ஆஸ்திரேலியாவில் வனப்பகுதியில் பரிதவிக்கும் கோலா கரடிக் குட்டிகளுக்கு நரி பாலூட்டியதா?

ஆஸ்திரேலியா உலகச் செய்திகள்

‘’ஆஸ்திரேலியாவில் வனப்பகுதியில் பரிதவிக்கும் கோலா கரடிக்குட்டிகளுக்கு நரி பாலூட்டிய வியப்பான காட்சி,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

Vanakkam Chennai

எனும் ஃபேஸ்புக் ஐடி, ஜனவரி 28, 2020 அன்று இந்த பதிவை பகிர்ந்துள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்வதை காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட புகைப்படத்தை கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இதுதொடர்பாக நிறைய செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை காண நேரிட்டது.

முதலில், 2018ம் ஆண்டு யூ டியூப்பில் பதிவேற்றப்பட்ட ஒரு வீடியோவை பார்வையிட்டோம். ஆனால், அதில், குரங்குகளுக்கு பால் தரும் நரி, அரிய வீடியோ காட்சி எனக் குறிப்பிட்டிருந்தனர். உள்ளே, நாம் ஆய்வு செய்யும் புகைப்படம் பற்றிய வீடியோ காட்சிதான் இருந்தது.

நாம் சந்தேகப்படும் ஃபேஸ்புக் பதிவில் இது கோலா கரடிகள் எனக் கூற, இந்த வீடியோவிலோ குரங்குக் குட்டிகள் எனக் கூறி குழப்பத்தை மேலும் அதிகப்படுத்திவிட்டனர்.

எனவே, இதற்கடுத்து கண்ணில் சிக்கிய மற்றொரு வீடியோ காட்சியை பார்வையிட்டோம். அப்போது, இதை விட ஒரு பழைய வீடியோவை காண நேரிட்டது. அதில், நரி தனது குட்டிகளுக்கு பால் தரும் காட்சி எனக் குறிப்பிட்டிருந்தனர்.

இதையடுத்து, இதே காட்சிகளுடன் பிரெஞ்ச் மொழியில் வெளியிடப்பட்டிருந்த மற்றொரு வீடியோவை கண்டோம். அதில் ‘Renards roux- Tétée‘ என்று தலைப்பு எழுதப்பட்டிருந்தது. இதனை கூகுள் உதவியுடன் மொழிபெயர்ப்பு செய்து பார்த்ததில், ‘Red Foxes – Feeding‘ என அர்த்தம் கிடைத்தது.

எனவே, இது நரி தனது குட்டிகளுக்கு பால் தரும் காட்சிதான் என்று தெளிவாகிறது. இதுதவிர, இறுதியாக, மேலே உள்ள பிரெஞ்ச் மொழி யூடியுப் பக்கத்திலேயே மற்றொரு வீடியோவும் இதுதொடர்பாக பகிரப்பட்டதை கண்டோம். அதில், இந்த வீடியோவில் இருப்பவை நரிகள்தான் என்பதை தெளிவுப்படுத்தும் வகையிலான காட்சி ஆதாரம் கிடைத்தது. 

அந்த முழு வீடியோ காட்சியை கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம். 

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,

1) மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள புகைப்படம் தொடர்பான உண்மை வீடியோ ஆதாரம் கிடைத்துள்ளது. இதன்மூலமாக, இது பல ஆண்டுகளாக இணையத்தில் பகிரப்படுவதாக தெளிவாகிறது.
2) இதில் இருப்பவை கோலா கரடிக்குட்டிகள் கிடையாது. அவை, நரியின் குட்டிகள்தான்.
3) ஆனால், உலகை உலுக்கிய ஆஸ்திரேலிய தீ விபத்துச் சம்பவங்கள், சமீபத்தில் நிகழ்ந்தவை ஆகும், இன்றளவும் தீ கட்டுப்பாட்டில் வரவில்லை. அதற்கும், மேற்கண்ட நரி தொடர்பான காட்சிகளுக்கும் தொடர்பில்லை.
4) இந்த வதந்தி தொடர்பாக ஏற்கனவே இந்தியா டுடே உள்ளிட்ட ஊடகங்கள் உண்மை கண்டறியும் சோதனை செய்து முடிவுகளை சமர்ப்பித்துள்ளன.

IndiaToday News LinkSnopes.com Link 

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் புகைப்பட பதிவு தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:ஆஸ்திரேலியாவில் வனப்பகுதியில் பரிதவிக்கும் கோலா கரடிக் குட்டிகளுக்கு நரி பாலூட்டியதா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False