
‘’இது உண்மையாக இருந்தால் நானும் பாஜக.,வை எதிர்ப்பேன்,’’ என்று கூறி, ஃபேஸ்புக்கில் ஒருவர், விகடன் செய்தியை மேற்கோள் காட்டி பதிவிட்டிருந்தார். இதனைப் பலரும் ஷேர் செய்திருந்தார்கள். எனவே, இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

கடந்த மே மாதம் இந்த ஃபேஸ்புக் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், விகடன் இணையதளத்தில் வெளியான செய்தியை இணைத்து, இதன் மேலே, ‘’இது உண்மையாக இருந்தால், நானும் பாஜக.,வை எதிர்ப்பேன்… எதைச் செய்தாலும், கண் மூடிக்கொண்டு ஆதரிக்கும் முட்டாள் இல்லை நான்.. தவறு என்றால் எவனா இருந்தாலும் எதிர்ப்பேன்,’’ என்று எழுதியுள்ளனர்.
உண்மை அறிவோம்:
தமிழகத்தில் வழங்கப்படும் அரசுப் பணிகள் அனைத்திலும் பிற மாநிலத்தவர்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. இதன்பேரில், டிஎன்பிஎஸ்சி மற்றும் மத்திய அரசுப் பணிகள் அனைத்திலும் தமிழர்களை புறக்கணிப்பதாகக் கூறி, பல்வேறு அரசியல் கட்சிகள், கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவு வெளியிடப்பட்டுள்ளது.
இதுபோல ஏற்கனவே, தமிழக அரசுப் பணிகள் மற்றும் தமிழகத்தில் உள்ள மத்திய அரசுப் பணிகள் ஆகியவற்றில் தமிழர்களை புறக்கணிப்பதாகவும், இதற்கென கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் சட்டத் திருத்தமே கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் கூறி, ஃபேஸ்புக்கில் சிலர் பதிவுகளை வெளியிட்டிருந்தனர். இதுபற்றி நாமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டிருந்தோம். அதனை விரிவாகப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இதற்கிடையே, திருச்சி ரயில்வே பணிமனையில் வெடித்த போராட்டம் என்று விகடன் வெளியிட்ட செய்தியை மேற்கோள் காட்டி, தற்போது இந்த பதிவை பகிர்ந்துள்ளனர்.
இப்படி விகடன் செய்தி வெளியிட்டுள்ளதா, என ஆய்வு செய்தோம். அதில், இது உண்மையான செய்திதான் என்று தெரியவந்தது. விகடன் செய்தியில், தமிழ் தேசிய அமைப்புகள் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் ஒன்று சேர்ந்த கடந்த மே 3ம் தேதி திருச்சியில் போராட்டம் நடத்தியதாகக் கூறப்பட்டுள்ளது. திருச்சியில் உள்ள பொன்மலை ரயில்வே பணிமனையில் 300 பேர் வரை சமீபத்தில் பிற மாநிலத்தவர்கள் நியமிக்கப்பட்டதாகவும், அவர்களில் ஒருவர் கூட தமிழர் இல்லை எனவும் இந்த போராட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டது. அந்த விகடன் செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
உண்மையில், இது ரயில்வேத் துறை நியமிக்கும் பணியிடங்களாகும். இதற்கு, மத்திய அரசை கண்டித்தாலும், இதில் தமிழர்கள் நிஜமாகவே புறக்கணிக்கப்படுகிறார்களா இல்லையா என்பதற்கு, விரிவான ஆதார தகவல்களை இத்தகைய குற்றச்சாட்டை முன்வைப்போர் சமர்ப்பிக்க வேண்டும். அப்போதுதான், இதுபோன்ற கோரிக்கைகளில் உண்மைத்தன்மை விளங்கும். ஏனெனில், இந்தியாவில் தமிழ்நாடு எப்படி ஒரு மாநிலமோ, அதுபோல இன்னும் 30க்கும் அதிகமான மாநிலங்கள் உள்ளன. அவை அனைத்திற்கும் உரிய இட ஒதுக்கீடு வழங்குவதுதான் மத்திய அரசின் கடமையாகும். எடுத்த எடுப்பில் மத்திய அரசை உரிய ஆதாரமின்றி, கண்டித்து போராட்டங்கள் நடத்துவதும், அந்த செய்தியை நம்பி, மத்திய அரசுக்கு சமூக ஊடகங்களில் நேரடி மிரட்டல் விடுப்பதும் வீண் முயற்சிகள்தான்.
குறிப்பாக, மத்திய அரசுப் பணியிடங்களில், மற்ற மாநில மக்களுக்கு ஏற்ப, தமிழர்களும் அதிகளவில் வாய்ப்புகள் பெறுகின்றனர். உதாரணமாக, மத்திய புள்ளியியல் துறை அமைச்சகம் 2016ம் ஆண்டு வெளியிட்ட வேலைவாய்ப்பு விவர அறிக்கையை பார்க்க இங்கே கிளிக் செய்யவும். அத்துடன், நடப்பாண்டில் ரயில்வே துறையில் புதிய பணியாளர்களை நியமிப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றிய விரிவான செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இதுதவிர, சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தென்னக ரயில்வேத் துறையில் நடைபெறும் ஊழியர் தேர்வு மற்றும் நியமனம் ஆன்லைன் வழியாகவே அறிவிக்கை வெளியிடப்பட்டு, முறைப்படி நடத்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள ரயில்வே குரூப் சி, டி லெவல் பணியிடங்களுக்கு அதிகளவில் வட இந்தியர்கள் நியமிக்கப்படுவதாக, ரயில்வே தொழிலாளர்கள் சமீபகாலமாக, குற்றச்சாட்டு கூறிவருகின்றனர். இதனை நிரூபிக்க இதுவரை போதுமான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை.
அதாவது, இவர்கள் சொல்வதன்படி பார்த்தால் மத்திய அரசின் உயர் நிலைப் பணிகள் அனைத்திலும், சம வாய்ப்பு பெறும் தமிழர்களுக்கு, கடைநிலை ரயில்வே பணிகளில் போதிய வாய்ப்பு தரப்படுவதில்லை என்று, தெரியவருகிறது. இதற்கு ஒட்டுமொத்தமாக மத்திய அரசு மீது குற்றம் சாட்டுவது ஏற்புடையதல்ல. இவ்விவகாரத்தில் ஏதேனும் மறைமுக காரணங்கள் இருப்பதாக, சந்தேகம் எழுகிறது. தமிழகத்தில் பட்டதாரிகள் எண்ணிக்கை அதிரித்து வருவதற்கு ஏற்ப, போதிய வேலைவாய்ப்பு இல்லை. எல்லோருமே, தங்களுக்கு அரசு வேலைதான் கிடைக்க வேண்டும் என நினைத்துக் கொண்டு, மத்திய அரசை குற்றம்சாட்டுவது தவறான நிலைப்பாடு.
வெறும் ஊடகச் செய்தியை ஆதாரம் காட்டாமல், இன்னும் விரிவான, நம்பகமான ஆதாரங்களை, குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவர் காட்டியிருந்தால், உண்மைத்தன்மை எல்லோருக்கும் புரியக்கூடும்.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கும்போது, இந்த ஃபேஸ்புக் பதிவில் வெறும் ஊடகச் செய்தியை மட்டுமே நம்பி, மத்திய அரசை கண்டித்துள்ளதாக, தெரிகிறது. அவரது குற்றச்சாட்டிற்கு வலு சேர்க்க போதுமான ஆதாரம் இல்லை. அதேசமயம், அவரது கருத்தை முற்றிலும் தவறு என்றும் ஒதுக்கிவிடமுடியாது. எனவே, இதில், நம்பகத்தன்மை இல்லை என முடிவு செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில், குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில் நம்பகத்தன்மை இல்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும், இத்தகைய நம்பகத்தன்மை இல்லாத செய்தி, புகைப்பட மற்றும் வீடியோ பதிவுகளை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:இது உண்மையாக இருந்தால் நானும் பாஜகவை எதிர்ப்பேன்: ஃபேஸ்புக் பதிவின் உண்மை விவரம்!
Fact Check By: Parthiban SResult: Mixture
