அமெரிக்காவில் இறுதிச் சடங்கு கூடம் ஒன்றில் வேலை பார்த்து வந்த ஊழியர், அசதி காரணமாக தூங்கியதால் அவரை கொரோனா வைரசால் இறந்தவர் என நினைத்து எரித்துவிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

மின் மயானத்தின் படம் பகிரப்பட்டுள்ளது. அதனுடன் போட்டோஷாப் முறையில், "உயிருடன் தகனம் - பரிதாபம்... அமெரிக்காவில் கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இறுதி சடங்கு கூடத்தில் சடலங்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில், நியூயார்க்கில் இறுதி சடங்கு கூடம் ஒன்றில் வேலை பார்க்கும் மைக்கேல் ஜோன்ஸ் என்பவர் அசதியால் ஸ்டெரக்சரில் தூங்கியுள்ளார். சகஊழியர்கள் சடலம் என நினைத்து அவரை உயிருடன் தகனம் செய்துள்ளனர். 1400 - 1800 ஃபாரன்ஹீட்டில் 15 நொடிகளில் சாம்பலானார்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த புகைப்பட பதிவை, நோயற்ற வாழ்வு HEALTHY LIFE என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Ivp Balu Ivp Balu என்பவர் 2020 ஏப்ரல் 13ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழில் இந்த செய்தியை முன்னணி ஊடகம் ஒன்று 2020 ஏப்ரல் 13 அன்று வெளியிட்டிருந்தது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழப்பவர்கள் உடல்கள் எல்லாம் நியூயார்க் ஹார்ட் தீவில் மிகவும் பாதுகாப்பான முறையில் அடக்கம் செய்யப்படுகின்றன என்று சில நாட்களுக்கு முன்பு செய்தி வெளியாகி இருந்தது. அப்படி இருக்கும்போது நியூயார்க் நகரில் எப்படி எரிப்பார்கள் என்ற கேள்வி வந்தது.

theguardian.comArchived Link

மேலும், கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் உடல் எல்லாம் மிகவும் பாதுகாப்பான முறையிலேயே அடக்கம் செய்யப்பட அனுப்பி வைக்கப்படுகின்றன. அப்படி இருக்கும்போது ஸ்டிரெக்சரில் படுத்தவரை எப்படி சடலம் என்று கருதுவார்கள் என்ற சந்தேகமும் வந்து இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். நீண்ட தேடலுக்குப் பிறகு ஆங்கிலத்தில் நையாண்டித்தனமான செய்திகளை வெளியிடும் ஊடகம் ஒன்றில் இந்த செய்தி வெளியாகி இருப்பதைக் காண முடிந்தது.

நாம் செய்தி வெளியிடுவதற்கு முன்னதாக அந்த ஊடகம் அந்த செய்தியை மாற்றி ஃபேக்ட் செக் கட்டுரையாக வெளியிட்டுவிட்டது. முதல் செய்தியை உண்மை என்று நம்பி பல ஊடகங்களும் அதை வெளியிட்டன.

lankasri.comArchived Link 1
newstm.inArchived Link 2

குறிப்பிட்ட அந்த ஊடகம் முதலில் வெளியிட்ட செய்தியை உண்மை என்று நம்பி பலரும் ஷேர் செய்யத் தொடங்கியுள்ளனர். அதில் ஒன்றுதான் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு. இந்த பொய்யான செய்தியை weeklyinquirer.com என்ற ஊடகம் 2020 ஏப்ரல் 11ம் தேதி வெளியிட்டிருந்தது. அந்த செய்தியின் கீழே இது ஒரு நையாண்டிப் பதிவு என்று குறிப்பிட்டிருப்பதைக் காண முடிந்தது.

இதன் அடிப்படையில் இறுதி சடங்கு கூடத்தில் ஊழியரைத் தவறுதலாக எரித்துவிட்டார்கள் என்று பகிரப்படும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

weeklyinquirer.comArchived Link

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:அமெரிக்காவில் தூங்கியவரை சடலம் என நினைத்து எரித்தார்களா?- வைரல் வதந்தி

Fact Check By: Chendur Pandian

Result: False