விஜய், அஜித் ரசிகர்கள் ஓட்டு தேவையில்லை என்று எச்.ராஜா சொன்னாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

‘’அஜித், விஜய் ரசிகர்கள் ஓட்டு எனக்குத் தேவையில்லை,’’ என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பேசியதாகக் கூறி, ஒரு நியூஸ்கார்டு ஃபேஸ்புக்கில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதுவரை இந்த நியூஸ்கார்டை 7,000க்கும் அதிகமானோர் ஷேர் செய்துள்ளனர். இது உண்மையா என ஆய்வு மேற்கொண்டோம். அதில், கிடைத்த விவரங்களை இங்கே தொகுத்து அளித்துள்ளோம்.

தகவலின் விவரம்:

Archived Link

இந்த பதிவில், நியூஸ்7 தொலைக்காட்சியின் நியூஸ்கார்டு போன்ற ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதில், எச்.ராஜாவின் புகைப்படத்தை வைத்து, ‘’நடிகர்கள் ஜோசப் விஜய், மற்றும் அஜித்குமார் ரசிகர்கள் ஓட்டுப் போட்டு ஜெயிக்கவேண்டிய நிலையில் நான் இல்லை-எச்.ராஜா, சிவகங்கை வேட்பாளர்,’’ என்று எழுதியுள்ளனர். இதைப் பலரும் உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
தமிழக அரசியலில், தினசரி புதுப்புது சர்ச்சைகளை ஏற்படுத்தி வருபவர் எச்.ராஜா. பாஜக.,வின் தேசிய செயலாளராக உள்ள இவர், தனது ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பதிவுகள் மூலமாக மட்டுமின்றி, தனது பேட்டிகள் மூலமாகவும் பரபரப்பை ஏற்படுத்துவது இவரது வழக்கம்.

இந்நிலையில், இவர் தற்போது சிவகங்கை மக்களவை தொகுதியின், பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.  
மேற்கண்ட பதிவில் உள்ளது போல, இவர், அஜித், விஜய் ரசிகர்களின் ஆதரவு தனக்கு  தேவையில்லை என்று சொன்னாரா, எனச் சந்தேகம் எழுந்தது.

இதன்பேரில், கூகுளில் சென்று, இதுதொடர்பாக ஏதேனும் செய்தி அல்லது வீடியோ அல்லது ஏதேனும் பதிவுகள் வெளியாகியுள்ளதா என தேடிப் பார்த்தோம். ஆனால், அப்படி எதுவும் கிடைக்கவில்லை.

இந்த கூகுள் தேடலின்போது, எச்.ராஜா, கடந்த 2017ம் ஆண்டில், விஜய் பற்றி விமர்சனம் செய்திருக்கிறார். அது, மிகப் பழைய செய்தியாகும்.

அதேசமயம், அஜித் பற்றி எச்.ராஜா, எதோ கூறியதாக ஒரு செய்தி கண்ணில் சிக்கியது. ஒன்இந்தியா வெளியிட்டுள்ள அந்த செய்தி, கடந்த ஜனவரி 22, 2019 அன்று வெளியாகியுள்ளது. அதில், நடிகர் அஜித் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்று கூறி வெளியிட்ட பதிவுக்கு, எச்.ராஜா விளக்கம் தெரிவித்துள்ளார்.  அந்த செய்தியின் விவரம் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

நாம், ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பதிவு, மார்ச் 30ம் தேதி வெளியிடப்பட்டுள்ளதால், கடந்த 2 வாரத்தில் எச்.ராஜா இப்படி ஏதேனும் பேசியுள்ளாரா என தேட முடிவு செய்தோம். ஆனால், அப்படியான செய்தி அல்லது வீடியோ எதுவும் கண்ணில் சிக்கவில்லை.

இதையடுத்து, எச்.ராஜாவின், அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில், இப்படி ஏதேனும் சர்ச்சை பதிவுகள் வெளியிடப்பட்டதா என தேடி பார்த்தோம். நீண்ட நேரம் தேடியும், இப்படியான பதிவுகள் எதுவும் சிக்கவில்லை. கிடைத்த செய்திகள், பதிவுகள் எல்லாம் கடந்த 2017ம் ஆண்டில், மெர்சல் படம் ரிலீஸ் செய்யப்பட்டபோது, எச்.ராஜா பேசிய சர்ச்சைக்குரிய விசயங்களாகவே இருந்தன. இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். ஆனால், அப்போதும்கூட, விஜய், அஜித் ரசிகர்களின் ஆதரவு எனக்கு தேவையில்லை என்று எங்கேயும் எச்.ராஜா கூறவில்லை.

இதுதவிர, நாம் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட பதிவில், எச்.ராஜா சிவகங்கை வேட்பாளர் எனக் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், அதில் உள்ள ஃபான்ட்கள் அனைத்தும் நியூஸ்7 டெம்ப்ளேட் சார்ந்தவை கிடையாது. நியூஸ்7 வெளியிடும் உண்மையான நியூஸ்கார்டுகளுக்கும், இதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. ஆதார படங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

(போட்டோஷாப் செய்த நியூஸ்கார்டு)

(நியூஸ்7 தொலைக்காட்சியின் உண்மையான நியூஸ்கார்டு- மாதிரி ஒப்பீடு)

எனவே, இதன்படி பார்க்கும்போது, மேற்கண்ட படம் போட்டோஷாப் செய்த ஒன்று என 99 சதவீதம் உறுதியாகிறது. எதற்கும் FotoForensics உதவியை நாட முடிவு செய்தோம். இதில், குறிப்பிட்ட நியூஸ்கார்டு, சித்தரிக்கப்பட்ட ஒன்றுதான் என சந்தேகமின்றி உறுதி செய்யப்பட்டது.

இறுதியாக, இந்த பதிவை வெளியிட்ட நபரின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் சென்று பார்த்தோம். அவர் வெளியிடும் பதிவுகள் அனைத்தும் பாஜக எதிர்ப்பாகவே உள்ளன. இதன்படி, அவர் தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காக, இத்தகைய பதிவை வெளியிட்டுள்ளதாக, உறுதியாகிறது.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி, நமக்குத் தெரியவந்த உண்மை விவரம்,
1) இது தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காக சித்தரிக்கப்பட்ட பதிவாகும்.
2) எச்.ராஜா அப்படி பேசவில்லை.
3) தேர்தல் காலம் என்பதால், இந்த பதிவு தவறாக இருந்தபோதிலும், வைரலாகப் பரவி வருகிறது.

முடிவு:
நமக்குத் தெரியவந்த ஆதாரங்களின்படி, மேற்கண்ட பதிவு ஒரு சித்தரிக்கப்பட்ட தவறான ஒன்று என உறுதி செய்யப்படுகிறது. எனவே, இத்தகைய தவறான, போலி புகைப்படங்கள், வீடியோ, செய்திகள் போன்றவற்றை நமது வாசகர்கள் யாரும் பகிர வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம். அப்படி நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் அளித்தால், உரிய சட்டப்பூர்வமான நடவடிக்கைக்கு நீங்கள் ஆளாக நேரிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

Avatar

Title:விஜய், அஜித் ரசிகர்கள் ஓட்டு தேவையில்லை என்று எச்.ராஜா சொன்னாரா?

Fact Check By: Parthiban S 

Result: False