அரசு வழங்கிய பள்ளிக்கூட பேகில் தி.மு.க ஸ்டிக்கர் ஒட்டி வழங்கியது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

EPS போட்டோவே இருக்கட்டும்.. பெருந்தன்மை காட்டிய முதல்வர்... என சில மாதங்களுக்கு முன்பு வெளியான நியூஸ்கார்டை பயன்படுத்தி பதிவு தயாரிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக அதில், புளுகுமூட்டை திமுக என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த படத்துக்கு கீழ் தி.மு.க ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஸ்கூல் பேக்களை கனிமொழி வழங்கும் புகைப்படம் சேர்க்கப்பட்டுள்ளது. நிலைத் தகவலில் "அன்று சில்லறையை சிதற விட்டவர்கள் கவனத்திற்கு" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை Annamalai For Youth என்ற ஃபேஸ்புக் பக்கம் 2021 டிசம்பர் 30ம் தேதி பதிவிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கடந்த அ.தி.மு.க ஆட்சியின் போது பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக 65 லட்சம் இலவச புத்தகப்பைகள் (School Bag) தயாரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. அவற்றில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் படங்கள் இருந்தன. புதிதாக பதவிக்கு வந்த தி.மு.க அரசு அந்த புத்தகப்பையைத் தொடர்ந்து மாணவர்களுக்கு வழங்குவோம். ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படத்துக்கு மேல் ஸ்டிக்கர் ஒட்ட மாட்டோம் என்று கூறியது. இது அப்போது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் கனிமொழி அரசு வழங்கிய பள்ளி புத்தகப் பைகளில் தி.மு.க ஸ்டிக்கர் ஒட்டி வழங்கிவிட்டார் என்ற வகையில் விமர்சனம் செய்து பலரும் பதிவிட்டு வருகின்றனர். எனவே, இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

Archived

கனிமொழி புத்தகப்பை வழங்கும் புகைப்படத்தைத் தனியாகத் தேடினோம். அவருடைய ட்விட்டர் பக்கத்தைப் பார்வையிட்டோம். அப்போது டிசம்பர் 28, 2021 அன்று இந்த படத்தை கனிமொழி வெளியிட்டிருந்தார். அதில், "திருவள்ளூர் மேற்கு மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் திருமிகு. G. கோவிந்தம்மா அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று 500 மகளிருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்" என்று குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் கனிமொழி அரசு வழங்கிய புத்தகப்பையை வழங்கவில்லை என்பது உறுதியானது.

Archived

கனிமொழி, தி.மு.க எம்.எல்.ஏ வி.ஜி.ராஜேந்திரன் உள்ளிட்டோர் ஷேர் செய்திருந்த படங்களில் பின்னணி பேனரைப் பார்த்த போது, "திருவள்ளூர் மேற்கு மாவட்ட மகளிர் தொண்டர் அணி" என்று இருப்பதைக் காண முடிகிறது.

தி.மு.க-வினர் தங்கள் சொந்த பணத்தைப் போட்டு வாங்கி வழங்கும் பொருட்களில் அவர்கள் கட்சி ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது என்று கூற முடியாது. அது அவர்கள் விருப்பம். அரசு வழங்கும் பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தால் அது தவறானது.

தி.மு.க சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கனிமொழி வழங்கிய பரிசுப் பொருட்களை, அரசு விழாவில் வழங்கப்பட்டது போன்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

அரசு மாணவர்களுக்கு இலவசமாக வழங்கும் பேகில், தி.மு.க ஸ்டிக்கரை ஒட்டி வழங்கியதாக பகிரப்படும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:அரசு பள்ளிக்கூட புத்தகப்பையில் ஸ்டிக்கர் ஒட்டியதா தி.மு.க?

Fact Check By: Chendur Pandian

Result: False