
பெண்கள் தங்கள் கால் மேல் கால் போட்டு அமர்ந்தால், அவர்களின் கர்ப்பப்பை பாதிக்கும் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு…
தகவலின் விவரம்:
*பெண்கள் ஏன் கால்மேல் கால் போட்டு உட்காரக்கூடாது தெரியுமா?*
பெண்களை கால்மேல் கால் போட்டு உட்காராதே என நம் முன்னோர்கள் சொல்லியிருக்கின்றனர்..
இதை பெண் அடிமைத்தனம் புல்ஷிட் என இன்றைய நவநாகரீக பெண்கள் சொல்கின்றனர்…
சொல்லிவிட்டு போகட்டும் ஆனால் நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை..
கால்மேல் கால் போட்டு அமர்வதை அகங்காரம், திமிர், ஒழுங்கீனம் என மேலோட்டமாக சொல்லிவைத்தாலும், அதன் உள் பொருள் பெண்கள் கால்மேல் கால் போட்டு அமர்வதால்,அவர்களது கர்ப்பப்பை நாளடைவில் பாதிக்கும் என்பதால்தான்…
இது அவர்களது நன்மைக்காகத்தான்…
என் நன்மை எனக்கு தெரியும் என்றளவில் இன்று போய்க்கொண்டிருக்கும் நிலையில் இதைப்பற்றி என்ன சொல்வது!!
குறைந்தது ஒருவராவது நல்லபடி நடக்க share செய்வோம் நான் உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பது ஒரே ஒரு share ஐ மட்டும்.
பெண்கள் கால் மேல் கால் போட்டு உட்காரக் கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், கால் மேல் கால் போட்டு அமர்வதை நவநாகரீகம் என்று கருதுகின்றனர். கர்ப்பப்பை பாதிக்கப்படும் என்பதால்தான் பெண்கள் கால் மேல் கால் போடக் கூடாது என்று நம் முன்னோர் கூறியதாக இந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. மனைவி என்பவள் உயிர் என்ற ஃபேஸ்புக் குழுவில் இந்த தகவல் பகிரப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு எந்த ஒரு மருத்துவ ஆதாரத்தையும் அளிக்கவில்லை.
இரண்டு பெண்கள் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் படத்துடன், ‘ஒருவராவது நல்லபடி நடக்க இதை ஷேர் செய்யுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளனர். முன்னோர்கள் சொன்ன மருத்துவக் குறிப்பு என்று நினைத்து பலரும் இதை ஷேர் செய்துள்ளனர்.
உண்மை அறிவோம்:
நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை செய்வது இன்றைய மார்டன் உலகின் சாபமாக இருக்கிறது. வேலை பளு காரணமாக எழுந்து நடக்கக் கூட யாருக்கும் நேரம் இல்லை. இந்த சூழ்நிலையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தால் பெண்களுக்கு கர்ப்பப்பை பாதிப்பு ஏற்படும் என்று சமூக ஊடகங்களில் அவ்வப்போது செய்தி பரவுகிறது. முன்னோர்கள் சொன்னார்கள் என்று அவர்களை இழுத்துவிடுகிறார்கள். தரையில் சப்பணமிட்டு அமர்வதுதான் தமிழர்களின் வழக்கமாக இருந்தது. நாற்காலிகள் பயன்பாடு பெரிய அளவில் இருந்தது இல்லை. அப்படி இருக்க முன்னோர்கள் சொன்னார்கள் என்று பரவும் இந்த தகவல் சரிதானா என்று ஆய்வு செய்தோம்.
கால் மேல் கால் போட்டு அமர்வது கர்ப்பப்பை பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஏதேனும் ஆய்வு முடிவு இருக்கிறதா என்று கூகுளில் தேடினோம். அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

கால் போட்டு அமருவது மிகப்பெரிய மருத்துவ அவசர நிலையை உருவாக்குவது இல்லை. ஆனால், நீண்ட நேரம் அப்படி அமரும்போது இடுப்புக்கு கீழ் உள்ள பகுதிகளில் ரத்த ஓட்டம் குறைவது, கால் வலி என்று தற்காலிக பிரச்னைகள் ஏற்படலாம் என்கிறது மருத்துவம். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
கர்ப்பப்பை தொடர்பான பிரச்னை ஏதேனும் வர வாய்ப்புள்ளதா? அது தொடர்பான செய்தி ஏதேனும் உள்ளதா என்று கூகுளில் தேடினோம்…

கர்ப்பகாலத்தில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தால் கணுக்கால் வீக்கம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படலாம்.
அப்படி இருக்க, கால் மேல் கால் போட்டு அமர்ந்தால் கர்ப்பப்பை பாதிக்கும் என்று மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ளது. இது உண்மையா என்று வேலூர் மாவட்டம் ஆண்டியப்பனூர் அரசு சித்த மருத்துவர் விக்ரம் குமாரிடம் கேட்டோம்.
“சிறிது நேரம் கால் மேல் கால் போட்டு அமர்வதால் கர்ப்பப்பை பாதிக்கும் என்று கூற முடியாது. நீண்ட நேரம் கால் மேல் கால் போட்டு அமர்ந்தால் கர்ப்பப்பை பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. பொதுவாக, நீண்ட நேரம் கால் மேல் கால் போட்டு அமர்வது இரு பாலருக்கும் நல்லது இல்லை.

படம்: டாக்டர் விக்ரம் குமார்
நீண்ட நேரம் கால் மேல் கால் போட்டு அமரும்போது, உடலின் அமைப்பு (Posture) மாறும். இதனால், இடுப்பு வலி, கழுத்து வலி போன்றவை ஏற்படலாம். செரிமான குறைபாடு ஏற்படலாம். கால், தொடைப் பகுதி மறத்துப்போகலாம். எனவே, நீண்ட நேரம் கால் மேல் கால் போட்டு உட்கார்வதை ஆண், பெண் இருவருமே தவிர்ப்பது நல்லது” என்றார்.
இது தொடர்பாக சென்னை அண்ணாநகரில் உள்ள இன்டிகோ வுமன்ஸ் சென்டர் மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவமனையின் மூத்த மருத்துவர் சரத் பாட்டினாவிடம் கேட்ட போது, “பெண்கள் கால் மேல் கால் போட்டு அமரும்போது இடுப்பு தசைகள் இறுக்கம் அடைகின்றன. மற்றபடி, கர்ப்பப்பை பாதிப்பு ஏற்படும் என்பதற்கு எந்த ஒரு அறிவியல் பூர்வமாக ஆய்வு முடிவும் இல்லை. இதனால், கால் மேல் கால் போட்டு அமர்ந்தால் கர்ப்பப்பை வீக் ஆகும் என்று சொல்வது எல்லாம் சரி இல்லை.

படம்: டாக்டர் சரத் பாட்டினா
கர்ப்பப்பை பிரச்னை ஏற்பட பல்வேறு காரணங்கள் உள்ளன. கால் மேல் கால் போடுவதால் பிரச்னை வந்தது என்று இதுவரை எங்கும் யாரும் வந்ததாக தகவல் இல்லை. ஆண், பெண் என இருவருக்குமே நீண்ட நேரம் கால் மேல் கால் போட்டு அமரும்போது சில பிரச்னைகள் ஏற்படலாம். அவை தற்காலிகமானவைதான்” என்றார்.
கால் மேல் கால் போட்டு அமர்ந்தால் கர்ப்பப்பை பாதிப்பு வரும் என்பதற்கும் வராது என்பதற்கும் எந்த ஒரு ஆதாரம் இல்லை. அதேநேரத்தில், தொடர்ந்து கால் மேல் கால் போட்டு உட்கார்வது ஆண், பெண் இருவருக்குமே பாதிப்பை ஏற்படுத்தலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
முடிவு:
கால் மேல் கால் போடுவது பொதுவாக ஆண், பெண் என இரு பாலருக்குமே பிரச்னையை ஏற்படுத்தலாம். பெண்களுக்கு கர்ப்பப்பை பாதிப்பு ஏற்படும் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை. வராது என்றும் உறுதியாக சொல்ல முடியவில்லை. மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு குழப்பமான நிலையையே உருவாக்குகிறது. எனவே, மருத்துவம் தொடர்பான கட்டுரைகளை பகிரும்போது, தகுந்த ஆதாரங்களுடன் பகிர்வது நல்லது.

Title:பெண்கள் கால் மேல் கால் போட்டு அமர்ந்தால் கர்ப்பப்பை பாதிப்பு ஏற்படுமா?
Fact Check By: Praveen KumarResult: Mixture
