100 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகில் தொற்று நோய் ஏற்படுகிறதா?

Coronavirus சமூக ஊடகம் | Social

‘’100 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகில் தொற்றுநோய் பரவி வருகிறது,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

இந்த ஃபேஸ்புக் பதிவில், ட்விட்டர் பதிவு ஒன்றின் ஸ்கிரின்ஷாட்டை இணைத்து, அதன் மேலே, 1620ல் பூபானிக் பிளேக், 1720ல் பிளேக் வைரஸ், 1820ல் காலரா வைரஸ், 1920ல் ஸ்பெயின் வைரஸ், 2020ல் கொரோனா வைரஸ் என ஒவ்வொரு 100 ஆண்டுகளுக்கும் ஒருமுறை தொற்று நோய் பரவி மனிதர்களை அழித்து வருவதாக எழுதியுள்ளனர்.

இது மக்களை அச்சுறுத்தக்கூடிய தகவலாக உள்ளதால், உண்மை என்ன என்று விவரம் தேட தொடங்கினோம்.

தகவலின் விவரம்:
இதில் கூறியுள்ளதன்படி 1620ல் என்ன நோய் ஏற்பட்டது என தகவல் தேடியதில், இங்கிலாந்து பகுதியில் மிகப்பெரிய பூபானிக் பிளேக் எனும் நோய் தாக்கி பலர் உயிரிழந்ததாக, தெரியவருகிறது. ஆனால், இதற்கு உண்மையான காரணம் என்னவாக இருக்கும் என்று இதுவரை தெளிவாகக் கூறப்படவில்லை. சிலர் பூபானிக் பிளேக் எனக் கூறினாலும் மற்ற ஆய்வாளர்கள் இன்ஃப்ளூயன்சா, சின்னம்மை, பெரியம்மை உள்ளிட்ட நோய்களும் இந்த பாதிப்பிற்கு காரணம் எனக் கூறுகின்றனர்.

அத்துடன், இந்த மர்ம நோய் 1616 முதல் 1620 வரை பாதித்துள்ளது. எனவே, 1620ல்தான் பரவியது என்றும், உலக நாடு முழுவதிலும் அச்சுறுத்தியது என்றும் சொல்ல முடியாது. 

இதன்பின், 1720ல் ஸ்பெயின் நாட்டில் தொடங்கி படிப்படியாக மற்ற ஐரோப்பிய நாடுகளை பிளேக் நோய் பாதித்திருக்கிறது. இதனால், 1 லட்சம் பேர் வரை உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த பாதிப்பிற்கு வரலாற்றில் The Great Plague of Marseille என்று பெயரிடப்பட்டுள்ளது.

எனினும், 1720ல் பிளேக் வைரஸ் பரவியதாகச் சொல்வதும் தவறான தகவல். பிளேக் வைரஸ் மனிதர்களை 2 ஆயிரம் ஆண்டுகளாகவே தாக்கி வருகிறது.
எனவே, அது 1620, 1720ல் ஏற்பட்டது என்றும், அதில் கோடிக்கணக்கான மக்கள் உயிரிழந்தார்கள் என்றும் பொதுவாகச் சொல்லிவிட முடியாது. இதுபற்றி மேலும் படிக்க இங்கே கிளிக் செய்யவும். 

அதேபோல, 1820ல் காலரா ஏற்படவில்லை. 1816ல் முதல் முறையாக காலரா உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. அந்த பாதிப்பு ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 1826ம் ஆண்டு வரை நீடித்துள்ளது. அதாவது, 1816 தொடங்கி 1826 வரை 10 ஆண்டுகளுக்கு காலரா பாதிப்பு இருந்துள்ளது.

நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில் கூறுவது போல 1820ல் காலரா ஏற்படவில்லை. அதில், ஒரு ட்ரில்லியன் மக்கள் உயிரிழக்கவும் இல்லை. ஒரு ட்ரில்லியன் என்றால் ஒரு லட்சம் கோடியாகும். ஒரு லட்சம் கோடி மக்கள் தொகை பூமியில் கிடையாது. இத்தகைய வதந்திகளை பரப்புவோர் முதலில் பூமியில் எவ்வளவு மக்கள்தொகை உள்ளது என்பதை தெரிந்துகொண்டால் நலம். 

இதேபோல, 1920ல் ஸ்பெயின் வைரஸ் ஏற்படவில்லை. 1918ம் ஆண்டில் இன்ஃப்ளூயன்சா வைரஸ் ஸ்பெயினில் தொடங்கி படிப்படியாக மற்ற நாடுகளுக்கும் பரவியது. இதுபற்றி மேலும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இறுதியாக, 2020ல் கொரோனா வைரஸ் (Covid 19) தொற்று வந்துவிட்டதாகக் கூறுவதில் முழு உண்மை இல்லை. இது 2019ம் ஆண்டிலேயே சீனாவில் பாதிக்க தொடங்கிவிட்டது. மேலும், இது ஒரே ஆண்டில் முடிந்துவிடும் என்றோ அல்லது எத்தனை ஆண்டுகள் நீடிக்கும் என்றோ உறுதியாகச் சொல்லிவிட முடியாது.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,

1) மேற்குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ள தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளன.
2) இவர்கள் குறிப்பிடுவது போல தொற்றுநோய்களுக்கு பலியான மக்களின் எண்ணிக்கை அவ்வளவு அதிகம் கிடையாது. அதுவும் ஒரு டிரில்லியன் மக்கள் காலராவில் உயிரிழந்தார்கள் என்பது தவறான தகவல். 
3) கொரோனா வைரஸ் போன்ற இயற்கைப் பேரிடர் காலங்களில் ஆதாரம் இல்லாத வதந்திகளை பரப்புவதைச் சிலர் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அதனை பொதுமக்கள் நம்ப வேண்டாம்.

உங்களுக்கு இதுபோன்ற செய்திகளின் உண்மைத்தன்மை அறிய வேண்டுமெனில், [email protected] என்ற இமெயில் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில், உண்மையை விடவும் மக்களை அச்சுறுத்தக்கக் கூடிய தவறான தகவலே அதிகம் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:100 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகில் தொற்று நோய் ஏற்படுகிறதா?

Fact Check By: Pankaj Iyer 

Result: Partly False