
‘’பெண்களில் கனவுக் கண்ணனுக்கு மனைவியானார் ஐஸ்வர்யா ராஜேஷ்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதுபற்றி ஃபேஸ்புக் வாசகர்கள் குழப்பமடைந்து கமெண்ட் பகிரவே, அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Claim Link | Archived Link | News Link | Archived Link |
BioScope
என்ற ஐடி இந்த பதிவை டிசம்பர் 14, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில் செய்தித்தளம் ஒன்றில் வெளியான செய்தியின் லிங்கை இணைத்துள்ளனர். இந்த செய்தியை படித்த வாசகர்கள் பலரும், இது உண்மையா, இப்படி ஒரு செய்தி தேவையா என்ற விதத்தில் கமெண்ட்டி பகிர்ந்ததை காண நேரிட்டது.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் இடம்பெற்ற கமெண்ட்களை பார்த்து நாமும் இந்த செய்தி உண்மையா இருக்குமோ என்ற சந்தேகத்தில் செய்தியை படித்து பார்த்தோம். அதன் உள்ளே, ‘’நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற தெலுங்கு படத்தில் சுவர்ணா என்ற கேரக்டரில் நடிக்கிறார். இந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு மனைவி வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. அவர் மட்டுமின்றி, ராஷி கண்ணா, கேத்ரின் தெரசா, இசபெல் லெய்ட்டி என மொத்தம் 4 ஹீரோயின்கள் இந்த படத்தின நடிக்கிறார்கள். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது,’’ என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளனர். மேலும், செய்தியின் தலைப்பு,’பெண்களில் கனவுக்கண்ணனுக்கு’ என்று எழுத்துப்பிழையுடன் உள்ளது.
இதனை பார்க்கும்போது சினிமா வாசகர்களை சுண்டி இழுக்கிறேன் பேர்வழி என்ற பெயரில், முன்பின் யோசிக்காமல் இப்படி ஒரு தவறான தலைப்பை வைத்து, வாசகர்களை குழப்பியுள்ளனர். பலர் இதனை உண்மைச் செய்தி என தலைப்பை மட்டும் பார்த்து ஏமாற்றமடைந்தது போலவே நாமும் ஏமாற்றமடைந்தோம்.
சினிமா செய்தித்தளம் நடத்தும் பலர் இப்படி செய்தி வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சில நேரங்களில் இது தேவையற்ற விபரீதத்தை ஏற்படுத்திவிடும் என்பதை இப்படி பொழுதுபோக்கு செய்தி வெளியிடுவோர் புரிந்துகொள்வதில்லை.
இதே செய்தியை மற்ற செய்தித்தளங்கள் எப்படி வெளியிட்டுள்ளனர் என விவரம் தேடினோம். பலரும் சற்று கேள்விக்குறியுடனே செய்தி வெளியிட்டிருந்ததை காண நேரிட்டது. ஆனால், நாம் ஆய்வு செய்யும் செய்தித்தளம் மட்டும் ஒருபடி மேலே சென்று, நேரடியாகச் செய்தி வெளியிட்டுள்ளனர்.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட செய்தியின் தலைப்பு, ஃபேஸ்புக் வாசகர்களை குழப்பும் வகையில் தவறாக உள்ளதென நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு திருமணமா?- ஃபேஸ்புக் செய்தியால் வீண் குழப்பம்!
Fact Check By: Pankaj IyerResult: False Headline
