Explainer: நீட் தேர்வின் அருமையைப் புரிந்துகொண்ட முதல்வர் என்று தகவல் பரப்பும் நெட்டிசன்கள்!
மயிலாடுதுறை மாவட்டத்தில் மீன்களை சுத்தம் செய்துகொடுக்கும் வேலை செய்து வரும் பெண் ஒருவர் தன் மகளை மருத்துவம் படிக்க வைத்தார் என்ற செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அந்த பெண்ணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைத்து வாழ்த்தியதன் மூலம் நீட் தேர்வின் அவசியத்தை முதல்வர் புரிந்துகொண்டார் என்று சிலர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்து வரவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், "மகளை மருத்துவராக்கிய ஏழைத்தாய்: முதல்வர் வாழ்த்து. திருக்கடையூரில் மீன்களை கழுவி சுத்தம் செய்யும் பணியைச் செய்து தனது மகளை மருத்துவராக்கிய ரமணியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்" என்று இருந்தது.
நிலைத் தகவலில், "நீட் தேர்வின் அருமையை இப்போது தான் முதல்வர் புரிந்து கொண்டார் போல!!" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Ayyanar Ramasamy என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 ஜூன் 4ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மைப் பதிவைக் காண: Facebook
உண்மை அறிவோம்:
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் மார்க்கெட்டில் மீன்களை சுத்தம் செய்து கொடுக்கும் தொழில் செய்து வரும் பெண் ஒருவர் தன் மகளை மருத்துவம் படிக்க வைத்தார் என்ற செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பலரும் அந்த தாய்க்கு பாராட்டுகளைத் தெரிவித்து வந்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அந்த பெண்மணிக்கு நேரில் பாராட்டுகளைத் தெரிவித்தார்.
இந்த நிலையில், நீட் தேர்வு காரணமாகவே இது சாத்தியமானது. நீட் தேர்வு வந்ததால்தான் அந்த பெண்ணால் மருத்துவம் படிக்க முடிந்தது. நீட் தேர்வால் மருத்துவரான ஏழைப் பெண்ணை அழைத்து வெட்கமின்றி பாராட்டிய முதலமைச்சர் ஸ்டாலின் என்று எல்லாம் சமூக ஊடகங்களில் பலரும் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். இதை பதிவாகவே சிலர் வெளியிடவே இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
உண்மைப் பதிவைக் காண: puthiyathalaimurai.com I Archive 1 I dailythanthi.com I Archive 2
அந்த பெண் நீட் தேர்வில் வெற்றி பெற்று, தமிழ்நாட்டில் அல்லது இந்தியாவில் ஏதோ ஒரு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்தாரா என்று பார்த்தோம். ஆனால், செய்திகளில் எல்லாம் அந்த பெண் ரஷ்யா சென்று மருத்துவம் படித்து வந்துள்ளார். வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்கள், இந்தியாவில் மருத்துவம் பார்க்கத் தகுதித் தேர்வை எழுத வேண்டும். அந்த தகுதித் தேர்வுக்கு தயார்ப்படுத்தி வருவதாக அந்த மாணவி கூறினார் என்றும் செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக அந்த வீடியோ வீடியோ ஏதும் கிடைக்கிறதா என்று பார்த்தோம். அவர் பேட்டி ஒன்று நமக்கு கிடைத்தது. அதில், ரஷ்யாவுக்கு சென்று மருத்துவம் படித்தேன் என்று அந்த மாணவி கூறுகிறார். ரஷ்யாவில் மருத்துவம் படிக்க நீட் தேர்வு தேவையில்லை. தமிழ்நாட்டில் நீட் தேர்வு 2017-18ல் தான் முதன் முறையாக நடத்தப்பட்டது.
நீட் தேர்வு காரணமாக மருத்துவம் படிக்க வாய்ப்பை பெற்றார் என்று நெட்டிசன்கள் கூறும் மாணவி, தான் ரஷ்யாவில் மருத்துவம் படித்தேன் என்று தெளிவாகக் கூறியுள்ளார். இதன் மூலம் நீட் தேர்வு காரணமாக ஏழை மாணவிக்கு மருத்துவராகும் வாய்ப்பு கிடைத்தது, கொஞ்சமும் கூச்சமின்றி அந்த பெண்ணை அழைத்து ஸ்டாலின் வாழ்த்தியிருக்கிறார் என்று பரவும் பதிவுகள் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ஸ்டாலின் அழைத்து வாழ்த்திய மயிலாடுதுறை மாவட்ட மாணவி ரஷ்யாவில் மருத்துவம் படித்துள்ளார். நீட் தேர்வு காரணமாக அவரால் மருத்துவம் படிக்க முடிந்தது என்று பகிரப்படும் கருத்துக்கள், பதிவுகள் தவறானவை என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
Title:Explainer: நீட் தேர்வின் அருமையைப் புரிந்துகொண்ட முதல்வர் என்று தகவல் பரப்பும் நெட்டிசன்கள்!
By: Chendur PandianResult: Explainer