திருச்சியில் கொரோனா நோயாளியின் சடலத்தை தூக்கி எறிந்த விவகாரம்: உண்மை என்ன?
‘’திருச்சியில் கொரோனா பாதித்து உயிரிழந்தவரின் சடலத்தை ஆள் நடமாட்டம் இல்லாத மறைவிடத்தில் தூக்கி எறிந்த எஸ்ஆர்எம் மருத்துவமனை ஆம்புலன்ஸ்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
ஜூன் 26, 2020 முதலாக இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனைப் பலரும் உண்மை என நம்பி பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேலே குறிப்பிட்டுள்ள வீடியோவில் காட்டப்படும் ஆம்புலன்ஸ் மீது எஸ்ஆர்எம் மருத்துவமனையின் பெயர் மற்றும் முகவரி குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அதில் இருந்து வெளியே வரும் 3 பேர், வீடியோ எடுப்பவரை நோக்கி கைகாட்டுகின்றனர். பிறகு, ஆம்புலன்ஸில் இருந்து சடலத்தை கீழே இறக்குகின்றனர். அந்த இடத்தில் ஏற்கனவே குழி தோண்டி தயாராக வைக்கப்பட்டிருக்கிறது. கேமிரா எடுக்கும் திசையில் இருந்து, ‘சடலத்தை அப்படியே குழியில் தூக்கி போட்டுவிட்டு போங்க,’ என்று குரல் கேட்கிறது. இதைக் கேட்டதும், அவர்கள் சடலத்தை அப்படியே குழியில் போடுகிறார்கள்.
இதனை பார்த்தால் முன்கூட்டியே திட்டமிட்டு சடலத்தை அடக்கம் செய்வதாக, தெளிவாக தெரிகிறது. ஆனால், நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் தகவலில், சடலத்தை அப்படியே சாலையோரம் வீசிவிட்டு செல்வதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இது மட்டுமின்றி, இந்த அநியாயத்தை ஒருவர் ரகசியமாக மறைந்திருந்து செல்ஃபோனில் வீடியோ எடுத்ததாகக் குறிப்பிடுகின்றனர். அப்படிப்பட்ட ரகசிய புலனாய்வுப் புலியை பார்த்து எதற்காக, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கையை அசைத்து ஆலோசனை கேட்கிறார்கள் என்ற கேள்வி நமக்கு இயல்பாகவே எழுகிறது. கீழே உள்ள ஸ்கிரின்ஷாட்டை மீண்டும் ஒருமுறை கவனித்துப் பாருங்கள்.
அதாவது, ‘’முன்கூட்டியே ஒரு குழுவினர், குழி தோண்டி வைத்துவிட்டு, அங்கே காத்திருக்கின்றனர். அதன்பிறகு, கொரோனா நோயாளியின் சடலத்தை ஏற்றிக் கொண்டு ஆம்புலன்ஸ் அங்கே வருகிறது. அதில் இருந்து கீழே இறங்கும் நபர்கள், ஏற்கனவே அங்கிருப்பவர்களின் அறிவுரைப்படி சடலத்தை கீழே இறக்கி, குழியில் போட்டுவிட்டு போகிறார்கள். இந்த நிகழ்வை அங்கு தொலைவில் தள்ளி இருந்தவர்கள், வீடியோ எடுக்கிறார்கள்,’’ இதுதான் நமக்கு தெரியவரும் விசயம்.
இந்த வீடியோவில் வரும் நிகழ்வு முன்கூட்டியே திட்டமிட்டு செய்யப்பட்டதாக தெரிகிறது. ஆனால், இது மிகப்பெரும் அநியாயம், அக்கிரமம் என்று கூறி உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் தகவல் பகிரப்படுகிறது.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய உலகம் முழுக்க, இத்தகைய நடைமுறையே பின்பற்றப்படுகிறது. அதிக கூட்டம் இன்றியே கொரோனா நோயாளிகளின் சடலம் அடக்கம் செய்யப்படுகிறது. சமீபத்தில் உயிரிழந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனுக்குக் கூட இத்தகைய நிலையே ஏற்பட்டது என்பதை யாரும் மறந்திருக்க முடியாது.
இதுபோலவே, மேற்கண்ட வீடியோ பற்றிய தகவலும் தவறான ஒன்றுதான். இந்த வீடியோ டிரெண்டிங் ஆன நிலையில், இதுபற்றி சம்பந்தப்பட்ட திருச்சி எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் ஊடகத்தினருக்கு உரிய விளக்கமும் அளித்திருக்கிறது.
‘’கடந்த ஜூன் 16, 2020 அன்று கொரோனா பாதித்து உயிரிழந்த நோயாளியின் குடும்பத்தினருக்கும், அரசு அதிகாரிகளுக்கும் உரிய தகவல் தெரிவித்த பிறகே, இருங்களூர் அருகேயுள்ள மயானத்தில் சடலம் அடக்கம் செய்யப்பட்டது. அந்த நிகழ்வை ஆதாரத்திற்காக, முழு வீடியோ எடுத்தோம். அந்த வீடியோவை எடிட் செய்து சிலர் தவறான தகவலை வெளியிட்டு வருகின்றனர்,’’ என்று எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி தரப்பில் கூறப்படுகிறது.
குறிப்பிட்ட ஆம்புலன்ஸ்க்கு எதிர்ப்புறம் இருக்கும் குழுவினர் தெளிவாக தெரியக்கூடிய புகைப்படத்துடன் தினமணி விரிவான செய்தி வெளியிட்டிருக்கிறது.
உரிய விதிமுறைகளின்படி கொரோனா நோயாளியின் சடலத்தை அடக்கம் செய்ததாக எஸ்ஆர்எம் தரப்பில் விளக்கம் தரப்பட்டாலும், இந்த வீடியோ சமூக ஊடகங்களில் டிரெண்டிங் ஆனதை தொடர்ந்து இதுபற்றி விளக்கம் தரும்படி திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவிட்டுள்ளார். மேலும், குறிப்பிட்ட சடலத்தை அவரது உறவினர்கள் வாங்க மறுத்ததே இந்த பிரச்னைக்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,
1) திருச்சி எஸ்ஆர்எம் மெடிக்கல் காலேஜில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்ற நபர் உயிரிழந்தார். அவரது சடலத்தை உறவினர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். எனவே, உரிய பாதுகாப்புடன் இருங்களூர் அருகே சடலத்தை எஸ்ஆர்எம் நிர்வாகம் அடக்கம் செய்துள்ளது.
2) சடலம் புதைக்கப்பட்ட இடம் மயானப் பகுதிதான். சாலையோரம் போகிற போக்கில் வீசி எறியவில்லை. இதுபற்றி எஸ்ஆர்எம் மெடிக்கல் காலேஜ் மற்றும் மாவட்ட ஆட்சியர் தரப்பில் உரிய விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.
3) இந்த வீடியோவை ரகசியமாக யாரும் வீடியோ எடுக்கவில்லை. உடல் அடக்கம் பற்றி ஆதாரத்திற்காக, எஸ்ஆர்எம் தரப்பினர்தான் வீடியோவாக எடுத்துள்ளனர். அதனை எடிட் செய்து, சிலர் வதந்தி பரப்பி வருகின்றனர்.
4) கொரோனா வைரஸ் போன்ற மக்களை உணர்ச்சி வசப்படுத்தக்கூடிய விசயங்களின் அடிப்படையில் இப்படி வதந்தி பரப்புவதை சிலர் வேலையாகச் செய்கின்றனர்.
எனவே, நடந்த சம்பவத்தின் உண்மை விவரம் தெரியாமல், ஒரு வீடியோவை தவறாகப் புரிந்துகொண்டு பலரும் வதந்தி பரப்பியுள்ளதாக, உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் தகவலில் முழு உண்மை இல்லை என நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய சந்தேகத்திற்கு இடமான செய்தி, வீடியோ மற்றும் புகைப்படத்தைக் காண நேரிட்டால் எமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு (+91 9049044263) தகவல் தெரிவியுங்கள்.
Title:திருச்சியில் கொரோனா நோயாளியின் சடலத்தை தூக்கி எறிந்த விவகாரம்: உண்மை என்ன?
Fact Check By: Pankaj IyerResult: Partly False