பாகிஸ்தான் ஆதரவுடன் வயநாட்டில் போட்டியிடும் ராகுல்காந்தி?

அரசியல் சமூக ஊடகம்

பாகிஸ்தான் கொடியுடன் சென்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி வயநாட்டில் வேட்புமனு தாக்கல் செய்தார் என்று ஒரு பதிவு சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. நாடு முழுவதும் பாகிஸ்தானுக்கு எதிரான மனநிலையில் இருக்கும்போது, ஒரு கட்சியின் தேசிய தலைவர் பாகிஸ்தான் கொடியுடன் செல்வாரா என்ற கேள்வி எழுந்தது. இதைத் தொடர்ந்து இந்த பதிவின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

???? நன்றாக சிந்திக்க வேண்டும் கேரள மாநிலம் இருப்பது இந்தியாவில் கேரளாவில் வயநாடு தொகுதியில் பாகிஸ்தான் கொடியுடன் தொண்டர்கள் மத்தியில் வேட்புமனு தாக்கல் செய்யும் பிரதமர் வேட்பாளர் பாகிஸ்தான் நாட்டிற்கு என நினைக்க தோன்றுகிறது இவர்கள் ஜெயித்தால் இந்தியாவின் நிலை என்னவாகும் மக்களே!!! ???

Archived link

‘’கேரள மாநிலம் வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தி போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் செய்ய செல்லும்போது பாகிஸ்தான் கொடியை ஏந்தியபடி பலரும் வந்தனர்,’’என்று இந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. இதை இந்தியன் இந்தியன் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் ஏப்ரல் 4ம் தேதி பதிவிட்டுள்ளது.

பச்சை நிற பின்னணியில், வெள்ளை நிறத்தில் பிறை மற்றும் நட்சத்திரம் பொறிக்கப்பட்ட கொடியை ஆதாரமாகக் காட்டியுள்ளனர். இதனுடன் பாகிஸ்தான் ஆதரவுடன் போட்டியிடும் ராகுல் காந்தி தேவையா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். பார்க்க பாகிஸ்தான் கொடி போலவே உள்ளதாலும் இந்தியன் என்ற உணர்வைத் தூண்டிவிடுவது போல பதிவு இருப்பதாலும் இதன் நம்பகத்தன்மையை ஆய்வுசெய்யாமல் பலர் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகின்றார். அவர் வேட்புமனு தாக்கல் செய்ய சென்றபோது, ராகுல் காந்திக்கு ஆதரவாகத் திரண்ட கூட்டம்தான் அது. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Archived link

பச்சை நிற கொடி, அதில் பிறை மற்றும் நட்சத்திரம் இருப்பதால் அது பாகிஸ்தான் கொடி என்று நினைத்துப் பலரும் இதை பகிர்ந்துள்ளனர். இந்த பதிவில் இடம்பெற்ற படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜில் பதிவிட்டுத் தேடினோம். அப்போது இந்த படம் தொடர்பாக thequint.com உண்மை கண்டறியும் சோதனை நடத்தியது தெரியவந்தது. மேலும், ட்விட்டரில் பகிரப்பட்ட இந்த படமும் கிடைத்தது.

கேரளாவில் காங்கிரஸ் கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம்பெற்றுள்ளது. அந்தக் கட்சிக்கு கேரள சட்டமன்றத்தில் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சித் தலைவர் வேட்புமனு தாக்கல் செய்தபோது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் தங்கள் கட்சிக் கொடியை ஏந்தி வந்தனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.  இது தொடர்பாக பி.பி.சி தமிழ் வெளியிட்டுள்ள செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Archived link

இதை உறுதி செய்ய, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கொடியைக் கூகுளில் தேடினோம். படத்தில் இருக்கும் கொடியும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கொடியும் ஒன்றாக இருப்பது தெரிந்தது. பாகிஸ்தான் கொடியையும் கூகுளில் இருந்து எடுத்தோம்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொடி முழுவதும் பச்சை நிறத்தில் வெள்ளை நிறத்தில் பிறை மற்றும் நட்சத்திரம் சின்னம் இருந்தது. இதுவே பாகிஸ்தானின் கொடியில், வெள்ளை நிறத்தில் செங்குத்தான பட்டையைத் தொடர்ந்துதான் பச்சை நிறக்கொடியும், அதில் பிறை நட்சத்திரம் சின்னமும் உள்ளது. ஆதார படம் கீழே…

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொடி:

பாகிஸ்தான் தேசிய கொடி:

பல இஸ்லாமிய நாடுகள், அமைப்புகளின் கொடிகளில் பிறை நட்சத்திரம் இடம்பெற்றிருக்கும். அது இஸ்லாமியர்களின் அடையாளங்களுள் ஒன்றாக விளங்குகிறது. பாகிஸ்தான் தொடங்கி, மலேசியா, துருக்கி என பல இஸ்லாமிய நாடுகளின் கொடிகளைப் பார்த்தால் இது புரியும். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Archived link

இந்த பதிவுக்கு கமெண்ட் செய்திருந்த சிலர், இது பாகிஸ்தான் கொடி இல்லை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கொடி என்று சுட்டிக்காட்டியிருந்தனர். ஆனாலும், அதையும் விமர்சித்துள்ளனர். இரண்டும் என்றுதான் என்று பதிலும் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தவறு என்று தெரிந்தும், மற்றவர்கள் சுட்டிக்காட்டியும் கூட இந்த பதிவு ஷேர் செய்யப்பட்டு வந்துள்ளது. ஆதார படம் கீழே…

இதேபோன்று, கர்நாடகாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது வைக்கப்பட்டிருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கொடியை பாகிஸ்தான் கொடி என்று கூறி அதிக அளவில் பகிரப்பட்டது. இது தவறு என்று நம்முடைய இந்தி பிரிவு ஏற்கனவே உண்மை கண்டறியும் சோதனை நடத்தியுள்ளது. அதைப் பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இப்படி, நிறம் மற்றும் சின்ன ஒற்றுமையைப் பயன்படுத்தி காங்கிரஸ் கட்சிக்கு எதிரான மனநிலையை உருவாக்க இந்த பதிவைப் பயன்படுத்தியுள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது.

நாம் நடத்திய ஆய்வின்படி நமக்குத் தெரியவந்த உண்மையின் விவரம்:
1) கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளது. அதன் அடிப்படையில் ராகுல் வேட்பு மனு தாக்கல் செய்தபோது கட்சிக் கொடியுடன் தொண்டர்கள் வந்துள்ளனர்.
2) அவர்கள் கையில் ஏந்தியிருந்தது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொடிதான்.
3) பாகிஸ்தான் கொடி உள்ளிட்ட பல இஸ்லாமிய நாடுகளின் கொடியில் பிறை நட்சத்திரம் சின்னம் உள்ளதால் தவறாக பதிவிடப்பட்டுள்ளது.
4) பல மொழிகளில் இதுபோன்ற வதந்திகள் தொடர்ச்சியாகப் பரப்பப்பட்டு வருகிறது.

முடிவு

உரிய ஆதாரங்களின் அடிப்படையில், பாகிஸ்தான் கொடியுடன் வேட்புமனு தாக்கல் செய்ய சென்ற ராகுல் என்ற இந்த பதிவு சித்தரிக்கப்பட்டது; தவறானது என உறுதி செய்யப்படுகிறது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ என எதையும் உறுதிப்படுத்தாமல், மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  

Avatar

Title:பாகிஸ்தான் ஆதரவுடன் வயநாட்டில் போட்டியிடும் ராகுல்காந்தி?

Fact Check By: Praveen Kumar 

Result: False

 • 4
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  4
  Shares