

எனினும், நாம் ஆய்வு செய்யும் புதிய தலைமுறை செய்தி செப்டம்பர் 21 அன்று வெளியிடப்பட்டதாகும். அன்றைய நிலவரத்தின்படி பார்த்தால், பொதுத்துறை வங்கி அதிகாரிகள், ஊழியர் சங்கத்தினர்தான் வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்திருந்தனர். அதேசமயம், அன்றைய நாளில் வங்கிகள் வழக்கம்போல இயங்கும் என்று ஏற்கனவே எஸ்பிஐ, பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள் தெளிவுபடுத்திவிட்டன. அதுதவிர, அன்றைய நாளில் தனியார் வங்கிகள் வழக்கம்போலவே இயங்கும் என்றும் கூறப்பட்டிருந்தது. வேண்டுமானால், செப்டம்பர் 28, 29 தேதிகளில் சனி, ஞாயிறு என்பதால் வங்கிப் பணிகள் சற்று பாதிக்கப்படலாம்.
அத்துடன், செப்டம்பர் 30ம் தேதி திங்கள்கிழமை அரையாண்டு கணக்கு முடிக்கும் நாள் என ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் எதுவும் அறிவிக்கவில்லை. அக்டோபர் 1ம் தேதியும் விடுமுறை எதுவும் இல்லை. அக்டோபர் 2ம் தேதி மட்டுமே காந்தி ஜெயந்தி விடுமுறை. எனவே, புதிய தலைமுறை செய்தியில் பாதி உண்மை, பாதி தவறான தகவல் உள்ளதாக, தெரியவருகிறது. ஒரு முன்னணி ஊடகத்தினர் செய்திகளின் உண்மைத்தன்மை பற்றி சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி ஆய்வு செய்தபின், இதுபோன்ற வேலைநிறுத்த செய்திகளை வெளியிடவேண்டும். ஆனால், பொத்தாம் பொதுவாக, வாட்ஸ்ஆப் ஃபார்வேர்டு செய்தியை வெளியிட்டதன் மூலமாக, வாசகர்களை குழப்பியுள்ளனர்.
இதுதொடர்பாக, செப்டம்பர் 23ம் தேதி தி இந்து உண்மை கண்டறியும் சோதனை ஒன்றை செய்து, அதன் முடிவுகளை ஏற்கனவே சமர்ப்பித்திருக்கிறது. அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதுதவிர, ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் செப்டம்பர் 30ம் தேதி எந்த விதமான அரையாண்டு கணக்கு முடிப்பு எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதுபற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் தெரியவந்த உண்மையின் விவரம்,
1) புதிய தலைமுறை செய்தி வெளியிட்ட காலக்கட்டத்தின்படி பார்த்தால், 7 நாள் தொடர் விடுமுறை கிடையாது. அந்த செய்தியில் பாதி உண்மை, பாதி தவறான தகவல் உள்ளதாக, தெரியவருகிறது.
2) தற்போதைய நிலவரத்தில், வங்கி ஊழியர் சங்கத்தினர் அறிவித்த 2 நாள் வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட செய்தியில் பாதி உண்மை, பாதி தவறான தகவல் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்திகளை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

புதிய தலைமுறை என்றைக்கு முழுவதும் உண்மைச் செய்தியைத் திரிக்காமல் வெளியிட்டிருக்கிறது? அவர்கள்வெவெளியிடும் செய்திக்கெல்லாம் போய் Fact Check செய்து உங்கள் நேரத்தை வீனடிக்க வேண்டாம்…
அதிலும் உண்மை கண்டறிய தி இந்து நாளிதழா! அவர்களே மத்திய அரசு பற்றி பல பொய்யான செய்திகளை பரப்புபவர்கள்!… ? ? ?