இயேசுவை பிரார்த்திக்க சொன்னாரா முதல்வர் எடப்பாடி பழனிசாமி?- ஃபேஸ்புக் வதந்தி

Coronavirus அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’கொரோனா வைரஸ் தொடர்பாக வதந்திகளை நம்ப வேண்டாம். அனைவரும் இயேசுவிடம் பிரார்த்தனை செய்யுங்கள்,’’ என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

தமிழக முதலமைச்சர் படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி கொரானா தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம். சுகாதாரத்துறை தகவல்களை தவிர வேறு எதையும் மக்கள் நம்ப வேண்டாம். மக்கள் அனைவரும் இயேசுவிடம் பிரார்த்தனை செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று உள்ளது. 

யாரோ ஒருவர் ஷேர் செய்ததை ஸ்கிரீன் ஷாட் எடுத்து பதிவிட்டுள்ளனர். இந்த பதிவை, Pandiya Raj என்பவர் 2020 மார்ச் 10 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்த நியூஸ் கார்டை உண்மை என்று நம்பி பலரும் வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில் ஷேர் செய்து வருகின்றனர். இதை பார்க்கும்போதே நமக்கு போலியானது என்று தெரிகிறது. ஆனால், இது உண்மையா என்று நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் பிரிவை பலரும் கேட்டுக்கொண்டதால் அது பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

இந்த நியூஸ் கார்டில் உள்ள தமிழ் எழுத்து ஃபாண்ட் வழக்கமான புதிய தலைமுறை நியூஸ் ஃபாண்ட் போல இல்லை. மேலும், பின்னணி டிசைன், லோகோ, வாட்டர் மார்க் எதுவும் இல்லை. நிறுத்தல் குறியே இல்லாமல் வாக்கியம் அமைக்கப்பட்டுள்ளது. இயேசு என்ற சொல் மட்டும் தனி நிறம் செய்து வேறுபடுத்தி காட்டப்பட்டுள்ளது. இவை எல்லாம் இந்த நியூஸ் கார்டு போலியாக உருவாக்கப்பட்டது என்பதை உறுதி செய்தன. அதற்கான ஆதாரங்களைத் தேடினோம்.

மார்ச் 9ம் தேதி கொரோனா பாதிப்பு தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதன் பிறகு சமூக ஊடகங்களில் வதந்தி பரவுவது பற்றி தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டி  மற்றும் புதிய தலைமுறை வெளியிட்ட அசல் நியூஸ் கார்டை தேடினோம்.

புதிய தலைமுறையின் ஃபேஸ்புக் பக்கத்துக்கு சென்று மார்ச் 9ம் தேதி அது வெளியிட்ட நியூஸ் கார்டுகளைப் பார்த்தோம். அப்போது நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது போன்ற, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி படத்துடன் கூடிய பதிவு நமக்கு கிடைத்தது.

அதில், “தமிழகத்தில் கொரோனா தொற்று பரவாமல் தடுப்பது குறித்து தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள், தலைமைச் செயலர் உள்ளிட்டோருடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடுத்து எடிட் செய்து வெளியிட்டிருப்பது தெரிந்தது.

Facebook LinkArchived Link

சமூக வலைத்தளங்களில் வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி பேட்டி ஏதும் அளித்துள்ளாரா என்று தேடினோம். ஆனால், ஆலோசனை கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர்தான், சமூக ஊடகங்களில் வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம், சுகாதாரத் துறை தகவல்களை தவிர வேறு எதையும் நம்ப வேண்டாம் என்று கூறிய தகவல் கிடைத்தது. 

tamil.news18.comArchived Link  1
tamil.oneindia.comArchived Link  2

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், கொரோனா பாதிப்பிலிருந்து தப்பிக்க இயேசுவிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்று எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டதாக பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:இயேசுவை பிரார்த்திக்க சொன்னாரா முதல்வர் எடப்பாடி பழனிசாமி?- ஃபேஸ்புக் வதந்தி

Fact Check By: Chendur Pandian 

Result: False