
‘அரசுப் பணத்தை யாரும் தவறுதலாக பயன்படுத்த அனுமதிக்க மாட்டேன்,’ என்று சொன்ன பிரதமர் மோடி, வெளிநாட்டு சுற்றுப் பயணம், மேக்அப், உணவு, வெளிநாட்டு பயணம் போன்றவற்றுக்காக பல ஆயிரம் கோடி ரூபாயை செலவு செய்துவிட்டதாக, ஒரு செய்தி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதன் உண்மைத் தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு…
தகவலின் விவரம்
இந்த பதிவை கடந்த ஏப்ரல் 1ம் தேதி வெளியிட்டுள்ளனர். அதில், அரசு பணத்தை யாரும் தவறுதலாக பயன்படுத்த அனுமதிக்க மாட்டேன் என்று பிரதமர் மோடி கூறுவது போலவும், கீழே வெண்ணிற ஆடை மூர்த்தி சிரிக்கும் படத்தை வைத்து, மோடி பயன்படுத்தும் பேனாவின் விலை ரூ.1.30 லட்சம் என்றும், மேக்அப் செய்துகொள்ளும் செலவு ரூ.15 லட்சம் என்றும், சாப்பிடும் காளானின் விலை லட்சத்தைத் தாண்டும் என்றும், வெளிநாடுக்கு பயணம், ஊடக விளம்பரம், விமான பராமரிப்பு என்று ரூ. 6590 கோடி செலவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சொம்புதூக்கி டவுசர்பாய்ஸ் ஃபேஸ்புக் குழு இந்த பதிவை வெளியிட்டுள்ளது. பா.ஜ.க மற்றும் மோடி எதிர்ப்பாளர்கள் இந்த போட்டோ பதிவை அதிக அளவில் ஷேர் செய்துள்ளனர்.
உண்மை அறிவோம்:
இது கிண்டலுக்காக செய்யப்பட்ட பதிவாக தெரியவில்லை. மோடியைப் பற்றி உலவும் பல்வேறு வதந்திகளை ஒன்று சேர்த்து செய்யப்பட்ட பதிவாக இது உள்ளது. எனவே, இதில் குறிப்பிட்ட செய்தியின் உண்மைத் தன்மையை சோதனை செய்ய முடிவு செய்தோம்.
மார்ச் 31ம் தேதி, காணொலி காட்சி மூலமாக, பா.ஜ.க தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார். அப்போது,”அரசு பணத்தை யாரும் தவறுதலாக பயன்படுத்த அனுமதிக்க மாட்டேன். இந்தியாவை வளமான நாடாக மாற்ற உறுதி கொண்டுள்ளேன். நாட்டுக்கு சேவை செய்ய 2-வது முறையாக மக்கள் எனக்கு வாய்ப்பளிப்பார்கள் என நம்புகிறேன்” என்றார். இதைத் தொடர்ந்தே இந்த பதிவு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
Archived Link
முதலில் பிரதமர் பயன்படுத்தும் பேனா தொடர்பாக ஆய்வு நடத்தினோம். மோடி பேனா என்று கூகுளில் டைப் செய்து தேடினோம். அப்போது விகடனில் வெளியான செய்தியின் லிங்க் கிடைத்தது.

இதன்படி, ஜெர்மனியைச் சேர்ந்த ‘மாண்ட் பிளான்க்’ நிறுவன பேனாவைத்தான் மோடி விரும்பி பயன்படுத்துகிறார் என்று தெரியவந்தது. 2013ம் ஆண்டு இந்தியா டுடே வெளியிட்ட அறிக்கைப்படி, மோடி பயன்படுத்தும் பேனாவின் விலை ரூ.1.30 லட்சமாம். இதுதொடர்பாக விகடனில் வெளியான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
Archived Link
மாண்ட் பிளான்க் பால்பாயிண்ட் பேனாக்களின் தற்போதைய விலை என்ன என்று அமேசானில் தேடினோம். அதில், ரூ.29,980-ல் இருந்து விலை தொடங்கியது. அதிகபட்சமாக ரூ.1.20 லட்சம் வரை இருப்பதாக தெரியவந்தது. இதன் மூலம் பேனா பற்றிய விமர்சனம் உண்மைதான் என்பது தெரியவந்தது. ஆதார படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அடுத்தது, அவருக்கான அலங்கார செலவு பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது, மாதந்தோறும் ரூ.15 லட்சம் செலவு செய்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஒரு பெண் மோடிக்கு மேக் அப் செய்வது போன்ற படத்தை வெளியிட்டுள்ளனர்.
லண்டனில் உள்ள மெழுகு சிலை அருங்காட்சியகத்தில் மோடியின் மெழுகுச் சிலை வைப்பதற்காக அளவீடுகள் எடுக்கும்போது எடுத்த புகைப்படம் அது. காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் இந்த படத்தை வைத்து மோடிக்கு மேக்அப் செய்யும் பெண்ணின் சம்பளம் ரூ.15 லட்சம் என்று வதந்தி பரப்பினார் என்ற விவரத்தை நாம் ஏற்கனவே நிரூபித்துள்ளோம். அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள். எனவே, இதுவும் தவறுதான்.
அடுத்தப்படியாக, காளான் விவகாரத்துக்கு வருவோம். இறக்குமதி செய்யப்படும் காளானை பிரதமர் மோடி சாப்பிடுகிறாரா என்று கூகுளில் தேடினோம். அப்போது, அது தொடர்பான நிறைய தகவல்கள் கிடைத்தன.

2017ம் ஆண்டு குஜராத் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது. காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட அல்பேஷ் தாக்கூர் என்பவர் மோடியின் காளான் விவகாரத்தை சொன்னார். ஆனால், அதற்கான ஆதாரம் எதையும் அவர் அளிக்கவில்லை. ஒரு காளான் விலை ரூ.80 ஆயிரம், ஓரு நாளைக்கு ஐந்து காளானை மோடி சாப்பிடுகிறார் என்றெல்லாம் தெரிவித்தார். இது இந்தியா முழுக்க பேசப்பட்டது. இதுதொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இதுதொடர்பாக 2017 டிசம்பரில் இந்தியா டுடே ஓர் உண்மை கண்டறியும் ஆய்வை நடத்தியுள்ளது. அதில் இந்த தகவல் பொய் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. குஜராத் முதல் அமைச்சராக மோடி இருந்தபோது, ஆஃப் தி ரெக்கார்டாக தனக்கு காளான் மிகவும் பிடிக்கும். ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு வகை காளான் சாப்பிடுவதுதான் என்னுடைய ஆரோக்கியத்துக்குக் காரணம் என்று கூறியிருந்தாராம். அதை வைத்து காங்கிரஸ் தலைவர் தேர்தல் ஆதாயத்துக்காக வதந்தியைப் பரப்பியது உறுதி செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
அடுத்ததாக வெளிநாட்டு பயணம், விளம்பரம், விமான பராமரிப்பு செலவு பற்றிய விஷயத்துக்கு வருவோம். வெளிநாட்டு பயணம் தொடர்பாக சொன்னதில் கிட்டத்தட்ட உண்மை உள்ளது. இந்த பதிவில், வெளிநாட்டுக்கு சென்றுவந்த செலவு ரூ.2017 கோடி என்று குறிப்பிட்டுள்ளனர். மோடியின் வெளிநாட்டு பயணம் தொடர்பாக கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கேசிங், ‘2014ம் ஆண்டு முதல் இப்போது வரை 55 நாடுகளுக்கு மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்கான செலவு ரூ.2021 கோடி என்று தெரிவித்துள்ளார். இதிலேயே விமான பராமரிப்பு செலவு எல்லாம் அடங்கிவிடும். இதன்மூலமாக இந்தியாவுக்கு 13 ஆயிரத்து 607 கோடி டாலர்கள் அன்னிய நேரடி முதலீடு வந்துள்ளது என்றும் தெரிவித்தார். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
Archived Link
இதேபோல் மோடி அரசின் விளம்பர செலவு தொடர்பான கேள்விக்கு மத்திய அமைச்சர் ராஜவர்தன ரத்தோர் பதில் அளித்துள்ளார். காட்சி ஊடகம், பத்திரிகைகள், வானொலிக்கு என ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் பிரித்துப் பட்டியலிட்டிருந்தார் அமைச்சர். மொத்தத்தில், நான்கரை ஆண்டுகளில் 4602 கோடி ரூபாய் விளம்பரத்துக்காக செலவு செய்யப்பட்டிருந்தது என்றார். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
Archived Link
நாம் ஆய்வு மேற்கொண்ட வகையில் தெரியவந்த உண்மை விவரம்,
- அரசு பணத்தை யாரும் தவறுதலாக பயன்படுத்த அனுமதிக்க மாட்டேன் என்று மோடி பேசியது உண்மை.
- மோடி பயன்படுத்தும் பேனாவின் விலை தொடர்பான பதிவு உண்மை.
- மோடியின் மேக்அப் கலைஞருக்கு சம்பளம் தொடர்பான தகவல் பொய்.
- மோடி சாப்பிடும் காளான் தொடர்பான தகவல் பொய்.
- மோடியின் வெளிநாட்டு பயணம் தொடர்பான தகவல் உண்மை.
- மோடி அரசு விளம்பரத்துக்கு செலவு செய்தது தொடர்பான தகவல் உண்மை.
- மோடியின் விமான பராமரிப்பு செலவு தொடர்பான தகவல் பொய்.
இதன் மூலம் இந்த தகவலில் உண்மையும் பொய்யும் கலந்திருப்பது உறுதியாகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், இந்த தகவலில் பாதி உண்மை, பாதி பொய் கலந்திருப்பது உறுதி செய்யப்படுகிறது. எனவே, இத்தகைய நம்பகத்தன்மை இல்லாத, போலி புகைப்படங்கள், வீடியோ, செய்திகள் போன்றவற்றை நமது வாசகர்கள் யாரும் பகிர வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். அப்படி நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் அளித்தால், உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு நீங்கள் ஆளாக நேரிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

Title:பிரதமர் மோடி அரசுப் பணத்தை தவறாக பயன்படுத்தினாரா?
Fact Check By: Praveen KumarResult: Mixture

I am extremely sorry.
Iam very very sorry