
‘’சிவப்பு சட்டை அணிந்து மேல் மருவத்தூர் சென்றால் முதல்வர் பதவி கிடைக்கும் என்று மே தினத்தன்று தில்லாலங்கடி ஆடிய மு.க.ஸ்டாலின்,’’ என்ற தலைப்பில் ஒரு செய்தி இணையத்தில் பரவிவருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டவர்கள் சிவப்பு நிற சட்டை அணிந்து ஊர்வலமாக சென்ற படம் மற்றும் மு.க.ஸ்டாலின் சாமி சிலைக்கு மலர் தூவி வணங்குவது போன்ற படத்தை வைத்துள்ளனர். டிஎன்நியூஸ்24 என்ற இணையம் வெளியிட்டுள்ள செய்தியை நாச்சியார் தமிழ் 2.0 என்ற ஃபேஸ்புக் குழு பகிர்ந்துள்ளது. அதில், சிவப்பு சட்டை அணிந்து மேல்மருவத்தூர் சென்றால் முதல்வர் பதவி கிடைக்கும் என்பதால், மே தினத்தில் தில்லாலங்கடி ஆடிய ஸ்டாலின் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த செய்தியை மே 3ம் தேதி http://tnnews24.com என்ற இணைய தளம் வெளியிட்டுள்ளது. இது உண்மை என்று நினைத்துப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சாமி சிலைக்கு மு.க.ஸ்டாலின் மலர்களைத் தூவி வணக்கம் செலுத்துவது போன்ற படம் சமூக ஊடகங்களில் வைரல் ஆகியது. அதைத் தொடர்ந்து அந்த படம் தொடர்பாக, ஏற்கனவே tamil.factcrescendo.com ஆய்வை மேற்கொண்டது. ஆய்வின் முடிவில் அது போலியான படம் என்பது நிரூபிக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக “சாமி சிலைக்கு மலர் தூவி வழிபட்டாரா மு.க.ஸ்டாலின்” என்ற தலைப்பில் வெளியான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்த நிலையில், மார்ஃபிங் செய்யப்பட்டது என்று நிரூபிக்கப்பட்ட படத்தை அடிப்படையாக வைத்து, புதிய செய்தி ஒன்றை http://tnnews24.com என்ற இணைய தளம் வெளியிட்டுள்ளது. அதில், மு.க.ஸ்டாலின் சிவப்பு சட்டை அணிந்ததற்கான காரணம் தற்போது கிடைத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

மே 1ம் தேதி காலை, தூத்துக்குடியில் நடந்த மே தின ஊர்வலத்தில் மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட தி.மு.க-வினர் சிவப்பு நிற சட்டை அணிந்து ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தின் முடிவில் மே தின நினைவு சின்னத்தில் மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினர். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
இந்த ஊர்வலம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் படம் மற்றும் மே தின வாழ்த்து செய்தி வெளியாகி இருந்தது. ஆதாரம் கீழே…
மே தின ஊர்வலத்தை முடித்த பிறகு, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். மே 1 மற்றும் 2ம் தேதி முழுக்க அவர் ஒட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்தது தொடர்பான பல பதிவுகள் இருந்தன. இதன் மூலம், மே 1ம் தேதி மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்திருக்கிறார் என்பது உறுதியானது.
ஆனால், உண்மைக்கு மாறாக, மே தின ஊர்வலம் மற்றும் நினைவு சின்னத்துக்கு அஞ்சலி செலுத்தியதை மேல் மருவத்தூரில் இந்து பெண் தெய்வ சிலைக்கு அஞ்சலி செலுத்தினார் என்று தெரிவித்துள்ளனர். பொய்யான படத்துக்கு பொய்யான விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த செய்தியை வெளியிட்ட டிஎன்நியூஸ்24 இணைய தளத்தின் பின்னணி பற்றி இதற்கு முன்பு நாம் பலமுறை ஆய்வு மேற்கொண்டிருக்கிறோம். தொடர்ந்து தி.மு.க, காங்கிரசுக்கு எதிரான தவறான, அவதூறான, துளி கூட உண்மை இல்லாத செய்திகளை இந்த இணையதளம் வெளியிட்டு வருகிறது என்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முந்தைய செய்திகளைப் பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
எந்த ஒரு ஆதாரமும் இன்றி விஷமத்தனமான செய்தியை டிஎன்நியூஸ்24 இணைய தளம் வேண்டுமென்றே வெளியிட்டுள்ளது உறுதியாகிறது. இதையும் பலர் உண்மை என நம்பி ஷேர் செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முடிவு:
தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில், ஸ்டாலின் மேல்மருவத்தூரில் சாமி கும்பிட்டார் என்று டிஎன்நியூஸ்24 என்ற இணையதளம் வெளியிட்ட செய்தி பொய்யானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Title:சிவப்பு சட்டை அணிந்து மேல்மருவத்தூர் சென்ற ஸ்டாலின்: இணைய தள செய்தி உண்மையா?
Fact Check By: Praveen KumarResult: False
