
பாராசிட்டமால் மாத்திரையில் வைரஸ் கிருமித் தொற்று பாதிப்பு இருப்பதாக ஒரு பதிவு ஃபேஸ்புக்கில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

பாராசிட்டமால் மாத்திரை அட்டை படம், நோயாளி பெண் ஒருவர் படுத்திருக்கும் படம், முதுகெல்லாம் புள்ளி புள்ளியாக உள்ள ஆண் நோயாளி ஒருவர் படம் என பல படங்களை பகிர்ந்துள்ளனர். அதனுடன், “எச்சரிக்கை… எச்சரிக்கை! P/500 எழுதப்பட்ட பாராசிட்டமாலை எடுத்துக்கொள்ளாமல் கவனமாக இருங்கள். இது ஒரு புதிய, மிகவும் வெள்ளை மற்றும் பளபளப்பான பாராசிட்டமால் ஆகும். மச்சோபோ வைரஸ் கொண்டிருப்பதாக டாக்டர்கள் அறிவுறுத்துகிறார்கள். இது உலகிலேயே மிகவும் ஆபத்தான வைரசில் ஒன்றாக கருதப்படுகிறது. அதிக இறப்புடன் விகிதம், உங்கள் தொடர்பு பட்டியலில் உள்ள அனைவருடனும் குடும்பத்துடனும் வாழவும், ஒரு வாழ்வை அல்லது உயிர்களைக் காப்பாற்றவும் இந்த செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள். நான் என் பங்கை செய்துவிட்டேன். இப்போது உங்கள் திருப்பம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை, நாட்டு மருந்து என்ற ஃபேஸ்புக் பக்கத்தில், Kalaivani Vani Kandhaswami என்பவர் ஜூன் 25, 2019 அன்று பகிர்ந்துள்ளார்.
என் பங்குக்கு நான் பகிர்ந்துவிட்டேன், உங்கள் பங்குக்கு நீங்கள் பகிருங்கள், உங்களுக்குத் தெரிந்தவர்கள் உயிர் வாழ, ஒரு உயிரைக் காப்பாற்ற இதை பகிருங்கள் என்று எல்லாம் குறிப்பிட்டுள்ளனர். படமும் அச்சமூட்டும் வகையில் உள்ளது. இதனால், இந்த தகவல் உண்மை என்று நம்பி பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
காய்ச்சல் மற்றும் உடல் வலிக்குப் பரிந்துரைக்கப்படும் ஆரம்பக்கட்ட மருந்து பாராசிட்டமால். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் காய்ச்சல் வந்தாலே முதலில் பரிந்துரைக்கப்படும் மருந்து இதுதான். எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய முதலுதவி பெட்டியின் முக்கிய மாத்திரையும் இந்த பாராசிட்டமால்தான். இந்த பாராசிட்டமால் மாத்திரை மூலமாக வைரஸ் கிருமி பரவுகிறது என்ற அதிர்ச்சிகரமான, பயமூட்டும் தகவல் பகிரப்பட்டுள்ளது.

Picture: Baraneedharan
இந்த தகவல் தொடர்பாக சென்னை காவேரி மருத்துவமனையின் மருத்துவ அதிகாரியும் சர்க்கரை நோய் நிபுணருமான டாக்டர் பரணீதரனிடம் பேசினோம். “மாத்திரையில் கிருமி கலந்து வருகிறது என்று சொல்வது எல்லாம் கட்டுக்கதைதான். இதில் துளி கூட உண்மை இல்லை. இது உண்மையாக இருந்திருந்தால், இந்த மாத்திரையை பரிந்துரைக்க வேண்டாம் என்று மருத்துவர்களுக்கு தகுந்த அரசு துறையில் இருந்து அறிவுறுத்தல் வந்திருக்கும். எங்களுக்கு அப்படி எந்த ஒரு பரிந்துரை, உத்தரவு வரவில்லை” என்றார்.
பாராசிட்டமால் மாத்திரை மூலம் வைரஸ் கிருமி பரவுகிறது என்று ஏதேனும் மருத்துவ அறிக்கை வந்துள்ளதா என்று கூகுளில் தேடினோம்.
சிங்கப்பூர் மருத்துவ அறிவியல் ஆணையம் வெளியிட்ட பத்திரிகை செய்தி ஒன்று நமக்குக் கிடைத்தது. அதில், “பாராசிட்டமால் மாத்திரையில் வைரஸ் கிருமி பரவுவதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் வெறும் வதந்திதான். அந்த தகவலில் உண்மை இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும், இந்த தகவலை யாரும் பகிர வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த அறிவிப்பை 2017 ஆகஸ்ட் 2ம் தேதி வெளியிட்டுள்ளனர். அதைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
படத்தில் உள்ளவர்கள் பாராசிட்டமால் மாத்திரை பயன்படுத்தியதால் பாதிப்புக்கு ஆளானவர்களா என்று ஆய்வு செய்தோம். அப்போது, இந்த தகவல் தொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியான உண்மை கண்டறியும் ஆய்வு ஒன்று நமக்கு கிடைத்தது. அதில் படத்தில் இருக்கும் பெண் மணி பற்றிய விவரம் கிடைத்தது. லக்னோவில் நடந்த தடியடியில் பாதிக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பெண் என்று கூறப்பட்டு இருந்தது. அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு பொய்யானது, விபரீதமானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட செய்திகள் தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:“பாராசிட்டமால் மாத்திரையில் வைரஸ் கிருமி!” – பீதி கிளப்பும் ஃபேஸ்புக் பதிவு!
Fact Check By: Chendur PandianResult: False
