
கொரோனா புதிய நோய் இல்லை, அதற்கு அந்தக் காலத்திலேயே மாத்திரை இருந்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
அந்தக் காலத்தில் அச்சடிக்கப்பட்ட வைத்திய புத்தகத்தின் பக்கத்தை பகிர்ந்துள்ளனர். அதில் கோரோன மாத்திரை என்று உள்ளது. நிலைத் தகவலில், “கொராணா இப்போது புதிய நோய் இல்லை.! ஆதிகாலத்திலேயே உள்ளது.அதற்க்காண தமிழனின் மருந்து .!!” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை படித்ததில் பிடித்தது என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் உண்மை ராசா என்பவர் 2020 மார்ச் 31ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கொரோனா வைரஸ் என்பது பல ஆண்டுகளாகவே உள்ளது. கொரோனா வைரஸ் குடும்பத்தில் புதிய வரவு கோவிட் 19. ஆனால், இந்த உண்மை தெரியாமல் பலரும் பல வதந்திகளை பரப்பி வருகின்றனர். இது தொடர்பாக வேலூர் மாவட்டம் ஆண்டியப்பனூர் அரசு சித்த மருத்துவர் டாக்டர் விக்ரம் குமாரிடம் கேட்டோம்.

அதற்கு அவர், “இந்த தகவல் தவறானது. சமூக ஊடகங்களில் பகிரப்படும் அந்த மருத்துவக் குறிப்பில் பார்த்தீர்கள் என்றால் கோரோஜனை என்று ஒரு பொருளை கொடுத்திருப்பார்கள். அந்த கோரோஜனை என்பதை தமிழில் கோரோசனை என்று சொல்வார்கள். இதை போட்டோஷாப்பில் எடிட் செய்து கோரோன மாத்திரை என்று வதந்தி பரப்பியுள்ளனர். மற்றபடி இது சளிக்கு பரிந்துரைக்கப்படும் பழைய மருந்துதான். கொரோனாவுக்கு பயன்படும் மருந்து என்று புதிதாக வதந்தி பரப்பி வருகின்றனர்” என்றார்.

இது தொடர்பாக தேடியபோது தினமணி நாளிதழில் வெளியான செய்தி ஒன்று கிடைத்தது. அதில், தமிழில் 1914ம் ஆண்டு வெளியிடப்பட்ட கைமுறை வைத்திய நூலொன்றில் கொரோனாவுக்கு மருந்து உள்ளதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த நூலின் 61ம் பக்கத்தில் கோரோன மாத்திரை என்ற பெயரில் இந்த மருந்து பற்றி குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால், போட்டோஷாப்பில் கோரோசன என்ற சொல்லை கோரோன என்று எடிட் செய்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தனர்.

dinamani.com | Archived Link |
tamil.asianetnews.com | Archived Link |
இது தொடர்பாக ஏஷியா நெட் தமிழ் வெளியிட்டிருந்த செய்தியில், கோரோஜன என்ற பெயரை மாற்றி வெளியிட்டுள்ளார்கள். கோ என்றால் பசு. பசு மாட்டிலிருந்து எடுக்கப்படும் பொருளைக் கொண்டு தயாரிக்கப்படும் மருந்து என்று பெயர். குழந்தைகளுக்கு சளிபிரச்னை சரியாக இந்த மருந்து அளிக்கப்படுகிறது. இதில் பூரம் என்ற மருந்து சேர்க்கப்படுகிறது. இது விஷத் தன்மை கொண்டது. சித்த மருத்துவர்கள் இதை பண்படுத்தி விஷத்தன்மை போக்கி மருந்து தயாரிப்பார்கள். இதை அப்படியே சாப்பிட்டால் மரணம் நிகழலாம்” என சித்த மருத்துவர் கூறியதாக குறிப்பிட்டிருந்தனர்.
சித்த மருத்துவத்திற்கு அவப்பெயரை உருவாக்கும் வகையில் இந்த பதிவை பரப்பி வருவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தனர். இதை எல்லாம் பார்க்கும்போது நம்முடைய மருத்துவ முறையின் நம்பகத்தன்மையை நாமே பாழ்படுத்துவது போல் இருப்பது தெரிகிறது.
நம்முடைய ஆய்வில்,
அரசு சித்த மருத்துவர் இது எடிட் செய்யப்பட்ட பதிவு, உண்மையில் இது கொரோனா மருந்து இல்லை என்று உறுதி செய்துள்ளார்.
இந்த பதிவு தவறானது என்று வெளியான செய்திகள் நமக்கு கிடைத்துள்ளன.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், கொரோனாவுக்கு அந்தக் காலத்திலேயே கைவைத்தியம் இருந்தது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:கொரோனா வைரஸ்க்கு அந்த காலத்திலேயே மருந்து இருந்ததா?
Fact Check By: Chendur PandianResult: False
