FACT CHECK: காமராஜர் நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியிட்டது மோடியா, மன்மோகன் சிங்கா… ஃபேஸ்புக் பதிவால் குழப்பம்!

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

காமராஜர் நினைவு நூறு ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

காமராஜர் உருவம் பொறித்த நூறு ரூபாய் நாணயத்தின் புகைப்படம் மற்றும் பிரதமர் மோடியின் புகைப்படம் இணைத்துப் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “நாணயமான மனிதருக்கு நாணயம் வெளியிட்ட பாரத பிரதமர் ஐயாவுக்கு பல கோடி நன்றிகள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “காங்கிரசில் இதைச் செய்ய முடிந்ததா? வீர வணக்கம் தலைவா” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை to மோடி ராஜ்யம் Modi Rajyam என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் ‎Sakthi Jo Sakthijo‎ என்பவர் 2021 ஜனவரி 6ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சில மாதங்களுக்கு முன்பு ஜன சங்கத்தை நிறுவிய தலைவர்களுள் ஒருவரான விஜயராஜே சிந்தியாவின் நினைவாக 100 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். 2018ல் வாஜ்பாய் நாணயத்தை மோடி வெளியிட்டார். ஆனால், காமராஜர் நாணயத்தை வெளியிட்டதாக நினைவில் இல்லை. எனவே, இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

காமராஜர் நாணயம் எப்போது வெளியானது, அது தொடர்பான செய்தி எதுவும் கிடைக்கிறதா என்று கூகுளில் தேடினோம். அப்போது 2004, அக்டோபர் 27ம் தேதி ஒன் இந்தியா தமிழ் வெளியிட்ட செய்தி நமக்குக் கிடைத்தது. அதில், “பெருந்தலைவர் காமராஜரின் நினைவாக 100 ரூபாய் மற்றும் 5 ரூபாய் சிறப்பு நாணயங்களை பிரதமர் மன்மோகன் சிங் இன்று வெளியிடுகிறார். அதை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பெற்றுக்கொள்கிறார்” என்று குறிப்பிட்டிருந்தனர்.

அசல் பதிவைக் காண: tamil.oneindia.com I Archive

ஆங்கிலத்தில் காமராஜர், 100 ரூபாய் நாணயம் என சில கீ வார்த்தைகளை டைப் செய்து தேடினோம். அப்போது இந்திய நாணயங்கள் தொடர்பான இணையதளங்கள், பிளாக்குகளில் இது பற்றிய தகவல் நமக்குக் கிடைத்தது.

அதில், காமராஜர் நாணயம் 2004ம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி வெளியிடப்பட்டது. மன்மோகன் சிங் வெளியிட, சோனியா காந்தி, நிதி அமைச்சர் ப.சிதம்பரம், நிதித்துறை இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

அசல் பதிவைக் காண: coinsofrepublicindia I Archive 1 I banknotecoinstamp.com I Archive 2 I numismaticscollections I Archive 3

விருதுநகர் இந்து நாடார்களின் செந்திகுமார நாடார் கல்லூரியின் இணையதளத்தில் காமராஜர் பற்றிய குறிப்பு வெளியிட்டிருந்தனர். அதிலும் கூட, காமராஜர் நினைவு நாணயம் 2004ம் ஆண்டு வெளியிடப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தனர்.

அசல் பதிவைக் காண: vhnsnc.edu.in I Archive

இதன் மூலம் காமராஜர் நினைவு நாணயத்தை மோடி வெளியிட்டார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

2004 காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் காமராஜருக்கு நாணயம் வெளியிடப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:காமராஜர் நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியிட்டது மோடியா, மன்மோகன் சிங்கா… ஃபேஸ்புக் பதிவால் குழப்பம்!

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply