பெங்களூருவில் புர்கா அணிந்து வந்த ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்: வைரல் வீடியோ உண்மையா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

பெங்களூருவில் நடக்கும் போராட்டங்களை சீர்குலைக்க முஸ்லிம் பெண் வேடத்தில் புர்கா அணிந்து வந்த ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link 1Archived Link 2

3.42 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில், புர்கா அணிந்த ஒருவரை சிலர் சுற்றிவளைத்து புர்காவை கழற்றும்படி கூறுகிறார்கள். சிறிது நேரத்தில் புர்காவை கழற்றும்போது அந்த நபர் ஆண் என்று தெரிகிறது. புர்காவை கழற்று என்று கூறுகிறார்கள்… அது இந்தி போல உள்ளது. இவர் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் என்றோ, போராட்டத்தை சீர்குலைக்க புர்கா அணிந்து வந்தார் என்றோ அதில் எதுவும் குறிப்பிடவில்லை.

நிலைத் தகவலில், “பெங்களூருவில் நடக்கும் போராட்டங்களை சீர்குலைக்க முஸ்லிம் பெண் வேடத்தில் புர்கா அணிந்து வந்த Rss தீவிரவாதி பொதுமக்களால் பிடிப்பட்ட காட்சி!” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வீடியோவை Rahmathullah Thulasiyappattinam Rahmathullah என்பவர் 2020 ஜனவரி 25 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பெங்களூருவில் இந்த நபர் கைது செய்யப்பட்டு இருந்தால் வீடியோவில் பேசுபவர்கள் கன்னடத்தில் பேசியிருக்கலாம். ஆனால், முழுக்க முழுக்க இந்தியில் உள்ளது. இதனால், இதை நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ இந்தி பிரிவில் உள்ளவர்களிடம் கொடுத்து என்ன பேசுகிறார்கள் என்று கேட்டோம். அவர்கள் இது முழுக்க முழுக்க இந்தி என்று சொல்ல முடியாது, இந்தி, மராத்தி கலந்து பேசுகிறார்கள். “முதலில் புர்காவை கழற்று என்று கூறுகிறார்கள்… பிறகு, பெண்கள் கழிவறையில் உனக்கு என்ன வேலை என்று கேட்டு அடிக்கிறார்கள்” என்றனர்.

போராட்டத்தை சீர்குலைக்க வந்தவர் என்று குறிப்பிடவில்லை, பெண்கள் டாய்லெட்டில் என்ன வேலை என்று கேட்டு அடிக்கின்றனர். பேசுகிறவர்கள் இந்தி, மராத்தியில் பேசுகிறார்கள். இவை எல்லாம் இந்த வீடியோ பெங்களூருவில் எடுக்கப்பட்டிருக்குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே, இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு மேற்கொண்டோம்.

வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். இது தொடர்பான எந்த ஒரு வீடியோவும் நமக்கு கிடைக்கவில்லை. தொடர்ந்து வேறு வேறு படங்களை அப்லோட் செய்து தேடியும் எந்த வீடியோவும் கிடைக்கவில்லை.

Search Link 1Search Link 2

புர்கா, பெண்கள் கழிப்பறை, பஸ் நிலையம் ஆகிய கீ வார்த்தைகளை வைத்து கூகுளில் தேடினோம். அப்போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ காட்சிகள் கிடைத்தது. மேலும், இந்தியா டுடே, என்.டி.டி.வி, நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட இணைய செய்தி ஊடகங்களில் 2019 பிப்ரவரி 17ல் வெளியிட்ட செய்தி ஒன்றும் கிடைத்தது. அதில், “கோவாவில் புர்கா அணிந்து பெண்கள் கழிப்பறைக்குச் சென்ற நபர் கைது” என்று குறிப்பிட்டிருந்தனர். இந்தியா டுடே வெளியிட்டிருந்த செய்தியில் கைது செய்யப்பட்ட நபர் அரசு ஊழியர் என்று குறிப்பிட்டிருந்தனர். அவரது பெயர் வெர்ஜில் போஸ்கோ பெர்னாண்டோ என்று இருந்தது. இந்த பெயர் கிறிஸ்தவ பெயராக உள்ளது. இவர் ஆர்.எஸ்.எஸ் ஊழியர் என்று எந்த ஒரு செய்தியிலும் குறிப்பிடவில்லை.

aninews.inArchived Link 1
indiatoday.inArchived Link 2
ndtv.comArchived Link 3

தேடல் முடிவில் கிடைத்த புகைப்படத்தை கிளிக் செய்து பார்த்தபோது, அது ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்த செய்தி மற்றும் புகைப்படம் என்று தெரிந்தது. அதில், “கோவாவில் 35 வயது மதிக்கத்தக்க நபர் பானாஜி பஸ நிலையத்தில் உள்ள பெண்கள் கழிப்பறையில் புர்கா அணிந்து சென்றது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார். பெண்கள் கழிப்பறையிலிருந்து வெர்ஜில் போஸ்கோ பெர்னாண்டோ என்ற நபர் புர்கா அணிந்து வெளியே வந்தபோது, சந்தேகத்தின் பேரில் விசாரித்தபோது உண்மை தெரியவந்தது. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது” என்று குறிப்பிட்டிருந்தனர்.

ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்த தலைப்பை அப்படியே யூடியூபில் டைப் செய்து தேடினோம். அப்போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ கூட நமக்கு கிடைத்தது. அதில், பனாஜி பஸ் நிலையத்தில் புர்கா அணிந்து கொண்டு பெண்கள் கழிப்பறைக்கு சென்ற நபர் கைது என்று குறிப்பிட்டிருந்தனர்.

Search LinkYoutube Link

நம்முடைய ஆய்வில்,

இந்த வீடியோ கோவாவில் உள்ள பனாஜியில் 2019ம் ஆண்டு பிப்ரவரி 17ல் எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வீடியோவிலேயே பெண்கள் கழிப்பறைக்குள் சென்றது ஏன் என்று கேட்டு அவர் மீது தாக்குதல் நடத்துவது தெரியவந்துள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், கோவாவில் புர்கா அணிந்துகொண்டு பெண்கள் கழிப்பறைக்கு சென்ற நபர் வீடியோவை எடுத்து, “பெங்களூருவில் நடக்கும் போராட்டங்களை சீர்குலைக்க முஸ்லிம் பெண் வேடத்தில் புர்கா அணிந்து வந்த Rss தீவிரவாதி பொதுமக்களால் பிடிப்பட்ட காட்சி!” என்று தவறான தகவலை சேர்த்து வெளியிட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்த பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:பெங்களூருவில் புர்கா அணிந்து வந்த ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்: வைரல் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False