
தமிழகத்தில் இலவச ரத்தப் பரிசோதனை செய்கிறோம் என்று கூறி எய்ட்ஸ் நோயை ஐ.எஸ் பயங்கரவாதிகள் பரப்பி வருவதாக தமிழக போலீஸ் வெளியிட்ட போன்ற அறிவிப்பு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived Link |
தமிழக போலீஸ் லோகோவுடன் ஒரு அறிவிப்பு வாட்ஸ் ஆப்-பில் வைரலாக பரவி வருகிறது. அதில், “Attention. எச்சரிக்கை. அவசரம்… அவசரம்…
யாராவது உங்கள் வீட்டு வாசலுக்கு வந்து நாங்கள் மருத்துவக் கல்லூரியிலிருந்து வருகிறோம். உங்கள் இரத்தத்தில் SUGAR இருக்கிறதா என இலவசமாகப் பரிசோதனை செய்து தருகின்றோம் எனக் கூறினால் உடனடியாக விரட்டுங்கள் அல்லது போலிஸ்ல் பிடித்து கொடுங்கள். அவர்கள்”ISIS இஸ்லாமிய தீவிரவாத அமைப்பினால் எச். ஐ. வி. எயிட்ஸ் வைரசைப் பரப்புவதற்காக அனுப்பி வைக்கப்பட்டவர்கள். வீட்டில் உள்ளவர்கள், அன்பர்கள், நண்பர்கள் அனைவருக்கும் வந்தபடியே பகிர்ந்து கொள்ளுங்கள்.
இப்படிக்கு:
தமிழ்நாடு காவல்துறை
நன்றி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Facebook Link | Archived Link |
இது தவிர, போட்டோ வடிவமாக இல்லாமல், முழு டெக்ஸ்ட் பதிவாகக் கூட இந்த தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
ஃபேஸ்புக்கில் டெக்ஸ்ட் பதிவாக Sri Vashnavi என்பவர் இதை 2020 ஜனவரி 28ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழகத்தில் ரத்தப் பரிசோதனை செய்ய வந்து எய்ட்ஸ் கிருமியை பரப்பியதாக எந்த ஒரு தகவலும் இல்லை. ஆனால், தமிழக போலீஸ் லோகோவோடு பதிவிடப்பட்டுள்ளது. வாட்ஸ் ஆப்பில் வந்த பதிவு ஃபேஸ்புக்கில் வைரல் ஆகி உள்ளது. இது தொடர்பாக ஃபேஸ்புக்கில் தேடியபோது ஏராளமானோர் இதை பதிவிட ஆரம்பித்திருப்பது தெரிந்தது.
கூகுளில், சுகர் டெஸ்ட் செய்ய வருவதாக கூறி எச்.ஐ.வி வைரஸ் பரப்பப்படுகிறது என்று தமிழக போலீஸ் எச்சரிக்கை என்று டைப் செய்து தேடினோம். ஆனால், அதுபோல எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.
தமிழக காவல் துறையில் உள்ள உயர் அதிகாரி ஒருவரைத் தொடர்புகொண்டு பேசினோம். வாட்ஸ் ஆப்-ல் வந்ததை அவருக்கு ஃபார்வர்டு செய்து அது பற்றி கருத்து தெரிவிக்கும்படி கேட்டோம். அப்போது அவர் “இது வதந்தி. இதைப் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். இந்த புகைப்படத்தை சென்னை போலீஸ் கமிஷனருக்கு அனுப்பி அவருடைய கருத்தைக் கேட்டோம். ஆனால், எந்த பதிலையும் அவர் கூறவில்லை.
இந்த புகைப்படத்தை தமிழ்நாடு காவல் துறைக்கு அனுப்பி அவர்களின் கருத்தைக் கேட்டோம். ஆனால், அவர்களும் பதில் கூறவில்லை. நாம் அனுப்பியதற்கு சில நாட்கள் கழித்து அவர்களுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த புகைப்படத்தை வெளியிட்டு வதந்தி என்று குறிப்பிட்டிருந்தனர்.
Facebook Link | Archived Link |
வேறு மாநிலத்தில் இதுபோன்ற சம்பவம் நடந்ததா, அதை மாற்றி இங்கே வெளியிட்டுள்ளார்களா என்று அறிய கூகுளில் தேடினோம். அப்போது, உத்தரப் பிரதேசத்தில் இதேபோன்று வதந்தி பரப்பி வருவதாகவும் உத்தரப்பிரதேச போலீஸ் இதுபோன்று எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்று ட்வீட் வெளியிட்டுள்ளதாகவும் இந்தியா டுடே வெளியிட்ட செய்தி கிடைத்தது. இதன் மூலம், இந்த வதந்தி பல மாநிலங்களில் பரவி வருவது தெரிந்தது.
indiatoday.in | Archived Link |
நம்முடைய ஆய்வில்,
தமிழக காவல் துறை சார்பில் இந்த எச்சரிக்கை வெளியிட்டதற்கான செய்தி ஏதும் கிடைக்கவில்லை.
காவல்துறை அதிகாரி இது வெறும் வதந்தி என்று உறுதி செய்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் இதேபோன்று வதந்தி பரவி வந்ததும், அதை போலீசார் மறுத்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், ஐ.எஸ் பயங்கரவாதிகள் தமிழகத்தில் எய்ட்ஸ் கிருமியை பரப்பி வருவதாக தமிழக போலீஸ் எச்சரிக்கை வெளியிட்டது என்று பகிரப்பட்டுவரும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:ஐஎஸ் பயங்கரவாதிகள் எய்ட்ஸ் கிருமியை பரப்புவதாக தமிழக போலீசார் எச்சரிக்கை வெளியிட்டனரா?
Fact Check By: Chendur PandianResult: False
