தமிழக அரசுப் பணிகளில் பிற மாநிலத்தவர்கள் சேர சட்ட திருத்தம் செய்யப்பட்டதா?

அரசியல் சமூக ஊடகம்

தமிழக அரசு நடத்தும் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் வெளிமாநிலத்தவர்கள் பங்கேற்கவும், தமிழக அரசுப் பணிகளில் சேரவும் ஓ.பன்னீர்செல்வம் சட்ட திருத்தம் செய்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டோம். முடிவு உங்கள் பார்வைக்கு…

தகவலின் விவரம்:

Archived link

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் படங்களை சேர்த்து, பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “தமிழ்நாடு அரசு வேலைகளில்(TNPSC) பிற மாநிலத்தவரும் சேரலாம் என்ற சட்ட மாற்றம் செய்த நாள் நவம்பர் 2016. மாற்றம் செய்தவர் அப்போதைய ஓ.பன்னீர்செல்வம்.

ஜெயலலிதா இறந்த பிறகு தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசுப் பணிகளிலும் வெளிமாநிலத்தவர்கள் 90 சதவிகிதம் புகுத்தப்பட்டுள்ளனர். முதல்வர் எடப்பாடியும், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனும் இதை செயல்படுத்தியுள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த பதிவு 2019 மே 4ம் தேதி தற்சார்பு ‘தமிழ்நாடு – Made in TamilNadu’ என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இது உண்மைத் தன்மையை தெரியாமல் ஏராளமானோர் பகிர்ந்துள்ளனர்.

உண்மை அறிவோம்:

தமிழ்நாடு அரசுப் பணியில் பிற மாநிலத்தவர்களும் சேரலாம் என்று சட்ட மாற்றம் 2016 நவம்பரில் நடந்ததாகக் கூறப்பட்டுள்ளது. அப்போது தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தார். உடல்நலக் குறைவு காரணமாக அவர் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 2016 அக்டோபர் 11ம் தேதி ஜெயலலிதா வகித்த துறைகள் அனைத்தும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மாற்றி அப்போது தமிழக பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டார். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இதன்பிறகு, நவம்பரில் சட்ட மாற்றம் நடந்ததாகக் கூறப்பட்டுள்ளது. அந்தக் காலகட்டத்தில் தமிழக அரசு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையில் ஏதேனும் அரசாணை (ஜி.ஓ) வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். நவம்பரில் மூன்று அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், எதுவும் டி.என்.பி.எஸ்.சி தொடர்பானவை இல்லை.  

TN GOVT 2.png

தமிழக அரசு பணிகளில் பிற மாநிலத்தவர்கள் சேருவதற்கான சட்ட திருத்தம் தொடர்பாக செய்தி ஏதேனும் வெளியாகி உள்ளதா என்று கூகுளில் தேடினோம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவுதான் கிடைத்தது. அரசு சட்ட திருத்தம் தொடர்பான எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை.

TN GOVT 3.png

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தைத் தொடர்புகொண்டு பேசினோம். நம்மிடம் பேசிய அதிகாரி ஒருவர்,  “பிற மாநிலத்தவர்கள் டி.என்.பி.எஸ்.சி போட்டி தேர்வுகளில் பங்கேற்க, தமிழக அரசு பணியில் சேர 2016ல் சட்ட மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. தமிழக அரசுப் பணிகளில் 69 சதவிகித இட ஒதுக்கீடு முழுமையாகப் பின்பற்றப்படுகிறது. மீதம் உள்ள 31 சதவிகிதம் பொது இடங்களுக்கு யார் வேண்டுமானாலும் போட்டிப்போடலாம். அதற்காக பிற மாநிலத்தவர்கள் எல்லாம் பங்கேற்க முடியாது. தமிழக அரசு பணிகளில் சேர வேண்டும் என்றால், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழை மொழிப் பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டும் என்பது உள்பட சில விதிமுறைகள் உள்ளன. தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணிகளில் 90 சதவிகிதம் வெளிமாநிலத்தவர்கள் புகுத்தப்பட்டது பற்றி எங்களுக்குத் தெரியாது. அதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை” என்றார்.

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணிகளில் 90 சதவிகிதம் வெளிமாநிலத்தவர்கள் நியமிக்கப்பட்டது தொடர்பாக செய்தி ஏதேனும் வெளியாகி உள்ளதா என்று கூகுளில் தேடினோம். அப்போது, ரயில்வே, வருமான வரித்துறையில் 90 சதவிகிதம் பேர் வெளிமாநிலத்தவர்கள் என்று வைகோ மற்றும் வேல்முருகன் வெளியிட்ட அறிக்கைகள் கிடைத்தன.

TN GOVT 4.png

மார்ச் மாதம் 1ம் தேதி ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டிருந்த அறிக்கையில், “ரயில்வேயில் வேலைவாய்ப்பு விளம்பரத்தில் சில குளறுபடிகளைச் செய்து தமிழக மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, வட மாநிலத்தவர்கள் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் தமிழக அரசு மத்திய அரசுக்கு குற்றேவல் கொத்தடிமையாக செயல்படுவதால் இந்த விபரீதத்தைத் தடுக்கின்ற முதுகெலும்பு இல்லாத அரசாக இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு ஆகும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

அதேபோல், 2019 பிப்ரவரியில் சென்னையில் பேட்டி அளித்த தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், “சென்னை வருமான வரித்துறையில் 99 சதவிகிதம் பேர் வெளிமாநிலத்தவர்கள்தான்” என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்து கோட்டையை நோக்கி பேரணி நடத்தப்போவதாகவும் அறிவித்திருந்தார். அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

மார்ச் மாதம் அளித்திருந்த பேட்டியில், ரயில்வேயில் வட இந்தியர்களுக்கு மட்டுமே பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக, தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியலை வெளியிட்டதாக இந்து ஆங்கிலம் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பான செய்தியைப் பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

ரயில்வேயில் அதிக அளவில் வட இந்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதை கண்டித்து திருச்சி பொன்மலையில் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது பேசிய பெ.மணியரசன், “மத்திய அரசுக்குச் சொந்தமான ரயில்வே துறை, தபால்துறை, வருமானவரித் துறை மற்றும் துப்பாக்கித் தொழிற்சாலைகள் உள்ளிட்ட 18 பொதுத்துறைகளில், சமீபகாலமாகத்  தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு முற்றிலும் மறுக்கப்படுகிறது. தமிழே தெரியாத வட  மாநிலத்தவர்கள் தபால்துறைத் தேர்வின்போது தமிழில் அதிக மதிப்பெண் எடுத்த மோசடிகள் எல்லாம் அரங்கேறின. அதேபோல் இப்போது ரயில்வே துறையில் வெளிமாநிலத்தவர்களுக்கே வேலை தரப்பட்டுள்ளது. இது மிகப் பெரிய இனப் பாகுபாடு.

பொன்மலை ரயில்வே பணிமனையில் சமீபத்தில் பணி நியமனம் செய்யப்பட்ட 325 பேர்களில் ஒருவர்கூட தமிழர் இல்லை. மத்திய அரசு நிறுவனங்களில் நடத்தப்படும் தேர்வுகளில் திட்டமிட்டு தமிழர்களைத் தோல்வியடையச் செய்கிறார்கள்” என்றார். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இது தொடர்பாக சன் நியூஸ் தொலைக்காட்சியில் வெளியான செய்தி வீடியோ…

இதன் மூலம், மத்திய அரசு பணிகளில் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு கூறப்பட்டதும், அதற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றதும் தெரிகிறது. அதேசமயம், மத்திய அரசுப் பணிகளில் பிற மாநிலத்தவர்களுக்கு 90 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவதாகவும், இதில், தமிழக முதல்வர், தலைமைச் செயலாளருக்கு தொடர்பு உள்ளதாகவும் கூறப்படுவதை நிரூபிக்க போதுமான ஆதாரம் இல்லை.  இதேபோல, டிஎன்பிஎஸ்சியில் பிற மாநிலத்தவர்களுக்கு வேலை தர எந்த சட்ட திருத்தமும் செய்யப்படவில்லை. எனவே, குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவு, தவறு என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:தமிழக அரசுப் பணிகளில் பிற மாநிலத்தவர்கள் சேர சட்ட திருத்தம் செய்யப்பட்டதா?

Fact Check By: Praveen Kumar 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •