FACT CHECK: அம்பானி பேரனை பார்க்க மருத்துவமனை சென்ற மோடி?- பழைய படம்!

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

அம்பானி பேரனை பார்க்க மருத்துவமனைக்கு சென்ற மோடி என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் ஐ.சி.யு வார்டில் பிரதமர் மோடி, அம்பானி, நீடா அம்பானி, தமிழக ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்தவரும் மகாராஷ்டிரா ஆளுநராக இருந்தவருமான வித்யாசாகர் ராவ் உள்ளிட்டவர்கள் இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது.

நிலைத் தகவலில், “போராடும் விவசாயிகளை பார்க்க நேரமில்லை. அம்பானி பேரனை பார்க்க மருத்துவமனைக்கே செல்ல நேரமிருக்கு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

விவசாயிகள் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் சூழலில் அம்பானிக்கு பேரன் பிறந்துள்ளான் என்பதால் மருத்துவமனைக்கே சென்று பார்த்த மோடி என்று கூறி பலரும் இந்த படத்தை ஷேர் செய்து வருகின்றனர்.

முகேஷ் அம்பானிக்கு பேரன் பிறந்ததாக டிசம்பர் 10, 2020 அன்று செய்தி வெளியானது. கொரோனா பரவல் ஊரடங்குக்குப் பிறகு மோடி மிக நீண்ட தாடி மீசையை வளர்த்து வருகிறார். ஆனால், இந்த படத்தில் மோடி குறுந்தாடியோடு இருக்கிறார். தற்போது மோடி வெளியாகி வரும் படங்கள், வீடியோக்களில் தாடியுடனே அவர் இருக்கிறார்.

அசல் பதிவைக் காண: Twitter I Archive

மேலும் மகாராஷ்டிரா ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் உள்ளார். அவர் 2019ம் ஆண்டிலேயே பணி நிறைவு பெற்றுவிட்டார். தற்போது மகாராஷ்டிரா ஆளுநராக பகத் சிங் கோஷ்யாரி உள்ளார். எனவே, பழைய படத்தை எடுத்து தற்போது நிகழ்ந்தது போல பதிவிட்டிருப்பது தெரிந்தது. 

இதை உறுதி செய்வதற்காக படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த புகைப்படம் 2014ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்று பல பதிவுகள் நமக்கு கிடைத்தன. முகேஷ் அம்பானி மும்பையில் கட்டியுள்ள மருத்துவமனையை 2014ம் ஆண்டு பிரதமர் மோடி திறந்து வைத்தபோது எடுத்த படம் என்று 2014 அக்டோபர் 25ல் வெளியான செய்திகளில் இந்த புகைப்படம் இருந்தது.

அசல் பதிவைக் காண: indiatoday.in I Archive 1 I deccanchronicle.com I Archive 2

இதன் மூலம், 2014ம் ஆண்டு அம்பானியின் மருத்துவமனையை மோடி திறந்துவைத்தபோது எடுத்த படத்தை, தற்போது அம்பானியின் பேரனை பார்க்க மோடி சென்றார் என்று தவறான தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் இந்த பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

அம்பானியின் பேரனை பார்க்க சென்ற மோடி என்று பகிரப்படும் படம் தவறானது என்று தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது.  எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:அம்பானி பேரனை பார்க்க மருத்துவமனை சென்ற மோடி?- பழைய படம்!

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •