
‘’குஜராத் கலவரத்திற்கு காரணமானவன் பிரதமர்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம்.
தகவலின் விவரம்:

Troll Mafia என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், மோடி, அமித் ஷா, பிரதாப் சாரங்கி, சாத்வி பிரக்யா சிங் தாகூர் உள்ளிட்டோர் புகைப்படங்களை பகிர்ந்து, அதன் மேலே, ‘’குஜராத் கலவரத்திற்கு காரணமானவன் பிரதமர், நீதிபதியை கொன்றவன் உள்துறை அமைச்சர், பாதிரியாரை குழந்தைகளோடு எரித்து கொன்றவன் மத்திய அமைச்சர், மாலேகான் குண்டுவெடிப்பு தீவிரவாதி நாடாளுமன்ற உறுப்பினர்,’’ என எழுதியுள்ளனர்.
உண்மை அறிவோம்:
இதில், குஜராத் கலவரத்திற்குக் காரணமானவன் பிரதமர் என்பது தவறான தகவலாகும். காரணம், அந்த விசயத்தில், அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடி மீது பலர் புகார் கூறினாலும், அதுபற்றிய குற்றச்சாட்டு இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இதுபற்றி சிறப்பு புலனாய்வுக்குழு அளித்த அறிக்கையை ஏற்று, மோடிக்கு குஜராத் கலவரத்தில் தொடர்பு உள்ளதாகக் கூறப்படும் தகவலை அகமதாபாத் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதுபற்றிய பிபிசி செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

குஜராத் கலவரம் பற்றியும், அதன் பின்னணி பற்றியும் விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யவும். இது மட்டுமின்றி, நீதிபதியை கொன்ற அமித் ஷா, உள்துறை அமைச்சர் என்ற பதிவு தவறாக உள்ளது. அமித் ஷா மீதான வழக்கு ஒன்றை விசாரித்து வந்த நீதிபதி பிஎச் லோஹியா 2014ம் ஆண்டில், திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். எனினும், அவரை அமித் ஷா கொன்றிருக்கலாம் என, பலரும் சந்தேகம் எழுப்பினர். அதேசமயம், இதுதொடர்பாக விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. அடிப்படை ஆதாரமின்றி இந்த குற்றச்சாட்டு உள்ளதால், அதை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு, அமித் ஷாவை குற்றவாளியாக விசாரிக்க முடியாது என்றும், உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இதுபற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதேபோல, பிரதாப் சாரங்கியை, ஆஸ்திரேலிய பாதிரியார் கொலை வழக்கில் குற்றம் சாட்டுவதும் தவறான ஒன்றாகும். இதில், அவருக்கு தொடர்பில்லை என்று ஒடிசா போலீசாரே விளக்கம் அளித்துள்ளனர். அதேசமயம், பாதிரியார் கிரகாம் ஸ்டெய்ன்ஸ் எரித்துக் கொல்லப்பட்டபோது, ஒடிசா மாநில பஜ்ரங் தள தலைவராக பிரதாப் சாரங்கிதான் இருந்தார். பஜ்ரங் தள தொண்டர்கள்தான், அந்த பாதிரியாரை எரித்துக் கொன்றனர். எனவேதான், பிரதாப் சாரங்கி மீது குற்றம் சாட்டப்படுகிறது. இதுபற்றி நாமும் ஏற்கனவே உண்மை கண்டறியும் சோதனை நடத்தியுள்ளோம். பிரதாப் சாரங்கி மீதான குற்றச்சாட்டு, பாதி உண்மை, பாதி மர்மமான ஒன்றாகவே உள்ளது. எனவே, அவரை பற்றி இந்த பதிவில் கூறப்படும் தகவலும் நம்பகமானது அல்ல. இதுபற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இதுதவிர, மாலேகான் குண்டுவெடிப்பு தீவிரவாதி என்று கூறி, பிரக்யா சிங் தாகூர் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்கள். இதுவும் முழு உண்மையல்ல. மாலேகான் குண்டுவெடிப்பில் அவருக்கு தொடர்புள்ளதாகக் கூறி சிறைத்தண்டனையும் அனுபவித்துள்ளார். தற்போது பாஜக சார்பாக, தேர்தலில் போட்டியிட்டு எம்பி ஆகியுள்ளார்.

தற்போதும்கூட பிரக்யா சிங் மீதான மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதுபற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும். அவர் முற்றிலும் குற்றவாளி என இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
இதுவரை நமக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் தெரியவந்த உண்மையின் விவரம்,
1) குஜராத் கலவரத்தில் மோடி பற்றிய குற்றச்சாட்டு இதுவரை அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.
2) அமித் ஷா நீதிபதி யாரையும் கொல்லவில்லை. அவர் மீது சந்தேகம்தான் தெரிவிக்கப்பட்டது. ஆனால், உச்சநீதிமன்றம் இந்த குற்றச்சாட்டு ஏற்புடையதல்ல என்று ஏற்கனவே மறுத்துவிட்டது.
3) ஒடிசாவில் பாதிரியார் குடும்பத்தினரை எரித்துக் கொன்றதில் பிரதாப் சந்திரா சாரங்கி நேரடியாக ஈடுபடவில்லை. அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை.
4) மாலேகான் குண்டுவெடிப்பில் பிரக்யா சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. அதன் முடிவில்தான் உண்மை தெரியவரும்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவில் பாதி உண்மை, பாதி நிரூபிக்கப்படாத தகவல் உள்ளதாக முடிவு செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில் நம்பகத்தன்மை இல்லை என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய நம்பகத்தன்மை இல்லாத செய்தி, புகைப்பட மற்றும் வீடியோ பதிவுகளை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:குஜராத் கலவரத்திற்கு காரணமானவர் பிரதமர்: ஃபேஸ்புக் பதிவால் குழப்பம்
Fact Check By: Parthiban SResult: Mixture
