
‘’சசிகலா குடும்பத்தினரை பார்த்ததே கிடையாது,’’ என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாகக் கூறி, ஃபேஸ்புக்கில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
சசிகலா குடும்பத்தினரை பார்த்ததே கிடையாது: எடப்பாடி பழனிச்சாமிஇது உலக மகா நடிப்புடா சாமி..
Political Press Attitude என்ற ஃபேஸ்புக் குழு இந்த பதிவை
கடந்த 2018 செப்டம்பர் 28ம் தேதி வெளியிடப்பட்ட இந்த வீடியோவை இதுவரையிலும் 1.64 லட்சம் பேர் ஷேர் செய்துள்ளனர். இதில், எடப்பாடி பழனிசாமி சசிகலா குடும்பத்தினரை விமர்சித்து பேசும் காட்சிகளும், டிடிவி தினகரனுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தது மற்றும் சசிகலா காலில் எடப்பாடி பழனிசாமி விழுந்து வணங்குவது உள்ளிட்ட காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட வீடியோ உண்மையா என சரிபார்ப்பதற்காக, அதன் யூஆர்எல் லிங்கை காபி செய்து, #Invid உதவியுடன் பகுப்பாய்வு செய்து பார்த்தோம். அதில், வீடியோ உண்மைதான் என்ற விவரம் கிடைத்தது.

இதையடுத்து, மீண்டும் அந்த வீடியோவை உற்று கவனித்தபோது, அது ஈழத்தமிழர்களுக்காக, கடந்த 2018, செப்டம்பர் 25ம் தேதியன்று நடைபெற்ற கண்டன பொதுக்கூட்ட நிகழ்வு பற்றியது என தெரியவந்தது. எடப்பாடி பழனிசாமி பேசும் மேடையிலேயே அதுபற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது. ஆதார படம் கீழே தரப்பட்டுள்ளது.

மேலும், இந்த வீடியோவில் தந்தி டிவியின் லோகோவும் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து, தந்தி டிவியின் யூ டியூப் பக்கம் சென்று இப்படி வீடியோ எதுவும் வெளியாகியுள்ளது என தேடிப்பார்த்தோம். நீண்ட தேடலுக்குப் பின், கடந்த செப்டம்பர் 25, 2018 அன்று தமிழகம் முழுவதும் அதிமுக சார்பாக ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டம் நடைபெற்றதன் முழு செய்தி விவரம் கிடைத்தது. அதன் ஒழுபகுதியாக, சேலத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு கண்டன கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில்தான், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோ காட்சியில் உள்ள வார்த்தைகளை எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். ஆதார வீடியோ கீழே தரப்பட்டுள்ளது.
இந்த வீடியோவின் 2.05 நிமிடத்தில், நாம் ஆய்வு செய்யும் வீடியோவில் இருப்பதை அப்படியே எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

எனவே, நாம் ஆய்வும் செய்யும் வீடியோவில் உள்ள காட்சிகள் உண்மைதான் என சந்தேகமின்றி தெளிவாகிறது. இதுதவிர, அந்த வீடியோவில் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வது, சசிகலாவின் காலில் விழுந்து கும்பிடுவது போன்ற காட்சிகளும் உண்மைதான். இவை எல்லாம் ஜெயலலிதா மறைவிற்குப் பின், கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற சம்பவங்களாகும்.
ஜெயலலிதா மறைவிற்குப் பின் அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பதவியேற்றார். எதிர்பாராவிதமாக அவர் சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சிறைக்குச் செல்ல நேரிட்டது. இதனால், வேறு வழியின்றி கட்சிக்கு டிடிவி தினகரனை பாதுகாப்பாகவும், ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமியை முதல்வராகவும் நியமித்துவிட்டு, சசிகலா சிறை சென்றார். அதற்கடுத்த சில மாதங்களிலேயே, எடப்பாடி பழனிசாமி, சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கிவிட்டு, அதிமுக.,வை கைப்பற்றிக் கொண்டதும் தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரிந்த கதைதான். இதில், நாம் ஒன்றும் புதியதாக சொல்வதற்கு இல்லை.
முடிவு:
இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் வீடியோ உண்மையான ஒன்றுதான் என உறுதி செய்யப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி அரசியலில் எப்படி வளர்ந்து வந்தார் என்ற விவரம் தமிழக மக்களுக்கே தெரியும். ஆனால் அவர் சசிகலா குடும்பத்தினரை பார்த்ததே கிடையாது என்று கூறிய காரணத்தால், பழைய சம்பவங்களை ஒன்றாக தொகுத்து, மேற்கண்ட வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதனை பல்வேறு தரப்பினரும் அதிகளவு ஷேர் செய்துள்ளனர் என சந்தேகத்திற்கு இடமின்றி தெரியவருகிறது.

Title:சசிகலா குடும்பத்தினரை பார்த்ததே கிடையாது: எடப்பாடி பழனிசாமி பேச்சு
Fact Check By: Parthiban SResult: True
