
திரவுபதி பட துணை நடிகர் ரிஸ்வான் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட புகாரில் கைது செய்யப்பட்டார். ஆனால், இந்த கைது சம்பவத்தை மையமாக வைத்து சமூக ஊடகங்களில் ஜாதி ரீதியான மோதலை ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டு பகிரப்படும் வதந்திகளைக் காண நேரிட்டது. அவற்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

மேற்குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவை முதலில் நாம் விளையாட்டாகவே கருதினோம். ஆனால், இந்த பதிவை பகிர்ந்த நபர் இதுபற்றி தொடர்ச்சியாக தவறான தகவலை பரப்பி வருவதாக எமது வாசகர் ஒருவர் முறையீடு செய்தார். இதையடுத்து, நாமும் குறிப்பிட்ட ஃபேஸ்புக் பக்கத்தை பார்வையிட்டோம்.
உண்மை அறிவோம்:
சரண் அசோக் என்ற அந்த நபர் வெளியிட்டிருந்த ஒவ்வொரு பதிவுமே ஜாதி ரீதியான மோதலை ஊக்குவிக்கும் வகையில் இருந்தது. ‘’திரவுபதி படத்தில் நடித்ததால், அதன் இயக்குனர் மோகன் கூறித்தான் இந்த நடிகர் கள்ளச்சாராயம் காய்ச்சியிருப்பார்; அக்னி சட்டியில் இருந்து பிறந்த ஷத்ரியர்கள் இப்படித்தான் கள்ளச்சாராயம் காய்ச்சுவார்கள்; வன்னியன், தேவன் போன்ற ஜாதியினர் எல்லாம் கள்ளச்சாராயம் காய்ச்சுவதில் நிபுணர்கள்; மஞ்சள் பனியன் (வன்னியர்) போட்டுக் கொண்டு கள்ளச்சாராயம் காய்ச்சியவர்,’’ என திரும்ப திரும்ப இந்த நபர் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரை வெளிப்படையாகவே தாக்கி பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டிருந்த பதிவுகளில் சிலவற்றை ஆதாரத்திற்காக கீழே இணைத்துள்ளோம்.

Facebook Claim 1 | Archived Link |
Facebook Claim 2 | Archived Link |
Facebook Claim 3 | Archived Link |
Facebook Claim 4 | Archived Link |
Facebook Claim 5 | Archived Link |
எனவே, இந்த நபர் அன்றாட நடப்புகளை விமர்சிக்கிறேன் என்ற பெயரில் தனிப்பட்ட சுய அரசியல் லாபத்திற்காக தொடர்ந்து, வன்னியர் ஜாதி மற்றும் இயக்குனர் மோகனை குறிவைத்து பதிவிடுகிறார் என்று தெளிவாகிறது.
அன்றாட நடப்புகளை விமர்சிப்பது தவறில்லை. ஆனால், என்ன நடந்தது என்ற விவரம் கூட தெரியாமல் இவர் தொடர்ச்சியாக தவறான தகவலை பதிவிட்டு வருகிறார்.
அதாவது, கைது செய்யப்பட்ட நபர் வன்னியர் ஜாதியை சேர்ந்தவர் கிடையாது. மேலும், அவர் இயக்குனர் மோகன் சொல்லித்தான் இதைச் செய்தார் என்பது தவறு. இது மட்டுமல்ல, அவர் கள்ளச்சாராயம் காய்ச்சவில்லை; அவர் சட்டவிரோதமாக மதுபானத்தை பதுக்கி வைத்து விற்றுள்ளார். ரொம்ப முக்கியமாக கைது செய்யப்பட்ட அந்த நபரின் பெயர் ரிஸ்வான்.
இதுதொடர்பாக பல முன்னணி ஊடகங்களிலும் ஏற்கனவே தெளிவான செய்தி வெளியாகியுள்ளது. அவற்றை சரியாக படிக்காமல் தனிப்பட்ட வன்மத்தின் பேரில் சமூக ஊடகங்களில், குறிப்பிட்ட நபரை வன்னியராகச் சித்தரித்து, வதந்தி பரப்பி வருகின்றனர் என்பது சந்தேகமின்றி உறுதியாகிறது.

இந்த விவகாரம் பற்றி தெரியவந்ததும் இதனை கண்டித்து திரவுபதி படத்தின் இயக்குனர் மோகன் ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார். அதனையும் கீழே இணைத்துள்ளோம்.

இறுதியாக, கிஷோர் கே சுவாமி என்பவர் வெளியிட்டிருந்த ஒரு பதிவையும் கீழே இணைத்துள்ளோம். இத்தகைய வதந்தியை முதலில் பரப்பியவர் சவுக்கு சங்கர் என்றும், இதே ரிஸ்வான் இயக்குனர் ரஞ்சித் உடன் பழகியவர் என்பதால் அவரை தலித் என்று கூறினால் ஏற்புடையதா? என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம் இதோ…
1) திரவுபதி படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்த ரிஸ்வான் என்பவர் மதுபானத்தை பதுக்கி வைத்து விற்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
2) அவர் வன்னியர் அல்ல; அத்துடன் கள்ளச்சாராயம் காய்ச்சவில்லை. இதுபற்றி திரவுபதி பட இயக்குனர் என்ற முறையில் மோகன் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
3) இதே ரிஸ்வான் பா.ரஞ்சித் போன்றவர்களின் படங்களில் கூட நடித்துள்ளதாகக் கூறுகிறார்கள்.
4) ஒரு தனிப்பட்ட நபர் செய்த தவறுக்கு மொத்த வன்னியர் ஜாதியையும், இயக்குனர் மோகனையும் தொடர்புபடுத்தி வேண்டுமென்றே தவறான தகவலை பரப்பியுள்ளனர்.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:திரவுபதி பட துணை நடிகர் ரிஸ்வான் கைது பற்றி திட்டமிட்டு பகிரப்படும் வதந்தி!
Fact Check By: Pankaj IyerResult: False
