மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் காரில் கோடிக்கணக்கான பணம் பறிமுதல்?

அரசியல் சமூக வலைதளம்

‘’மத்திய அமைச்சர் பொன்னாரின் காரில் கோடிக்கணக்கான பணம் பறிமுதல்,’’ என்ற தலைப்பில் ஒரு பதிவை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதுவரை 6,700 பேர் இந்த பதிவை ஷேர் செய்துள்ளனர். எனவே, இதன் உண்மைத்தன்மையை அறிய முடிவு செய்தோம்.

தகவலின் விவரம்:
பொன்னாரின் காரில் கோடிக்கணக்கான
பணம் பறிமுதல்

என்னடா இது #வாழும் காமராஜருக்கு
வந்த சோதனை??

Archive Link

இந்த பதிவில், ‘’பொன்னாரின் காரில் கோடிக்கணக்கான பணம் பறிமுதல்… என்னடா இது #வாழும் காமராஜருக்கு வந்த சோதனை,’’ என்று கூறி, அத்துடன், பொன்.ராதாகிருஷ்ணன் காரை திறந்து சிலர் சோதனையிடுவது போன்ற புகைப்படத்தையும் இணைத்து பகிர்ந்துள்ளனர்.

உண்மை அறிவோம்:

மத்திய இணை அமைச்சராக உள்ள பொன்.ராதாகிருஷ்ணன், தற்போது கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின், பாஜக உறுப்பினராகச் செயல்பட்டு வருகிறார். இவர், தமிழக பாஜக.,வில் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவர் ஆவார். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தேர்தல் 2019லும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில், பாஜக வேட்பாளராக, பொன்.ராதாகிருஷ்ணனே களமிறக்கப்பட்டுள்ளார். தற்சமயம் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இவரை பற்றி சமீபத்தில் விகடன் இணையதளம் வெளியிட்ட தேர்தல் சிறப்பு செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இந்நிலையில், இவரது காரை மடக்கி சோதனையிட்ட பறக்கும் படையினர் கோடிக்கணக்கான பணத்தை பறிமுதல் செய்ததாகக் கூறப்படும் செய்தி நமக்கு திடீர் வியப்பை ஏற்படுத்தியது. காரணம், எளிமையின் அடையாளமாக வலம் வரும் பொன்.ராதாகிருஷ்ணன், கட்சிப் பணிக்காக, திருமணம் கூட செய்துகொள்ளாத நபர் ஆவார். அப்படிப்பட்டவர் காரில் இருந்து, பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுவதில் நம்பிக்கை வரவில்லை. காரணம், பொன்.ராதாகிருஷ்ணன் இருக்கும் புகைப்படத்திற்கும், ரூ.2.16 கோடி கைபற்றல் என உள்ள செய்திக்கும் இடையே, கோடு ஒன்று போட்டு, இரண்டையும் தனித்தனி செய்தியாக பிரித்து அடையாளம் காட்டியுள்ளனர். எனவே, இது இரண்டும் வெவ்வேறு நிகழ்வுகள் என உறுதியாகிறது. ஆதார படம் கீழே தரப்பட்டுள்ளது.

இதையடுத்து, Yandex இணையதளத்தில் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அதில், இந்த புகைப்படம் உண்மையானதுதான் என தெரியவந்தது.  

பின்னர், அந்த பதிவில் கூறப்பட்டுள்ள தேதியின்படி, ஏப்ரல் 3ம் தேதியன்று பொன்.ராதாகிருஷ்ணன் பேரில் வில்லுக்குறி பகுதியில் எதுவும்  சோதனை நடந்ததா என்று கூகுளில் தேடிப் பார்த்தோம்.

இதில், ஏராளமான செய்திகள் கிடைத்தாலும், நாம் தினமலரின் செய்தியை ஆதாரமாக எடுக்க முடிவு செய்தோம். தினமலர் செய்தியின் குறிப்பிட்ட இணைப்பை கிளிக் செய்து பார்த்தபோது, கடந்த ஏப்ரல் 3ம் தேதி வெளியான அந்த செய்தியில், நாம் சந்தேகப்படும் பதிவில் உள்ள அதே புகைப்படம் இடம்பெற்றிருந்தது. ஆனால், செய்தி வேறு ஒன்றாக இருந்தது. மத்திய அமைச்சர் என்றும்கூட பார்க்காமல், பொன்.ராதாகிருஷ்ணனின் காரை அதிகாரிகள் சோதனையிட்டதாக, அதில் கூறப்பட்டிருந்தது. செய்தியின் விவரம் அறிய இங்கே கிளிக் செய்யவும். ஆதார புகைப்படம் கீழே தரப்பட்டுள்ளது.

Archive Link

இதேபோல, ஏப்ரல் 3ம் தேதியன்று ‘வாகன சோதனையில் ரூ.2.16 கோடி பறிமுதல்’ என்ற செய்தி உண்மையா என கூகுளில் தேடினோம். அதில், கன்னியாகுமரியில் இதுவரை ரூ.2.16 கோடி வாகனச் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டதாக, கடந்த ஏப்ரல் 3ம் தேதியன்று பதிவிடப்பட்ட தினமணியின் செய்தி ஆதாரம் கிடைத்தது. ஆதார படம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இந்த தவறான பதிவை வெளியிட்ட நபரின் ஃபேஸ்புக் புரொஃபைல் சென்று பார்த்தோம். அவர் பதிவிடும் பதிவுகள், கவர் ஃபோட்டோ உள்ளிட்டவற்றின் அடிப்படையில் அவர் ஒரு திமுக ஆதரவாளர் என தெரியவருகிறது. தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காக, அவர் இத்தகைய பதிவை சித்தரித்து வெளியிட்டுள்ளதும் உறுதியாகிறது.

இதன்படி நமக்குத் தெரியவந்த உண்மையின் விவரம்,
1) குறிப்பிட்ட 2 சம்பவங்களும், கடந்த ஏப்ரல் 3ம் தேதியன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்துள்ளன. எனவே, இவற்றை அருகருகே வைத்து, நாளிதழ்களில் செய்தி வெளியிட்டுள்ளனர்.
2) எனினும், இவற்றை ஒரு கோடு போட்டு, தனித்தனி செய்தி என சம்பந்தப்பட்ட நாளிதழின் எடிட்டோரியல் பிரிவு அடையாளம் காட்டியுள்ளது.
3) ஆனால், இதை புரிந்துகொள்ளாமல், இவற்றை ஒரே சம்பவமாக, சித்தரித்து, தவறான முறையில் மேற்கண்ட பதிவை பகிர்ந்துள்ளனர்.

முடிவு:

உரிய ஆதாரங்களின்படி, இது ஒரு தவறான பதிவு என்று உறுதி செய்யப்படுகிறது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய நம்பகத்தன்மை இல்லாத வீடியோ, செய்தி, புகைப்படங்கள் எதையும் உறுதிப்படுத்தாமல், மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்த விசயம் பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

Avatar

Title:மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் காரில் கோடிக்கணக்கான பணம் பறிமுதல்?

Fact Check By: Parthiban S 

Result: False