
‘’கோயில்களில் ஆடு, கோழி பலியிட தடை விதிக்கப்படும் என்று பாஜக வாக்குறுதி,’’ எனும் பெயரில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

குறிப்பிட்ட தகவலை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார்.
இதன்பேரில் நாமும் ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, பலரும் இதனை உண்மை என்று நம்பி ஷேர் செய்து வருவதைக் கண்டோம்.

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட செய்தி உண்மையா என்ற சந்தேகத்தில் நாம் தகவல் தேட தொடங்கினோம். முதலில், பாஜக.,வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில நிர்வாகியாக உள்ள சி.டி.ஆர்.நிர்மல் குமாரை கேட்டபோது, இது தவறான தகவல் என்றும், இதுபற்றி ட்விட்டரில் கூட விளக்கம் அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதையடுத்து, கூடுதல் ஆதாரத்திற்காக, பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் அஸ்வாத்தமன் அவர்களை தொடர்பு கொண்டு பேசினோம். தகவலை பார்வையிட்ட அவர், ‘’பாஜக தேர்தல் அறிக்கை 2021 தமிழ்நாட்டிற்காக, மார்ச் 22 அன்று நிதின் கட்கரி தலைமையில் வெளியிடப்பட்டது. இதில், ஏராளமான நல்ல விசயங்கள் இடம்பெற்றுள்ளன. அதற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. இதனை பொறுக்காமல், சிலர் வேண்டுமென்றே போலிச் செய்திகளை தயாரித்து, சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். உண்மையில், நாங்கள் அறநிலையத்துறை ஆதிக்கத்தை குறைக்கவே திட்டமிட்டிருக்கிறோம். மற்றபடி கோயில்களில் இதுபோல, ஆடு, கோழி பலியிட தடை விதிப்பதாக நாங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை. அப்படியான திட்டமும் நாங்கள் கொண்டிருக்கவில்லை. இந்த முயற்சி ஏற்கனவே அதிமுக ஆட்சிக் காலத்தில் (ஜெயலலிதா) முயற்சித்து, கைவிடப்பட்ட ஒன்று என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இது முற்றிலும் அடிப்படை ஆதாரமற்ற தகவல். அத்துடன், பாஜக தமிழ்நாடு பெயரை மாற்றுவதாகவும் கூறி சிலர் தகவல் பரப்புவதையும் இங்கே மேற்கோள் காட்ட விரும்புகிறேன்,’’ என்று குறிப்பிட்டார்.
எனவே, பாஜக தேர்தல் அறிக்கையில் கூறாத விசயத்தை எடுத்து, இப்படியான வதந்தி பரப்பி வருகிறார்கள் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:கோயில்களில் ஆடு, கோழி பலியிடுவதற்கு தடையா?- பாஜக கூறியதாகப் பரவும் வதந்தி
Fact Check By: Pankaj IyerResult: False
