ஐஸ்லாந்து நாட்டுப் பெண்ணை திருமணம் செய்தால் மாதம் 3.5 லட்சம் நிதி உதவி என பரவும் வதந்தி!

சமூக ஊடகம் சமூகம் சர்வதேசம்

ஐஸ்லாந்து நாட்டுப் பெண்களை திருமணம் செய்யும் வெளிநாட்டு ஆண்களுக்கு, அந்நாட்டு அரசு மாதம் 3.5 லட்சம் நிதி உதவி செய்கிறது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

நியூஸ் கார்டு ஒன்றை வீடியோவாக மாற்றி பதிவிடப்பட்டுள்ளது. அதில், “Iceland-நாட்டில் ஆண்கள் பற்றாக்குறை காரணமாக ஐஸ்லேண்ட் பெண்களை திருமணம் செய்யும் வெளிநாட்டினருக்கு மாதம் 3.5 லட்சம் பணம் வழங்க அந்த நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வீடியோ பதிவு கைப்புள்ள வண்டிய எடுடா என்ற ஃபேஸ்புக் குழு பக்கத்தில் 2022 டிசம்பர் 30ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது. இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

திருமணம் செய்தால் மாதம் தோறும் நிதி உதவி செய்யப்படும் என்று ஐஸ்லாந்து அரசு அறிவித்ததாக பலரும் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், அப்படி அந்நாட்டு அரசு அறிவித்ததற்கான அறிவிப்பை யாரும் வெளியிடவில்லை. ஏதோ நையாண்டிக்கு வெளியிட்ட பதிவு போல இருந்ததால் இந்த தகவல் உண்மைதானா என்று ஆய்வு செய்தோம்.

கூகுளில் “ஐஸ்லாந்து பெண்ணை திருமணம் செய்தால் அந்நாட்டு அரசு நிதி உதவி செய்கிறது” என்று ஆங்கிலத்தில் டைப் செய்து தேடினோம். அப்போது, அந்த நாட்டு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலேயே இந்த தகவல் தவறானது என்று குறிப்பிட்டு பதிவு வெளியிட்டிருப்பது தெரிந்தது.

உண்மைப் பதிவைக் காண: government.is I Archive

ஐஸ்லாந்து அரசின் இணையதளத்தில் FAQ பக்கத்தில் இது தொடர்பான கேள்வி ஒன்று கேட்கப்பட்டு அதற்கு பதிலும் அளிக்கப்பட்டிருந்தது. அதில், “ஐஸ்லாந்து பெண்களை திருமணம் செய்யும் ஆண்களுக்கு நிதி உதவி செய்யப்படுமா?” என்ற கேள்விக்கு “இந்த வதந்தியில் துளி கூட உண்மையில்லை. இது போலியான செய்தி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் முழு விவரம் அறிய ஒரு இணைப்பைக் கொடுத்திருந்தனர். 

அதை சொடுக்கு செய்து பார்த்த போது, icelandmonitor.mbl.is என்ற இணையதளத்தில் 2016ம் ஆண்டு வெளியான கட்டுரை ஓப்பன் ஆனது. அதில், ஐஸ்லாந்து பெண்களை திருமணம் செய்யும் ஆணுக்கு 5000 டாலர் வழங்கப்படும் என்று வதந்தி பரவி வருகிறது. இது தொடர்பாக ஐஸ்லாந்து நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் கூறுகையில் இது தொடர்பாக வெளிநாடுகளில் உள்ள ஐஸ்லாந்து தூதரகங்களில் பலரும் விளக்கம் கேட்டு வந்தபடி உள்ளனர். ஆனால் இந்த தகவல் உண்மையில்லை. இது வெறும் வதந்தி என்று கூறினர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: icelandmonitor.mbl.is I Archive 1 I icelandmonitor.mbl.is I Archive 2

ஐஸ்லாந்து நாட்டுப் பெண்களை திருமணம் செய்யும் வெளிநாட்டு ஆண்களுக்கு நிதி உதவி செய்யப்படும் என்று பரவும் தகவல் தவறானது என்று ஐஸ்லாந்து அரசே விளக்கம் அளித்துள்ளது. அதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ஐஸ்லாந்து பெண்களை திருமணம் செய்யும் வெளிநாட்டு ஆண்களுக்கு அந்நாட்டு அரசு நிதி உதவி செய்ய முடிவு என்று பரவும் தகவல் தவறானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ஐஸ்லாந்து நாட்டுப் பெண்ணை திருமணம் செய்தால் மாதம் 3.5 லட்சம் நிதி உதவி என பரவும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian 

Result: False

Leave a Reply